ஹாக்கி உலகக் கோப்பையில் தோல்வி: நடுவர்கள் மீது இந்தியப் பயிற்சியாளர் காட்டம்!

ஒரு நபரின் தவறான முடிவால் கடந்த ஆறு மாதங்களாக உழைத்தது எல்லாம் வீணாகிவிட்டன...
ஹாக்கி உலகக் கோப்பையில் தோல்வி: நடுவர்கள் மீது இந்தியப் பயிற்சியாளர் காட்டம்!

கடந்த நவ. 28-ம் தேதி புவனேசுவரத்தில் தொடங்கிய 14-ஆவது உலகக் கோப்பை போட்டிகள் தற்போது முக்கியமான அரையிறுதி கட்டத்தை எட்டியுள்ளன. புதன்கிழமை நடைபெற்ற காலிறுதி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் வென்று அரையிறுதிக்கு முன்னேறின. நேற்று, வலுவான ஜெர்மனியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பெல்ஜியம். அதன்பிறகு, இந்திய-நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாம் காலிறுதி ஆட்டம் நடைபெற்றது. போட்டி மனப்பான்மையுடன் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நெதர்லாந்து அணி, 2-1 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. இதனால் இந்தியாவின் சாம்பியன் கனவு தகர்ந்தது. 15,000 பேர் அமரக்கூடிய கலிங்கா மைதானம் முழுவதும் இந்திய பார்வையாளர்களால் நிரம்பியிருந்தது. இந்தியா வென்று அரையிறுதிக்கு முன்னேறும் என நம்பிக்கையுடன் காத்திருந்த அவர்கள் இந்தியா தோல்வியடைந்ததால் சோகத்துடன் வெளியேறினர்.

இந்நிலையில் நடுவர்கள் பாரபட்சமாக நடந்துகொண்டதால் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது என இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் ஹரேந்திரா சிங் கூறியுள்ளார். அவர் கூறியதாவது:

11 பேர் கொண்ட என்னுடைய அணியால் எதிரணியில் உள்ள 11 பேருக்கு எதிராகத்தான் விளையாடமுடியும். 13 பேருக்கு எதிராக அல்ல. ஆசியப் போட்டியிலும் இதுபோல நடந்தது. அப்போது நான் அமைதி காத்தேன். மலேசியாவுக்கு எதிரான ஷுட் அவுட்டின் போது தடுத்ததற்காக இந்திய கேப்டனுக்கு மஞ்சள் அட்டை கொடுக்கப்பட்டது. ஆனால் அதற்காக அது வழங்கப்படவில்லை எனத் தெரிந்தது. சர்வதேச ஹாக்கி சங்கத்தில் நடுவர்களின் தவறுகள் திருத்தப்படுவதில்லை. அது சரிசெய்யாதவரை இதுபோன்ற முடிவுகளையே நாம் காணவேண்டியிருக்கும். 

எதிரணி வீரைத் தள்ளியதற்காக இந்திய வீரர் அமித் ரொஹிதாஸுக்கு கார்டு வழங்கப்பட்டது. ஆனால் அதுபோல அவர்கள் மன்ப்ரீத் சிங்குக்குச் செய்தபோது நெதர்லாந்து பின்கள வீரருக்குத் தண்டனை வழங்கப்படவில்லை. இரு பெரிய போட்டிகளில் நடுவர்களின் தவறான முடிவுகளால் தோற்றுள்ளோம். உலகக் கோப்பைக்காக நிறைய பயிற்சிகள் எடுத்துள்ளோம். ஆனால் ஒரு நபரின் தவறான முடிவால் கடந்த ஆறு மாதங்களாக உழைத்தது எல்லாம் வீணாகிவிட்டன என்று நடுவர்களின் முடிவுகளை விமரிசனம் செய்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com