அடிலெய்ட் டெஸ்ட்: இந்தியா வெற்றி 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது

அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா.
ஆஸி.யை வீழ்த்திய களிப்பில் இந்திய வீரர்கள்..
ஆஸி.யை வீழ்த்திய களிப்பில் இந்திய வீரர்கள்..


* 10 ஆண்டுகளில் முதல் வெற்றி
* ஆட்ட நாயகன் புஜாரா


அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா. இதன் மூலம் 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் அடிலெய்டில் கடந்த 6-ஆம் தேதி தொடங்கியது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 250 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. புஜாரா அபாரமாக ஆடி 123 ரன்களை குவித்தார். ஆஸி. அணி முதல் இன்னிங்ஸில் 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டிராவிஸ் ஹெட் 72 ரன்களை எடுத்தார்.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்தியா 307 ரன்களை எடுத்திருந்தது. 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஆட்டநேர முடிவில் 104/4 ரன்களை எடுத்திருந்தது.
இதன் தொடர்ச்சியாக கடைசி நாளான திங்கள்கிழமை ஷேன் மார்ஷ்-டிராவிஸ் ஹெட் ஆகியோர் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். 14 ரன்கள் எடுத்த நிலையில் டிராவிஸ் ஹெட் , இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 
மார்ஷ்-டிம் பெயின் ரன் குவிப்பு: 31 ரன்களுடன் ஆடத் தொடங்கிய ஷேன் மார்ஷ் தனது 10-ஆவது டெஸ்ட் அரை சதத்தை அடித்தார். 5 பவுண்டியுடன் 60 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கேப்டன் டிம் பெய்ன் 41ரன்களுடன் பும்ரா பந்துவீச்சில் பந்த்திடம் கேட்ச் கொடுத்தார். பௌலர்களான பேட் கம்மின்ஸ், மிச்செல் ஸ்டார்க் ஆகியோர் தோல்வியை தவிர்ப்பதற்காக போராடினர்.ஆனால் இருவரும் தலா 28 ரன்கள் எடுத்த நிலையில் முறையே பும்ரா, முகமது சமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். 8-ஆவது விக்கெட்டுக்கு இருவரும் 41 ரன்களை சேர்த்தனர்.
நாதன் லயன் 38: ஆஸி. சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன் 9-ஆவது விக்கெட்டுக்கு நின்று ஆடி, இந்திய பெளலர்களின் பொறுமையை சோதித்தார். 3 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்து அவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுமுனையில் கடைசி விக்கெட்டாக ஜோஷ் ஹேஸல்வுட் 13 ரன்களுக்கு அஸ்வின் பந்துவீச்சில் வெளியேறினார். இருவரும் சேர்ந்து கடைசி விக்கெட்டுக்கு 32 ரன்களை சேர்த்தனர்.
291 ஆல் அவுட்: இறுதியில் 119.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்த ஆஸ்திரேலிய அணி 291 ரன்களை மட்டுமே எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஆட்ட நாயகன் புஜாரா
முதல் இன்னிங்ஸில் 246 பந்துகளில் 123 ரன்களை குவித்த புஜாரா, இரண்டாவது இன்னிங்ஸிலும் 204 பந்துகளில் 71 ரன்களை சேர்த்து அணியின் ஸ்கோர் உயர வழிவகை செய்தார். இதன் மூலம் ஆட்ட நாயகன் விருதையும் அவர் தட்டிச் சென்றார்.
வெளிநாடுகளில் நிகழாண்டு 2018-இல் இந்திய அணி வெளிநாடுகளில் பெற்ற டெஸ்ட் வெற்றிகளில் 50-க்கு மேற்பட்ட ரன்களை குவித்தவர் என்ற பெருமையை புஜாரா பெற்றுள்ளார். ஜோஹன்னஸ்ர்க்கில் 50, டிரென்ட் பிரிட்ஜில் 72, அடிலெய்டில் 123, 71 ரன்களை எடுத்தார்.

இந்தியா அபார பந்துவீச்சு
முதல் இன்னிங்ஸை போலவே இந்திய பந்துவீச்சாளர்கள் சீரான பந்துவீச்சை இரண்டாவது இன்னிங்ஸிலும் தொடர்ந்தனர். பும்ரா 3-68, அஸ்வின் 3-92, சமி 3-65, இஷாந்த் 1-48 ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வெற்றிக்கு வழிவகுத்தனர்.

2 முறை தப்பிய பேட் கம்மின்ஸ்
நிலைத்து ஆடிக் கொண்டிருந்த பேட் கம்மின்ஸ் தொடர்ந்து 4 பந்துகளில் 2 முறை ஆட்டமிழக்க வேண்டியது. ஆனால் மேல்முறையீட்டில் தொழில்நுட்ப காரணங்களில் அவுட்டில்லை என அறிவிக்கப்பட்டு தப்பினார்.

புஜாராவை அவுட்டாக்க முடியவில்லை
எங்கள் அணியின் லோயர் ஆர்டர் வீரர்கள் சிறப்பாக போராடினர். இந்த வெற்றி இந்தியாவுக்கு உரியது. நாங்கள் வெற்றி பெற முடியும் என நினைத்தோம். ஆனால் புஜாரா ஆட்டம் சிறப்பாக இருந்தது. அவரை அவுட்டாக்குவதே கடினமாக இருந்தது.
-டிம் பெய்ன் 

உலக சாதனையை சமன் செய்த ரிஷப் பந்த் 
இந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் உலக சாதனையை சமன் செய்தார். ஓரே டெஸ்ட் ஆட்டத்தில் அதிக கேட்ச்சுகள் பிடித்த சாதனையை தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் (2013 பாகிஸ்தானுக்கு எதிராக ஜோஹன்னஸ்பர்க் டெஸ்ட்), இங்கிலாந்து ஜேக் ரஸ்ஸல் (2013, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்) 11 கேட்சுகளை பிடித்து சாதனை செய்திருந்தனர்.
ரிஷப் பந்த் அடிலெய்ட் டெஸ்டில் இறுதி நாளான திங்கள்கிழமை மிச்செல் ஸ்டார்கை கேட்சு பிடித்து ஆட்டமிழக்கச் செய்தார். இதன் மூலம் ஓரே டெஸ்டில் 11 கேட்சுகள் பிடித்த சாதனையை பந்த் சமன் செய்தார்.
ஓரே டெஸ்டில் 35 கேட்சுகள்: மேலும் ஓரே டெஸ்டில் 35 வீரர்கள் கேட்ச் மூலம் அவுட்டானது புதிய சாதனையாகும். 2018 கேப்டவுனில் தென்னாப்பிரிக்கா-ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற டெஸ்ட் ஆட்டத்தில் 34 கேட்சுகள் பிடிக்கப்பட்டதே சாதனையாக இருந்தது. கடந்த 1992-இல் பெர்த்தில் இந்திய-ஆஸி. டெஸ்டில் 33 கேட்சுகள் பிடிக்கப்பட்டிருந்தன.

10 ஆண்டுகளில் முதல் வெற்றி
கடந்த 10 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி பெற்ற முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும். கடைசியாக 2008-இல் பெர்த் டெஸ்டில் இந்தியா வென்றிருந்தது. மேலும் அடிலெய்டில் 2003-இக்கு பின்னர் இந்தியா இங்கு பெறும் முதல் வெற்றியாகும்.

பெளலர்கள் செயல்பாடு பாராட்டுக்குரியது
மிகவும் நெருக்கமான தருணத்தில் நாங்கள் வென்றுள்ளோம். இதுபோன்ற நேரங்களில் அமைதியைக் கடைபிடிக்க வேண்டும். ஆஸி. அணி கடுமையாக போராடினர். கடைசி விக்கெட் வரை அவர்கள் தோல்வியை தவிர்க்க முயன்றனர். 4 பெளலர்கள் இணைந்து 20 விக்கெட்டுக்களை கைப்பற்றியது பெரிய சாதனை, அவர்களின் செயல்பாடு பாராட்டுக்குரியது. புஜாரா விலை மதிப்பற்றவர்
- விராட் கோலி

தவறுகளில் இருந்து பாடம் கற்றுள்ளோம்
இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மிகவும் கடினமான டெஸ்ட் ஆட்டம். நமது வீரர்கள் ஒழுங்கை கடைபிடித்து ஆடினர். இங்கிலாந்தில் 31 ரன்கள், தென்னாப்பிரிக்காவில் 60 ரன்கள் என குறைந்த வித்தியாசத்தில் தோற்றோம். இந்த வெற்றி சிறப்பானது. சில தவறான ஷாட்களை ஆடினர். மேலும் தவறுகளில் இருந்து பாடம் கற்றுள்ளோம். 
பெளலர்கள் ஒரே குழுவாக செயல்பட்டு சாதித்துள்ளனர்.
-ரவி சாஸ்திரி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com