ஆஸி.-இந்தியா இடையே 2-ஆவது டெஸ்ட் பெர்த்தில் இன்று தொடக்கம்

முதல் டெஸ்டில் ஆஸி. அணி தோல்வியுற்ற நிலையில், இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் பெர்த்தில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
ஆஸி.-இந்தியா இடையே 2-ஆவது டெஸ்ட் பெர்த்தில் இன்று தொடக்கம்

முதல் டெஸ்டில் ஆஸி. அணி தோல்வியுற்ற நிலையில், இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் பெர்த்தில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. வெற்றியை தக்க வைக்கும் முனைப்பில் உள்ளது இந்திய அணி.

4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த 6-ஆம் தேதி அடிலெய்டில் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியைப் பெற்றது. 

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை முதன்முறையாக கைப்பற்ற வேண்டும் என மும்முரமாக இந்திய அணி உள்ளது. பெர்த்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் 18-ஆம் úதி வரை நடக்கிறது.

பெர்த் மைதான பிட்ச் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிக வேகம், பெளன்ஸூக்கு உதவும் என மைதான பராமரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் இந்திய அணியில் வலுவான வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார், பும்ரா, உமேஷ் யாதவ் ஆகியோர் பெர்த்தில் ஆடுகளத்தின் தன்மையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரவீந்திர ஜடேஜா அணியில் இடம் பெறும் பட்சத்தில் 4 வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு சுழற்பந்து வீச்சாளரோடு இந்தியா பங்கேற்கும். 

பிட்சில் பெளன்ஸ் ஆகும் தன்மை, சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் சிறிது சாதகமாக அமையும். இந்திய அணியில் பேட்டிங் வரிசையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

ஆஸி. அணியில் பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது. குறிப்பாக தொடக்க வீரர் ஆரோன் பின்ச் சரிவர ஆடாத நிலையில் மிடில் ஆர்டரில் இறக்கப்படலாம். உஸ்மான் கவாஜா-ஷான் மார்ஷ் ஆகியோர் தொடக்க இணையாக இறங்கலாம்.

ஆல்ரவுண்டர் மிச்செல் மார்ஷ் பெர்த் டெஸ்ட் அணியில் இடம் பெறலாம். விரலில் காயமுற்ற கேப்டன் டிம் பெய்ன், குணமடைந்துள்ள நிலையில் தனது பங்கேற்பை உறுதி செய்துள்ளார்.

ஆஸி. அணியில் பந்துவீச்சாளர்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பீட்டர் சிடில் இடம் பெற வாய்ப்பில்லை எனத்தெரிகிறது.


வெப்பம் கவலை தரும்

பிட்ச் பசுமையாக இருந்தாலும், இங்கு நிலவும் கடும் வெப்பம் கவலை தருவதாக உள்ளது. இதனால் பிட்சில் விரிசல்கள் ஏற்படும். இந்திய அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவர்களது பலம், பலவீனத்தை அறிந்துள்ளோம். அவரவர் ஆட்டத்திறனுக்கு ஏற்ப முழுமையாக ஆடுமாறு வீரர்களிடம் கூறியுள்ளோம் என்றார் டிம் பெய்ன் .


பசுமையான பிட்ச்சில் ஆட தயக்கமில்லை

பெர்த்தில் உள்ள பசுமை நிறைந்த பிட்ச்சில் ஆடுவதற்கு தயக்கத்தை விட விருப்பமே அதிகமாக உள்ளது என கேப்டன் கோலி கூறியுள்ளார்.

எதிரணிக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தும் வலுவான வேகப்பந்துவீச்சு நம்மிடம் உள்ளது. தற்போதிருக்கும் புற்கள் பரப்பு குறைக்கப்படாது என எதிர்பார்க்கிறோம். 

பேட்டிங்கில் அனைவரும் ஒருங்கிணைந்து ஆட வேண்டும். ஒரு வெற்றியோடு நாம் அலட்சியமாக இருக்கக்கூடாது. தொடரை முழுமையாக கைப்பற்றவே விழைந்துள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com