இந்திய மகளிர் அணி அபார வெற்றி: ஒருநாள் தொடரை வென்றது!

3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என வென்றுள்ளது.
இந்திய மகளிர் அணி அபார வெற்றி: ஒருநாள் தொடரை வென்றது!

தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 

3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களைக் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது இந்திய மகளிர் அணி. 2017 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் வரையில் முன்னேறிய இந்திய அணி, 7 மாத இளைப்பாறலுக்குப் பிறகு தற்போது களம் காண்கிறது. இந்த ஒருநாள் தொடரில் வெற்றி பெறுவதன் மூலமாக, 2021-ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு இரு அணிகளுக்கும் உள்ளது. மிதாலி ராஜ் தலைமையிலான இந்த அணிக்கு, ஹர்மன்பிரீத் கெளர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் கிம்பர்லியில் நடைபெற்றது. முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 88 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

2-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அபாரமாக விளையாடி 116 பந்துகளில் சதம் எடுத்தார். அதுவரை அவர் 9 பவுண்டரிகள் எடுத்தார். இதன்பிறகு அவர் 135 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணியின் நடுவரிசை வீராங்கனைகளான ஹர்மன்பிரீத் கெளர், வேதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்பாக விளையாடி அரை சதமெடுத்தார்கள். கெளர் 55 ரன்களும் வேதா 51 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். அதிலும் வேதா அதிரடியாக விளையாடி 32 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் அரை சதத்தை எட்டி இந்திய அணி 300 ரன்கள் குவிக்க பெரிதும் உதவினார்.

இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கபட்ட 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் குவித்தது.

இதையடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி, 30.5 ஓவர்களில் 124 ரன்களுக்குச் சுருண்டது. இதனால் இந்திய மகளிர் அணி 178 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணித் தரப்பில் பூணம் யாதவ் 4 விக்கெட்டுகளையும் கயாக்வாட், டிபி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என வென்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com