தடுமாற ஆரம்பிக்கும் ஆஸி. பேட்ஸ்மேன்கள்: வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமா இந்திய அணி?

முதல் நாள் தேநீர் இடைவேளையின்போது 53 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்துள்ளது...
தடுமாற ஆரம்பிக்கும் ஆஸி. பேட்ஸ்மேன்கள்: வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமா இந்திய அணி?

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் தேநீர் இடைவேளையின்போது 53 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்துள்ளது.

கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளது. டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிவடைந்தது.

அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது. இதன் தொடர்ச்சியாக பெர்த்தில் 2-வது டெஸ்ட் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் விஹாரியும் உமேஷ் யாதவும் இடம்பிடித்துள்ளார்கள். முதல் டெஸ்டில் இடம்பெற்ற அதே வீரர்களே ஆஸி. அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.

உமேஷ் யாதவுக்குப் பதிலாக ஜடேஜாவையோ அல்லது புவனேஸ்வர் குமாரையோ கோலி தேர்வு செய்திருக்கலாம் என்று சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்துகள் தெரிவித்துள்ளார்கள். தவறான அணித் தேர்வால் இந்திய அணி 2-வது டெஸ்டில் தோல்வியடையுமோ என்றும் பலர் அச்சம் தெரிவித்துள்ளார்கள்.

முதல் நாளின் முதல் பகுதியில் வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமாக இருந்தாலும் ஆஸ்திரேலிய தொடக்க வீரர்களான ஆரோன் ஃபிஞ்சும் ஹாரிஸும் நன்கு விளையாடினார்கள். முதல் 10 ஓவர்களில் 45 ரன்கள் எடுத்தார்கள். எனினும் இதன்பிறகு இந்திய அணியின் பந்துவீச்சு பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுத்ததால் நிதானப் போக்கைக் கடைப்பிடித்தார்கள்.

உணவு இடைவேளையின்போது ஆஸி. அணி 26 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்தது. ஹாரிஸ் 36, ஃபிஞ்ச் 28 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

உணவு இடைவேளைக்குப் பிறகு இருவரும் நன்கு விளையாடினார்கள். 90 பந்துகளில் ஹாரிஸும் 103 பந்துகளில் ஃபிஞ்சும் அரை சதத்தைக் கடந்தார்கள். 33.3 ஓவரின்போது இந்தக் கூட்டணி 100 ரன்களை அடைந்தது. பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளம் என்பதால் இந்தத் தருணத்தில் இந்திய ரசிகர்கள் மிகவும் கவலையடைந்தார்கள்.

அரை சதமெடுத்த ஃபிஞ்ச் கூடுதலாக ஒரு ரன்னும் சேர்க்காமல் பூம்ராவின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார். 10 ஓவர்களுக்குப் பிறகு இந்திய அணி நன்கு பந்துவீசியதால் அதன் அழுத்தத்தை உணர ஆரம்பித்தார்கள் ஆஸி. வீரர்கள். அடுத்து வந்த கவாஜா மிகவும் தடுமாறினார். 38 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து அவர் வெளியேறினார். ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடி வந்த ஹாரிஸ், விஹாரி வீசிய பந்து எதிர்பாராதவிதமாக உயரமாக எழுந்ததால் தடுமாறி ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து 70 ரன்களில் ஆட்டமிழந்தார். 

முதல்நாள் தேநீர் இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி 53 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள்  எடுத்துள்ளது. ஷான் மார்ஷ் 8, ஹேண்ட்ஸ்காம்ப் 4 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இந்தியத் தரப்பில் பூம்ரா, உமேஷ் யாதவ், விஹாரி ஆகியோர் தலா 1 விக்கெட்டை எடுத்துள்ளார்கள். முதல் விக்கெட்டுக்குச் சிறப்பாக விளையாடிய ஆஸி. அணி அதன்பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதைப் பயன்படுத்திக்கொண்டு இந்திய அணி 3 விக்கெட்டுகளை எடுத்து நெருக்கடி அளித்துவருகிறது. தேநீர் இடைவேளைக்குப் பிறகு எந்த அணி ஆதிக்கம் செலுத்தும் என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com