ஜூனியர் உலகக் கோப்பை: கோப்பையை வென்று டிராவிட் கனவை நிறைவேற்றுமா இந்திய அணி?

இந்த உலகக் கோப்பை போட்டியானது இளம் வீரர்களுக்கு உற்சாகமான சவால் அளிப்பதுடன்...
ஜூனியர் உலகக் கோப்பை: கோப்பையை வென்று டிராவிட் கனவை நிறைவேற்றுமா இந்திய அணி?

பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதவுள்ளன. நாளை நடைபெறும் இந்தப் போட்டியை கிரிக்கெட் உலகம் மிகவும் ஆவலுடன் காணவுள்ளது.

இந்த உலகக் கோப்பைப் போட்டி, கடந்த 1988-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு, சில காரணங்களால் போட்டி நடத்தப்படவில்லை. இந்நிலையில், கடந்த 1998-ஆம் ஆண்டில் யு-19 உலகக் கோப்பை மீண்டும் தொடங்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அமைப்பால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தொடர்ச்சியாக நடத்தப்பட்டுவருகிறது.

இந்தப் போட்டியின் முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. ஜேக் எட்வர்ட்ஸ் ஆட்டநாயகன் ஆனார்.

2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, 203 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. கிறிஸ்ட்சர்ச்சில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த இந்தியா, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான், 29.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 69 ரன்களில் சுருண்டது.

மூன்று முறை சாம்பியனான இந்தியா, லீக் சுற்றுகளில் தோல்வியே சந்திக்காமல் முன்னேறி வந்துள்ளது. பி பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, பப்புவா நியூ கினியா, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இடம்பெற்றன. ஜனவரி 14-ம் தேதி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இதில் 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.  நியூஸிலாந்தின் பே ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 328 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 329 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 228 ரன்களில் வீழ்ந்தது. இந்திய பந்துவீச்சாளர்கள் சிவம் மவி, கமலேஷ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சிறப்பான பந்துவீச்சு காரணமாக அந்த அணியை 228 ரன்களில் கட்டுப்படுத்த முடிந்தது.

இந்திய அணியைப் பொருத்த வரையில் பேட்டிங்கில் கேப்டன் பிருத்வி ஷா, சுபம் கில் உள்ளிட்டோர் ரன்களை குவிப்பார்கள் என எதிர்பார்க்கலாம். பந்துவீச்சில் கமலேஷ் நாகர்கோடி, இஷான் போரெல், ஷிவம் மவி, அனுகுல் ராய் போன்றவர்கள் தொடர்ந்து எதிரணிக்கு அச்சுறுத்தலாக உள்ளார்கள்.

யு-19 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடும் 7 வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் தேர்வாகியுள்ளார்கள். இந்திய வேகப்பந்து வீச்சாளர் நாகர்கோடியை அதிகபட்சமாக ரூ. 3.20 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது கொல்கத்தா. இதனால் இந்தப் போட்டியின் மூலமாகப் பல்வேறு பலன்களை இந்திய வீரர்கள் அனுபவிக்கவுள்ளார்கள்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2008-ஆம் ஆண்டு சீசனில் கோலி தலைமையிலான இந்திய அணி கோப்பை வென்றது. போட்டி தொடர்பான ஐசிசி அறிக்கையில் இந்திய கேப்டன் கோலி கூறியிருந்ததாவது: யு-19 உலகக் கோப்பை போட்டியானது எனது வாழ்வின் மிக முக்கியமான மைல்கல்லாகும். அதுவே எங்களது வளர்ச்சிக்கான நல்லதொரு தளம் கிடைக்க உதவியது. அந்தப் போட்டியில் இருந்தே எங்களது எதிர்காலம் மாறத் தொடங்கியது. எனவே, எனது எண்ணத்திலும், இதயத்திலும் யு-19 உலகக் கோப்பை போட்டிக்கு எப்போதும் முக்கியமான இடம் உண்டு. அந்தப் போட்டி வழங்கும் வாய்ப்புகளை உணர்ந்து, அதை மதித்து, தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நான் யு-19 உலகக் கோப்பையில் விளையாடியபோது நியூஸிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் தனித்து தெரிந்தார். இதர வீரர்களுடன் ஒப்பிடுகையில் அவரது பேட்டிங் முறை முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. அந்தப் போட்டியின்போது ஸ்டீவ் ஸ்மித்துடன் நான் அதிகம் விளையாடியதில்லை. ஆனால், அவரும் தற்போது நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளார். எங்களது பிரிவைச் சேர்ந்த பல வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் தங்களது நாட்டுக்காக விளையாடுவதை அறிந்தபோது மகிழ்ச்சியாக இருந்தது என்று கோலி கூறியிருந்தார்.

இந்திய அணி 6-வது முறையாக இறுதி ஆட்டத்துக்குத் தேர்வாகியுள்ளது. இதற்கு முன்பு, கடந்த 2000, 2006, 2008, 2012, 2016 ஆகிய ஆண்டுகளில் இறுதி ஆட்டத்துக்கு இந்திய இளம் பட்டாளம் முன்னேறியுள்ளது. இதில், 3 முறை உலகக் கோப்பையை அந்த அணி கைப்பற்றியுள்ளது (2000, 2008, 2012). இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ராகுல் திராவிட், யு-19 இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இவரது பயிற்சியின் கீழ், இரண்டாவது ஆண்டாக இந்திய அணி தொடர்ந்து உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது.

கடந்த யு-19 உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியா மேற்கிந்தியத் தீவுகளிடம் தோல்வி கண்டிருந்தது. இதனால் இந்தமுறை இந்திய அணி நிச்சயம் வெல்லவேண்டும் என்று மிகவும் விருப்பப்படுகிறார் டிராவிட். அவரைப் பொறுத்தவரை, இந்தப் போட்டியை முன்வைத்து ஒரு வீரரால் அடுத்தடுத்தக் கட்டத்துக்கு நகரமுடியும் என்று பலமாக நம்புகிறார். யு-19 உலகக் கோப்பை போட்டிக்காக இந்திய அணி நியூஸிலாந்துக்குப் புறப்பட்டுச் செல்லும் முன்பு செய்தியாளர்கள் சந்திப்பின்போது ராகுல் திராவிட் கூறியதாவது: இந்த உலகக் கோப்பை போட்டியானது இளம் வீரர்களுக்கு உற்சாகமான சவால் அளிப்பதுடன், அவர்களுக்கான நல்லதொரு வாய்ப்பாகும். அவர்கள் சிறப்பாகச் செயல்படும் பட்சத்தில் யு-19 அணியிலிருந்து முதல் தர கிரிக்கெட், பின்னர் அங்கிருந்து இந்திய 'ஏ' அணி, அதையடுத்து தேசிய அணி என முன்னேறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் பேசினார். இளம் வீரர்களின் கவனம் திசை திரும்பக்கூடாது என்பதற்காக யாரும் செல்போனைப் பயன்படுத்தக்கூடாது என்று கட்டளையிட்டுள்ளார் டிராவிட். அந்தளவுக்கு இந்தப் போட்டியில் இந்திய அணி வெல்லவேண்டும், அதனால் இந்திய வீரர்கள் ஏராளமான பயன்களைப் பெற்று நல்ல நிலைமையை அடையவேண்டும் என்று முனைப்புடன் உள்ளார் டிராவிட். பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஷ் ராஜா, டிராவிட் போன்ற ஓர் ஆலோசகர் பாகிஸ்தான் அணிக்குத் தேவை என்பதிலிருந்தே டிராவிடின் பங்களிப்பு குறித்து அறிந்துகொள்ளலாம். 

ஏற்கெனவே ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்துள்ளதால் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிராவிடின் கனவு நாளை நிறைவேறுமா?

இந்திய அணி விவரம்: பிருத்வி ஷா (கேப்டன்), சுபம் கில் (துணை கேப்டன்), மன்ஜோத் கல்ரா, ஹிமான்சு ரானா, அபிஷேக் சர்மா, ரியான் பராக், ஆர்யன் ஜுயல் (விக்கெட் கீப்பர்), ஹார்விக் தேசாய், சிவம் மாவி, கமலேஷ் நாகர்கோட்டி, இஷான் போரெல், அர்ஷ்தீப் சிங், அனுகுல் ராய், சிவா சிங், பங்கஜ் யாதவ்.

போட்டி தொடங்கும் நேரம்: இந்திய நேரம் காலை 6.30 மணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com