ஷிகர் தவன் சதம்: தென் ஆப்பிரிக்காவுக்கு 290 ரன்கள் வெற்றி இலக்கு

4-ஆவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 289 ரன்கள் எடுத்தது. ஷிகர் தவன் சதமடித்தார்.
ஷிகர் தவன் சதம்: தென் ஆப்பிரிக்காவுக்கு 290 ரன்கள் வெற்றி இலக்கு

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 6 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா முதல் 3-0 என முன்னிலையில் உள்ளது. 

4-ஆவது ஒருநாள் போட்டி ஜோஹன்னஸ்பர்க்கில் சனிக்கிழமை பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.  எனவே இதிலும் வெற்றிபெற்று தென் ஆப்பிரிக்க மண்ணில் அந்த அணியை வீழ்த்தி முதல் முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி விளையாடி வருகிறது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர் ரோஹித் ஷர்மா 4 ரன்களுக்கு வெளியேறினார்.

பின்னர் ஷிகர் தவனுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலி அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். 83 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்ஸருடன் 75 ரன்கள் சேர்த்து விராட் கோலி ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 158 ரன்கள் சேர்த்தது.

இருப்பினும் 100-ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடி வரும் ஷிகர் தவன், சிறப்பாக ஆடி சதமடித்தார். ஒருநாள் போட்டிகளில் இது அவருக்கு 13-ஆவது சதமாகும். மொத்தம் 105 பந்துகளைச் சந்தித்து 11 பவுண்டரி, 2 சிக்ஸர்களின் உதவியுடன் 109 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த ரஹானே 8, ஷ்ரேயாஸ் ஐயர் 18, ஹார்திக் பாண்டியா 9, புவனேஸ்வர் குமார் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். தோனி 3 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 42 ரன்கள் விளாசி களத்தில் நின்றார். இதனால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்துள்ளது. 

தென் ஆப்பிரிக்க தரப்பில் ரபாடா, நிகிடி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், மார்கல், மோரிஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com