ஆசியப் போட்டி 2018 : தமிழகத்தின்பெருமையை நிலைநாட்டப் போகும் வீரர், வீராங்கனைகள் 

ஜகார்த்தா ஆசியப் போட்டியில் பல்வேறு விளையாட்டுகளில் தமிழகத்தின் பெருமையை நிலைநாட்டும் முனைப்பில் வீரர்கள், வீராங்கனைகள்
ஆசியப் போட்டி 2018 : தமிழகத்தின்பெருமையை நிலைநாட்டப் போகும் வீரர், வீராங்கனைகள் 

ஜகார்த்தா ஆசியப் போட்டியில் பல்வேறு விளையாட்டுகளில் தமிழகத்தின் பெருமையை நிலைநாட்டும் முனைப்பில் வீரர்கள், வீராங்கனைகள் உள்ளனர்.18-ஆவது ஆசியப் போட்டி ஜகார்த்தா, பாலேம்பங்கில் சனிக்கிழமை தொடங்கி வரும் செப்டம்பர் 2-ஆம் தேதி வரை நடக்கிறது. இந்தியா சார்பில் 524 பேர் கொண்ட அணி 36 விளையாட்டுகளில் பங்கேற்கிறது. இவர்களில் 
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். பல்வேறு சர்வதேச, தேசிய போட்டிகளில் முத்திரை பதித்த சிறந்த வீரர்கள், வீராங்கனைகளைக் கொண்டதாக தமிழகம் திகழந்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் ஆசியப் போட்டிக்கான இந்திய அணிகளில் இடம் பெற்றுள்ளனர்.

பளு தூக்குதல்
பளு தூக்குதலில் பதக்க நம்பிக்கை தரும் நட்சத்திர வீரராக சதீஷ் சிவலிங்கம் உள்ளார். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அவர் ஏற்கெனவே 2014, 2018 காமன்வெல்த் போட்டிகளில் 77 கிலோ பிரிவில் தங்கம் வென்றார். அர்ஜுனா விருது பெற்றுள்ள இவர் ஆசிய போட்டியில் பதக்கம் வெல்லும் முனைப்பில் உள்ளார்.

துப்பாக்கி சுடுதல்
துப்பாக்கி சுடுதலில் கோவையைச் சேர்ந்த என்.காயத்ரி களமிறங்குகிறார். இவர் ஏற்கெனவே உலக ஜூனியர் துப்பாக்கி சுடும் போட்டியில் 50 மீ ரைபிள் தனி நபர் வெண்கலம், அணிகள் பிரிவில் தங்கம் வென்றுள்ளார். ஆசியப் போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்கிறார்.

டென்னிஸ்
அதே நேரத்தில் டென்னிஸ் விளையாட்டில் ராம்குமார் ராமநாதன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் விளையாட உள்ளார். தீவிரமாக முயற்சிக்கும் பட்சத்தில் அவர் பதக்கம் வெல்லலாம். ஏடிபி தரவரிசையில் முதல் 115 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளார். கடந்த மாதம் நியுபோர்ட்டில் நடந்த ஏடிபி உலக டூர் போட்டியில் முதன்முறையாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

ஸ்குவாஷ்
மகளிர் ஸ்குவாஷ் அணியும் மிகுந்த நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது. குறிப்பாக ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிக்கல், சுகன்யா குருவில்லா ஆகியோர் பதக்கம் வெல்லும் முனைப்பில் உள்ளனர். தீபிகா பள்ளிக்கல் ஏற்கெனவே காமன்வெல்த் போட்டிகளில் தங்கம், வெள்ளி வென்றுள்ளார். கடந்த 2014 ஆசியப் போட்டியில் வெள்ளி, வெண்கலம் வென்றார்.
ஜோஷ்னா சின்னப்பா காமன்வெல்த் போட்டிகளில் தங்கம், வெள்ளி வென்றுள்ளார்.
செளரவ் கோஷல் ஆடவர் பிரிவில் காமன்வெல்த் போட்டியில் வெள்ளியும், வெவ்வேறு ஆசியப் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை 
வென்றார். 

டேபிள் டென்னிஸ்
டேபிள் டென்னிஸில் மூத்த வீரர் சரத் கமல் காமன்வெல்த் போட்டிகளில் பலமுறை தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்.
சத்யன் பல்வேறு சர்வதேச போட்டிகளில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். அந்தோணி அமல்ராஜும் காமன்வெல்த் போட்டியில் தங்கம், வெள்ளி வென்றுள்ளார். மூவரும் முயற்சித்தால் 
ஆசியப் போட்டியிலும் சாதிக்கலாம்.

வாலிபால்
29 வயது இளைஞரான உக்கர பாண்டியன் இந்திய வாலிபால் அணியில் செட்டராக உள்ளார். படகு பந்தயத்தில் எம்.ரோஹித்தும் பங்கேற்கின்றனர். ஆசியப் போட்டியில் மேற்கண்ட வீரர், வீராங்கனைகள் பதக்கம் வென்று தமிழகத்தின் பெருமையை நிலைநாட்டுவர் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தடகளம்


தடகளத்தில் 400 மீ, தொடர் ஓட்டத்தில் ராஜிவ் ஆரோக்கியா ஏற்கெனவே இன்சியான் போட்டியில் வெண்கலமும், ஆசிய சாம்பியன் போட்டியில் தங்கம், வெள்ளியும், வென்றுள்ளார். 
400 தடை தாண்டும் பிரிவில் தருண் அய்யயாசாமி, சந்தோஷ்குமார் ஆகியோர் உள்ளனர். 5000 மற்றும் 10000 மீ ஓட்டத்தில் ஜி.லட்சுமணன் பல்வேறு ஆசிய சாம்பியன் போட்டிகளில் தங்கம், வெள்ளி வென்றுள்ளார். மகளிர் பிரிவில் எல்.சூர்யா நாட்டின் பெருமையை நிலைநாட்ட உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com