3-ஆவது ஒருநாள்: இந்தியா 303/6, விராட் கோலி 160 நாட்-அவுட்

3-ஆவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 303 ரன்கள் குவித்தது.
3-ஆவது ஒருநாள்: இந்தியா 303/6, விராட் கோலி 160 நாட்-அவுட்

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-ஆவது ஒருநாள் போட்டி கேப் டவுனில் புதன்கிழமை பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் எய்டன் மர்கராம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்ய களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் குவித்தது.

துவக்க வீரர் ரோஹித் ஷர்மா, ரபாடா வீசிய முதல் ஓவரிலேயே டக்-அவுட்டானார். இதையடுத்து ஜோடி சேர்ந்த தவன், விராட் கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்தனர்.

12 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் சேர்த்த நிலையில் ஷிகர் தவன், 24-ஆவது ஓவரில் வெளியேறினார். தவன், கோலி ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்தது. பின்னர் வந்த ரஹானே 11, பாண்டியா 14, தோனி 10, ஜாதவ் 1 ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இருப்பினும் மறுமுனையில் நங்கூரமாய் நின்ற கேப்டன் விராட் கோலி சதம் விளாசினார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இது அவருடைய 34-ஆவது சதமாகும். மொத்தம் 159 பந்துகளைச் சந்தித்து 12 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களின் உதவியுடன் 160 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.

இந்நிலையில், கேப்டன் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த புவனேஸ்வர் குமார், பொறுப்புடன் விளையாடி 16 ரன்கள் சேர்த்து கடைசி வரை கோலியுடன் களத்தில் நின்றார். ஒரு கட்டத்தில் 6 விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறியபோது இவரின் ஆட்டம் சிறப்பாக அமைந்தது.

மேலும், விக்கெட் சரிவை நிறுத்தியதுடன் இந்த ஜோடி 7-ஆவது விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்தது. இதனால் இந்திய அணி 300 ரன்களை எளிதில் கடக்க முடிந்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் டுமினி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரபாடா, மோரிஸ், ஃபெலுக்வாயோ, தாஹிர் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

இதன்மூலம் விராட் கோலி படைத்த சாதனை விவரங்கள் பின்வருமாறு:

ஒருநாள் போட்டிகளில் அதிக சதமடித்த இந்திய கேப்டன்கள்:

விராட் கோலி - 12 சதங்கள் (43 இன்னிங்ஸ்)
சௌரவ் கங்குலி - 11 சதங்கள் (142 இன்னிங்ஸ்)
சச்சின் டெண்டுல்கர்  (70 இன்னிங்ஸ்), மகேந்திர சிங் தோனி (171 இன்னிங்ஸ்) - 6 சதங்கள்
முகமது அசாருதீன் - 4 சதங்கள் (162 இன்னிங்ஸ்)


அனைத்து வகை போட்டிகளிலும் எடுக்கப்பட்ட மொத்த சதங்களின் எண்ணிக்கை:

சச்சின் டெண்டுல்கர் - 100 சதங்கள்
ரிக்கி பாண்டிங் - 71 சதங்கள்
குமார சங்ககாரா - 63 சதங்கள்
ஜாக்குவஸ் கலீஸ் - 62 சதங்கள்
விராட் கோலி - 55 சதங்கள்
மகேல ஜெயவர்தனே, ஹசிம் ஆம்லா - 54 சதங்கள்


தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக அந்நாட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த இந்தியர்கள்:

விராட் கோலி - 160 ரன்கள் நாட்-அவுட் (கேப்டவுன், 2018)
சௌரவ் கங்குலி - 127 ரன்கள் (ஜொஹன்னஸ்பர்க், 2001)
டபள்யூ.வி.ராமன் - 114 ரன்கள் (செஞ்சூரியன், 1992)
விராட் கோலி - 112 ரன்கள் (டர்பன், 2018)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com