முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர்: கோப்பையைக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா

முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்துக்கு எதிராக புதன்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் முறையில் 19 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
வெற்றி கோப்பையுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய வீரர்கள்.
வெற்றி கோப்பையுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய வீரர்கள்.

முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்துக்கு எதிராக புதன்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் முறையில் 19 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே கடந்த 3-ஆம் தேதி முத்தரப்பு ஆட்டம் தொடங்கியது. இந்தத் தொடரில் ஒரு தோல்விகூட இல்லாமல் ஆஸ்திரேலியா வெற்றி இலக்கை அடைந்துள்ளது.
முன்னதாக, நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் புதன்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு அந்த அணி 150 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. 
அந்த அணி விளையாடிக் கொண்டிருந்தபோது மழை குறுக்கிட்டது. இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்த காரணத்தால், ஆஸ்திரேலியா 14.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் எடுத்திருந்தபோது 19 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
நியூஸிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்ட்டின் கப்டிலும், காலின் மன்றோவும் முறையே 21, 29 ரன்களில் முதல் 6 ஓவர்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து களம் கண்ட கேப்டன் கேன் வில்லியம்சன் (9 ரன்கள்), மார்க் சாப்மன் (8 ரன்கள்) ஆட்டமிழந்தனர். 
பின்னர் வந்த ராஸ் டெய்லர் நிதானமாக விளையாடினார். ஆனால், அவருக்கு துணை நிற்காமல் 6 பந்துகளை எதிர்கொண்டு 10 ரன்களில் பெவிலியன் திரும்பினார் காலின் டி கிராண்ட்ஹோம். 10.2-ஆவது ஓவரில் சாண்ட்னரும், 12.4-ஆவது ஓவரில் டிம் சீபெஃர்ட்டும் ஆட்டமிழக்க அணியின் ஸ்கோர் 7 விக்கெட் இழப்புக்கு 101-ஆக இருந்தது. 
பந்துவீச்சாளர்கள் டிம் சௌதி, இஷ் சோதி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ராஸ் டெய்லர் 38 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து, டிரென்ட் போல்டுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இவ்வாறு 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவின் தரப்பில் ஆஷ்டன் அகர் 3 விக்கெட்டுகளும், ஆண்ட்ரூ டை, கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஆஸ்திரேலியா வெற்றி: இதையடுத்து, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரான டி.ஏ.ஷார்ட் 30 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து மன்றோ பந்து வீச்சில் சாப்மனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் வார்னர் (25), ஆஷ்டன்அகர் (2 ரன்கள்) ஆட்டமிழந்தனர். கிலென் மேக்ஸ்வெல் 20 ரன்களுடனும், ஆரோன் ஃபிஞ்ச் 18 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இடைவிடாமல் மழை பெய்ததால் ஆஸ்திரேலிய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அந்த அணியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஷ்டன் அகர் ஆட்ட நாயகனாகவும், மேக்ஸ்வெல் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த வெற்றியின் மூலம், ஐசிசி டி20 தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக முதல் இடத்தைப் பிடித்தது. நியூஸிலாந்து அணி 116 புள்ளிகளுடன் 4 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் தலா 126 புள்ளிகளுடன் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com