நெருக்கடியை வெற்றிகரமாக எதிர்கொண்ட கோலி & ரஹானே: இந்தியா 172/3

இந்திய அணி, 69 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 82, ரஹானே 51 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்...
நெருக்கடியை வெற்றிகரமாக எதிர்கொண்ட கோலி & ரஹானே: இந்தியா 172/3

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 2-ம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி, ரஹானே ஆகிய இருவரும் அருமையாக விளையாடி அரை சதங்கள் எடுத்துள்ளார்கள். 

கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளது. டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிவடைந்தது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது. இதன் தொடர்ச்சியாக பெர்த்தில் 2-வது டெஸ்ட் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 326 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர் ஹாரிஸ் அதிகபட்சமாக 70 ரன்கள் எடுத்துள்ளார். இந்தியத் தரப்பில் இஷாந்த் சர்மா, 4 விக்கெட்டுகளையும் பூம்ரா, உமேஷ் யாதவ், விஹாரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்கள். 

இதன்பிறகு தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முரளி விஜய் ரன் எதுவும் எடுக்காமல் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ராகுல், ஹேஸில்வுட் பந்தில் 2 ரன்கள் போல்ட் ஆனார். இதனால் 8 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்திய அணி. இதன்பிறகு ஜோடி சேர்ந்த விராட் கோலி - புஜாரா மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். ஆஸி. அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்ததால் அதற்கேற்றாற்போல ஆட்டத்தை மாற்றினார்கள். தடுப்பாட்டத்தை நன்கு வெளிப்படுத்தினார்கள். 32-வது ஓவரில் லயன் பந்துவீச்சில் விராட் கோலி ஒரு பவுண்டரி அடித்தார். 22 ஓவர்களுக்குப் பிறகு இந்திய அணிக்குக் கிடைத்த முதல் பவுண்டரி அது. எனில் எந்தளவுக்கு நெருக்கடியான தருணங்களை இருவரும் எதிர்கொண்டார்கள் என்பதை அறிந்துகொள்ளலாம்.

2-வது நாள் தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 37, புஜாரா 23 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு புஜாரா 24 ரன்களில் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய ரசிகர்கள் மிகவும் கவலையடைந்தார்கள். முதல் டெஸ்டில் இந்திய அணியைக் காப்பாற்றியதோடு வெற்றிக்கும் முக்கியக் காரணமாக இருந்தார் புஜாரா. இந்நிலையில் இந்த டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் அவரால் பெரிதளவு பங்களிக்கமுடியாமல் போய்விட்டது. ஆனால் அதற்குப் பிறகு வந்த ரஹானே, கோலிக்கு நல்ல இணையாக விளங்கினார். 

ஆரம்பம் முதல் விரைவாக ரன்கள் எடுத்து ஆச்சர்யப்படுத்தினார் ரஹானே. ஸ்டார்க் பந்துவீச்சில் ஒரு சிக்ஸும் அடித்தார். இதனால் முதல் 22 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார் ரஹானே. இதற்கிடையே 109 பந்துகளில் அரை சதத்தை எட்டினார் கோலி. இதற்குப் பிறகு ஆஸி. பந்துவீச்சாளர்கள் இருவருக்கும் மேலும் அழுத்தம் கொடுத்தார்கள். இதனால் இருவரும் பக்குவமாக விளையாடி தங்களுடைய விக்கெட்டுகளைப் பறிகொடுக்காமல் பார்த்துக்கொண்டார்கள். இந்த நிதானமான ஆட்டத்தால் 87 பந்துகளில் 40 ரன்கள் என்கிற நிலைக்குச் சென்றார் ரஹானே. 92 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். இந்தியப் பந்துவீச்சாளர்களை விடவும் ஆடுகளத்துக்கு ஏற்றாற்போல் பந்துவீசி இந்திய பேட்ஸ்மேன்களுக்குப் பல்வேறு விதங்களில் நெருக்கடிக்கு ஆளாக்கினார்கள் ஆஸி. பந்துவீச்சாளர்கள். எனினும் கடைசிவரை கோலி, ரஹானே கூட்டணியை அவர்களால் பிரிக்கமுடியாமல் போனது. இதனால் இன்று கோலி-ரஹானே ஜோடி 30.4 ஓவர்கள் வரை விளையாடி 90 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் உள்ளார்கள்.

2-ம் நாளின் முடிவில் இந்திய அணி, 69 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 82, ரஹானே 51 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 7 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில், 154 ரன்கள் பின்தங்கியுள்ளது இந்திய அணி. இதனால் நாளைய ஆட்டம் மிக முக்கியமானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரை இந்திய அணி தாண்டிவிட்டால் அது பந்துவீச்சாளர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிப்பதாக அமையும். ஆனால் 50 ரன்கள் பின்தங்கிவிட்டாலும் ஆஸி. அணி இந்த டெஸ்டை வெல்ல முக்கியக் காரணமாக அமைந்துவிட வாய்ப்புண்டு. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com