நான் கபில் தேவ் அல்ல, பாண்டியா!

கபில்தேவுடன் ஒப்பீடு செய்வதில் நான் சோர்வடைந்துள்ளேன். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்... 
நான் கபில் தேவ் அல்ல, பாண்டியா!

டிரெண்ட்பிரிட்ஜில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்டின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி சரிந்தது. ஹார்திக் பாண்டியா அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டை வீழ்த்தினார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 161 ரன்களை மட்டுமே எடுத்தது. முன்னதாக இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 329 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்பிறகு தன்னுடைய 2-வது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி, 31 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 124 ரன்களை எடுத்திருந்தது. புஜாரா 33, கோலி 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி 292 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

தன்னுடைய பந்துவீச்சு குறித்து பாண்டியா கூறியதாவது:

கபில்தேவுடன் ஒப்பீடு செய்வதில் நான் சோர்வடைந்துள்ளேன். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இந்த ஒப்பீட்டில் உள்ள பிரச்னை என்னவென்றால் நான் சரியாக விளையாடவில்லையென்றால் உடனே இவர் கபில்தேவ் போல அல்ல என்று குற்றம் சுமத்திவிடுகிறார்கள். கபில் தேவ் ஆக நான் விரும்பவில்லை. நான் ஹார்திக் பாண்டியாவாக மட்டுமே இருக்கிறேன். இதுவரை 40 ஒருநாள் ஆட்டங்களிலும் 10 டெஸ்டுகளிலும் விளையாடியது, ஹார்திக் பாண்டியாவாக. கபில் தேவாக அல்ல. அவர்களுடைய காலத்தில் அவர் ஜாம்பவானாக இருந்தார். என்னை யாருடனும் ஒப்பிடவேண்டாம். அப்படிச் செய்தால் நான் மகிழ்வேன். 

விமரிசகர்கள் பற்றி எனக்குக் கவலை இல்லை. நான் என்ன செய்கிறேன் என எனக்குத் தெரியும். நான் விமரிசகர்களுக்காக விளையாடவில்லை. அவர்களின் கருத்துகளுக்காக பணம் பெறுகிறார்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. என் அணியினர் எனக்கு ஆதரவாக உள்ளார்கள். அதுதான் எனக்கு முக்கியம். 

சதமடிப்பதை விடவும் 5 விக்கெட்டுகள் எடுப்பதே எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. என் வாழ்வில் இரண்டாவது முறையாக 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளேன். முக்கியமான இடத்தில் அதை நிகழ்த்திருப்பதில் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com