குளிர்கால ஒலிம்பிக்: இருவேறு போட்டிகளில் தங்கம், எஸ்தர் லெடெக்கா சாதனை

தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் செக் குடியரசின் எஸ்தர் லெடெக்கா ஸ்னோபோர்டு விளையாட்டில் சனிக்கிழமை தங்கம் வென்றார்.
குளிர்கால ஒலிம்பிக்: இருவேறு போட்டிகளில் தங்கம், எஸ்தர் லெடெக்கா சாதனை

தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் செக் குடியரசின் எஸ்தர் லெடெக்கா ஸ்னோபோர்டு விளையாட்டில் சனிக்கிழமை தங்கம் வென்றார். அவர் ஏற்கெனவே அல்பைன் ஸ்கையிங் போட்டியில் தங்கம் வென்றுள்ளதால், இரு வேறு போட்டிகளில் தங்கம் வென்ற வீராங்கனை என்ற சாதனை படைத்துள்ளார்.
 இதன் மூலமாக குளிர்கால ஒலிம்பிக்கில் இருவேறு போட்டிகளில் தங்கம் வென்றவர்கள் வரிசையில், நார்வேயின் தோர்லிஃப் ஹாக், ஜோஹன் குரோட்டம்ஸ்பிராட்டன் ஆகியோருடன் லெடெக்கா இணைந்துள்ளார். அவர்கள் இருவருமே கிராஸ் கன்ட்ரி ஸ்கையிங், நார்டிக் கம்பைன்டு பிரிவுகளில் தங்கம் வென்றிருந்தனர்.
 இதனிடையே, சனிக்கிழமை ஸ்னோபோர்டு பிரிவில் லெடெக்காவை அடுத்து ஜெர்மனியின் செலினா ஜார்ஜ் வெள்ளியும், சகநாட்டவரான ரமோனா ஹோஃப்மெய்ஸ்டர் வெண்கலமும் வென்றனர். இந்நிலையில், இப்போட்டியின் தகுதிச்சுற்றில் லெடெக்கா பந்தய இலக்கை குறைந்தபட்ச நேரமான ஒரு நிமிடம் 28.9 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார்.
 பதக்கப் பட்டியலில் நார்வே சாதனை
 குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் அதிக பதக்கங்கள் வென்ற நாட்டின் பட்டியலில் நார்வே புதிய சாதனை படைத்துள்ளது. பியோங்சாங் ஒலிம்பிக்கில் நார்வே சனிக்கிழமை வரை 38 பதக்கங்கள் (13 தங்கம், 14 வெள்ளி, 11 வெண்கலம்) வென்றுள்ளது.
 முன்னதாக, கடந்த 2010 வான்கூவர் குளிர்கால ஒலிம்பிக்கில் அமெரிக்கா 37 பதக்கங்கள் (9 தங்கம், 15 வெள்ளி, 13 வெண்கலம்) வென்றதே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
 நீதா அம்பானிக்கு கெளரவம்
 இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி சனிக்கிழமை, வெற்றியாளர்களுக்கு பதக்கம் அணிவிக்கும் வாய்ப்பினை பெற்றார். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினரான நீதா அம்பானி, ஆடவருக்கான ஆல்பைன் ஸ்கையிங் அணிகள் பிரிவில் முறையே முதல் இரு இடங்களைப் பிடித்த ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரிய வீரர்களுக்கு பதக்கம் அணிவித்தார்.
 ஊக்கமருந்து விவகாரம்
 பாப்ஸ்லெய் விளையாட்டில் பங்கேற்றிருந்த ரஷிய வீராங்கனை நெட்ஷ்தா செர்கெயேவா, ஊக்கமருந்து புகாரில் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
 அவர் இதய சம்பந்தப்பட்ட நோய்க்காக எடுத்துக்கொண்ட மருந்தில், தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து இருந்ததாக சோதனை முடிவில் தெரியவந்ததாக ரஷிய பாப்ஸ்லெய் சம்மேளனம் அறிவித்த நிலையில் நெட்ஷ்தா வெளியேற்றப்பட்டதாக விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் நீதிமன்றம் தெரிவித்தது.
 இதனிடையே, கர்லிங் விளையாட்டுப் பிரிவில் பங்கேற்ற ரஷிய வீரர் அலெக்ஸாண்டர் கிருஷெல்நிட்ஸ்கி ஊக்கமருந்து பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டதை அடுத்து, கலப்பு இரட்டையர் பிரிவில் அவர் தனது மனைவி அனஸ்தாசியாவுடன் வென்ற வெண்கலப் பதக்கம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. தற்போது அது 4-ஆவதாக வந்த நார்வேயின் கிறிஸ்டின் ஸகாஸ்லியன்-மேக்னஸ் நெட்ரெகாட்டன் இணைக்கு வழங்கப்பட்டது.
 இன்றுடன் நிறைவு
 தென் கொரியாவின் பியோங்சாங் நகரில் கடந்த 9-ஆம் தேதி தொடங்கி 16 நாள்கள் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், 17-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகின்றன. போட்டி நிறைவு நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகளும், அவரது ஆலோசகருமான இவான்கா டிரம்ப், வட கொரிய ஆளும் கட்சி துணைத் தலைவர் கிம் யோங் சோல் ஆகியோர் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com