சுழல் மன்னர்கள் "குல்-சா' !

இந்த ஆண்டு கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி எதிர்கொண்டு வரும் முதல் சவால், தென் ஆப்பிரிக்க அணியை அதன் சொந்த மண்ணில் சந்திப்பதுதான்.
சுழல் மன்னர்கள் "குல்-சா' !

இந்த ஆண்டு கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி எதிர்கொண்டு வரும் முதல் சவால், தென் ஆப்பிரிக்க அணியை அதன் சொந்த மண்ணில் சந்திப்பதுதான். கடந்த 1992-93 முதல் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுவரும் இந்தியா அங்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்றதில்லை.
தென் ஆப்பிரிக்க ஆடுகளங்களில் விளையாடுவது சற்று கடினமாக இருக்கும். அந்த மண்ணின் கடினத்தன்மையையும், சீதோஷ்ண நிலையையும் எதிர்கொண்டு விளையாடுவது என்பது எந்த நாட்டு அணிக்கும் சவாலான காரியம்தான்.
அந்தச் சவாலை எதிர்கொண்ட இந்திய அணிக்கு டெஸ்ட் தொடரில் அதிர்ச்சித் தோல்வி கிடைத்தது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் கடைசி டெஸ்டில் மட்டும் வென்ற இந்தியா, வரலாற்றில் முத்திரை பதிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டது. பின்னர், அடுத்த வாய்ப்பாக ஒரு நாள் தொடர் தொடங்கியது.
இந்த முறை வரலாற்றை திருத்தி எழுதினர் நமது வீரர்கள். தென் ஆப்பிரிக்க மண்ணில் முதல்முறையாக ஒரு நாள் கிரிக்கெட் தொடரைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது இந்திய அணி. அத்துடன், ஐசிசி ஒரு நாள் தரவரிசையில் தென் ஆப்பிரிக்காவை பின்னுக்குத் தள்ளி கம்பீரமாக முதலிடத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்தது.
இந்த வெற்றி கூட்டு முயற்சியால்தான் கிடைத்தது என்று பெருந்தன்மையுடன் கேப்டன் கோலி கூறினாலும், தங்களது மிரட்டலான சுழலால், தென் ஆப்பிரிக்க பேட்டிங் வரிசையை சரிக்க உதவிய இளம் வீரர்களான குல்தீப் யாதவுக்கும், யுவேந்திர சாஹலுக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு என்பதே நிதர்சனம்.
இந்த ஒரு நாள் தொடரில் குல்தீப் மொத்தம் 51 ஓவர்களை வீசி 17 விக்கெட்டுகளையும், சாஹல் 52.1 ஓவர்கள் வீசி 16 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளனர். கூட்டாக 6 ஆட்டங்களிலும் 619 பந்துகளை வீசிய இருவரும், 498 ரன்களை வழங்கி மொத்தம் 33 விக்கெட்டுகளை சாய்த்துள்ளனர்.
இருதரப்பு கிரிக்கெட்டில் இதற்கு முன்பு எந்தவொரு இந்திய சுழற்பந்து வீச்சாளர்களும் இத்தனை விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை. அத்துடன், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இருதரப்பு தொடரில் அந்நாட்டு மண்ணில் 33 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் இவர்கள் மட்டுமே.


யுவேந்திர சாஹல்

மல்யுத்த வீரர்களுக்கு புகழ்பெற்ற ஹரியாணாவில் பிறந்து, 
கிரிக்கெட்டில் தடம்பதித்து சாதனை படைத்து வருகிறார் 27 வயது யுவேந்திர சாஹல். முதல் தர 
கிரிக்கெட்டில் தனது 19-ஆவது வயதில் மத்தியப் பிரதேச அணிக்கு எதிராக முதல்முறையாக 
விளையாடினார். முதல் தர 
கிரிக்கெட்டில் அதிகமாக இவர் விளையாடவில்லை என்றாலும் டி20 போட்டிகளில் கவனம் 
ஈர்த்தார். குல்தீப் யாதவுக்கு முன், அதாவது 2011-இல் ஐபிஎல் போட்டியில் இவரை ஏலத்தில் எடுத்த மும்பை அணி, அவரை அதிகம் விளையாட அனுமதிக்கவில்லை. பின்னர், அவரை 
வாங்கிய பெங்களூரு அணி, முக்கிய பந்துவீச்சாளராக அங்கீகரித்தது. அந்த அணியில் விராட் கோலியின் ஆஸ்தான பந்துவீச்சாளராக மாறினார் சாஹல். 2016-இல் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரின் மூலம் இந்திய அணியில் முதல் முறையாக இடம்பிடித்தார். இங்கிலாந்துக்கு எதிராக கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 தொடரின் ஒரு ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 25 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார். (டி20 வரலாற்றில்  6 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் வீரர் இலங்கையின் 
அஜந்தா மென்டிஸ்).

சதுரங்க வீரர் சாஹல்

இவர் கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல. இந்தியாவின் சார்பில் சதுரங்க (செஸ்) போட்டிகளிலும் பங்கு பெற்றுள்ள சாஹலின் பெயர், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. இந்திய ஜூனியர் கபடி அணியிலும் இவர் பங்கேற்றிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

ஜாஹீர் கான் போல் ஆக நினைத்த குல்தீப்

உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் 1994-ஆம் ஆண்டு பிறந்த குல்தீப், இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜாஹீர் கான் போல் ஆக வேண்டும் என்று கனவு கண்டார். கான்பூரில் கிரிக்கெட் பயிற்சி மையம் ஒன்றில் சேர, குல்தீப் வேகப்பந்து வீச்சாளராக உருவாக முடியாது என்று பயிற்சியாளர் கபில் பாண்டே கணித்தார். அதன்பிறகு, அவரது ஆலோசனையை ஏற்று சுழற்பந்து வீச்சில் கவனம் செலுத்தினார் குல்தீப்.
2014-ஆம் ஆண்டில் 19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்த இவர், ஒரு புதிய சாதனையை செய்தார். அத்தொடரின் ஓர் ஆட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை செய்ததுடன், அத்தொடரில் அதிக விக்கெட்டுகள் சாய்த்த இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையும் பெற்று தேர்வாளர்கள் மனதில் இடம்பிடித்தார்.
இதனிடையே, இளம் வீரர்களை உலகுக்கு அடையாளம் காட்டும் ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டாலும், பிளேயிங் லெவனில் இவர் சேர்க்கப்படவில்லை. வலைப் பயிற்சியின்போது ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை வீழ்த்திய வீரர் என்று செய்தித்தாள்களில் இடம்பிடித்தார் குல்தீப்.எந்தவொரு திறமையான வீரரும் சந்திக்கும் அதே பிரச்னைதான் இவருக்கும் ஏற்பட்டது. குல்தீப்புக்கு வாய்ப்பு மட்டும் வழங்கப்படவேயில்லை.
வேறொரு சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பிடித்த குல்தீப், அந்த அணிக்காக 
சிறப்பாக பந்துவீசி தன்னை நிரூபித்தார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் முதல் முறையாக இந்திய அணியில் இடம்பிடித்தார். சுழற்பந்து ஜாம்பவான் அனில் கும்ப்ளே கையால் 
தொப்பியைப் பெற்றுக் கொண்டு களத்தில் இறங்கினார். பின்னர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரின் மூலம் ஒரு நாள் போட்டிகளிலும் இடம்பிடித்த 
குல்தீப், தற்போது பல சாதனைகள் படைத்து வருகிறார்.

"குல்-சா':

காதலர் தினத்தையொட்டி, சாஹல் தனது டுவிட்டரில் "ப்ரோமேன்ஸ்' (சகோதர பாசம்) என்று குறிப்பிட்டு இருவர் பெயரில் இருந்தும் இரண்டு எழுத்துகளை வைத்து "குல் - சா' என்று பதிவிட்டிருந்தார்.
1991-92 காலகட்டத்தில் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வந்த தென் ஆப்பிரிக்கா, 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை, 1-2 என இழந்தது. இருப்பினும், "வெள்ளை மின்னல்' என்று பின்னாட்களில் அழைக்கப்பட்ட ஆலன் டொனால்டு என்ற வேகப்பந்து வீச்சாளரை அந்த அணி அடையாளம் கண்டுகொண்டது.
அதேபோல், தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஒரு நாள் தொடரின் வெற்றி மூலம் இரண்டு சுழல் பந்து வீச்சாளர்களின் திறமையை அடையாளம் கண்டடைந்திருக்கிறது இந்தியா.
மணிக்கட்டை லாவகமாக சுழற்றி எதிரணி வீரர்களை மிரட்டும் "குல்-சா' இந்திய அணிக்கு கிடைத்த வரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com