ஐபிஎல் அணிகள் யாரைத் தக்கவைத்துக்கொள்ளும்? யாரை வெளியேற்றும்?

நாளை (ஜனவரி 4) ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை, யார் யாரைத் தக்கவைத்துகொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளன என்பது அறிவிக்கப்படும்...
ஐபிஎல் அணிகள் யாரைத் தக்கவைத்துக்கொள்ளும்? யாரை வெளியேற்றும்?

எதிர்வரும் ஐபிஎல் போட்டியில், ஓர் அணி, தன்னிடம் இருக்கும் வீரர்களில் 5 பேரை ஏலமின்றி தக்கவைத்துக் கொள்வதற்கு ஐபிஎல் நிர்வாகக் கவுன்சில் முடிவு செய்துள்ளது பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. 

நாளை (ஜனவரி 4) ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை, யார் யாரைத் தக்கவைத்துகொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளன என்பது அறிவிக்கப்படும். அதேபோல எந்தெந்த நட்சத்திர வீரர்களை வெளியேற்ற முடிவெடுத்துள்ளது என்பதும் நாளை தெரியவரும். இந்நிகழ்வு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பாகவுள்ளது.

புதிய விதிமுறையின்படி ஒவ்வொரு அணியும் 3 வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளலாம். இரு வீரர்களை ரைட் டூ மேட்ச் முறையில் (ஆர்டிஎம்) ஏலத்தில் தேர்வு செய்துகொள்ளலாம். இது, தடைக்காலம்
முடிந்து 2018-ஆம் ஆண்டு சீசனில் போட்டிக்குத் திரும்பும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து பேரில் அதிகபட்சமாக மூன்று இந்திய வீரர்கள், 2 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும். அதேபோல சர்வதேசப் போட்டிகளில் விளையாடாத இரு இந்திய வீரர்களை மட்டுமே
தக்கவைத்துக்கொள்ளலாம்.

இதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் கடந்த 2015-ம் ஆண்டில் தங்கள் வசம் இருந்த வீரர்களை ஏலமின்றி தக்கவைத்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.

முன்னதாக, கடந்த 2013-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த அணிகளைச் சேர்ந்த வீரர்கள், புதிதாக போட்டியில் சேர்க்கப்பட்ட ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ், குஜராத் லயன்ஸ் அணிகளில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

புணே, குஜராத் அணிகளில் விளையாடிய வீரர்களில் தோனி, சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, பென் ஸ்டோக்ஸ், ஸ்மித், மெக்குல்லம், டுபிளெஸ்ஸி போன்ற முக்கிய வீரர்கள் இடம்பெற்றார்கள். எனவே இந்த வீரர்களைத் தேர்வு செய்ய சென்னை, ராஜஸ்தான் அணிகள் மிகுந்த ஆர்வம் செலுத்தும்.

மூன்று வீரர்களை தக்கவைத்துக்கொண்டால் ஓர் ஐபிஎல் அணி வசம் உள்ள ரூ. 80 கோடியில் ரூ. 33 கோடி செலவாகிவிடும். மீதமுள்ள தொகையைக் கொண்டு மற்ற வீரர்களை ஏலத்தில் எடுக்கவேண்டும். இரு வீரர்களை ரைட் டூ மேட்ச் கார்ட் வழியாகத் தேர்வு செய்யலாம். 

சர்வதேச அளவில் விளையாடிய வீரர்கள் இருவரை மட்டும் தக்கவைத்துக்கொண்டால் முதலில் தேர்வாகும் வீரருக்கு ரூ. 12.5 கோடி சம்பளம் வழங்கப்படவேண்டும். அடுத்துத் தேர்வாகும் வீரருக்கு ரூ. 8.5
கோடி. சர்வதேச அளவில் விளையாடிய வீரர்கள் மூன்று பேரைத் தக்கவைத்துக்கொண்டால் முதல் வீரருக்கு ரூ. 15 கோடியும், 2-வது வீரருக்கு ரூ. 11 கோடியும் 3-வது வீரருக்கு ரூ. 7 கோடியும் சம்பளமாக
வழங்கப்படவேண்டும்.  

*

சென்னை சூப்பர் கிங்ஸ் 

தக்கவைத்துக்கொண்டும் ஏலத்தில் மீதமுள்ள இரு வீரர்களைத் தேர்வு செய்யவும் வாய்ப்புள்ள வீரர்கள் -  

தோனி, ரெய்னா, ஜடேஜா, பிராவோ, டுபிளெஸ்ஸி

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியில் 2 ஆண்டு தடைக்குப் பிறகு விளையாட வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு எம்.எஸ்.தோனி, ரெய்னா ஆகியோரைத் தேர்வு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சிஎஸ்கே அணியின் இயக்குநர் ஜார்ஜ் ஜான் ஒரு பேட்டியில் கூறியதாவது: தோனி, ரெய்னா ஆகிய இருவரையும் தக்கவைத்துக்கொள்ள முடிவெடுத்துள்ளோம். மூன்றாவது வீரர் குறித்த முடிவை இனிமேல்தான் எடுக்கவேண்டும். ஐபிஎல் அணிகள் தக்கவைத்துக்கொள்ளும் விரும்பும் வீரர்களின் பட்டியலை ஜனவரி 4-ம் தேதிக்குள் வழங்கவேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் கூறியுள்ளது. டிவைன் பிராவோ, மெக்குல்லம், டுபிளெஸ்ஸி, ஆண்ட்ரூ டை போன்ற வீரர்களும் எங்கள் பரிசீலனையில் உள்ளார்கள். ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் போட்டியை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டு வருகிறோம் என அவர் பேட்டியளித்துள்ளார்.

இந்நிலையில் மூன்றாவது வீரராக ஜடேஜாவைத் தேர்வு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிராவோ, டுபிளெஸ்ஸி ஆகிய இருவரையும் ஏலத்தில் ரைட் டூ மேட்ச் கார்டு (ஆர்டிஎம்) வழியாகத் தேர்வு செய்துகொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அஸ்வின், வாஷிங்டன் சுந்தரை ஏலத்தில் தேர்வு செய்யவும் சென்னை அணி ஆர்வம் காட்டும் எனத் தெரிகிறது. 

மும்பை இந்தியன்ஸ்

ரோஹித் சர்மா, ஹார்திக் பாண்டியா, கிருனால் பாண்டியா, பொலார்ட், பூம்ரா

ரோஹித் சர்மா, பாண்டியா, கிருனால் பாண்டியா ஆகிய மூவரையும் தக்கவைத்துக்கொள்ளும் எனத் தெரிகிறது. குருனால் பாண்டியா இன்னும் இந்திய அணியில் விளையாடாததால் அவரை மூன்றாவது வீரராக ரூ. 7 கோடிக்குப் பதிலாக ரூ. 3 கோடிக்குத் தேர்வு செய்துகொள்ளலாம். பொலார்ட், பூம்ரா ஆகிய இருவரையும் ஏலத்தில் ஆர்டிஎம் முறையில் தேர்வு செய்துகொள்ள மும்பை அணி நிர்வாகம் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஆண்ட்ரே ரஸல், சுனில் நரைன், மணீஷ் பாண்டே, குல்தீப் யாதவ், யூசுப் பதான்

ரஸல், நரைன் ஆகிய இரு வீரர்களையும் தக்கவைத்துக்கொண்டு இதர மூன்று பேரை ஏலத்தில் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2012, 2014-ம் ஆண்டுகளில் கொல்கத்தா அணியை ஐபிஎல் சாம்பியன் ஆக்கிய கெளதம் கம்பீர், இந்தமுறை ஏலத்தில் குறைந்த தொகையில் தேர்வாகவே வாய்ப்புண்டு. 

இதுவரை கொல்கத்தா அணி நிர்வாகம் என்னிடம் பேசவில்லை. கேகேஆர் அணியில்தான் நான் நீடிப்பேனா எனத் தெரியவில்லை. வேறு அணியில் விளையாடவும் தயாராக உள்ளேன். கேகேஆர் அணிக்காக நான் முடிந்ததைச் செய்துவிட்டேன். வேறு அணியில் விளையாடுவதில் தவறில்லை என்று ஆச்சர்யப்படும் விதத்தில் பேட்டியளித்துள்ளார் கம்பீர். 

36 வயதாகிவிட்டதாலும் தற்போது இந்திய அணிக்குத் தேர்வாகாத காரணத்தாலும் கம்பீரை அதிக விலை கொடுத்து வாங்க கேகேஆர் அணி தயாராக இல்லை என்று தெரிகிறது. இந்த வருட ஏலத்தில் கம்பீரின் தேர்வு அனைவரும் எதிர்பார்க்கக்கூடிய ஒன்றாக இருக்கும்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

விராட் கோலி, டிவில்லியர்ஸ், சாஹல், ராகுல், சர்பராஸ் கான்.

முதலில் இந்த ஐந்து பேரைத் தேர்வு செய்துவிட்டு கிறிஸ் கெய்லை ஏலத்தில் குறைந்த தொகைக்குத் தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றபடி நல்ல ஃபார்மில் இருக்கும் சாஹல், ராகுல், சர்பராஸ் கான் ஆகியோரைத் தேர்வு செய்யும் மனநிலையில் உள்ளது ஆர்சிபி நிர்வாகம். அல்லது சர்பராஸ் கானுக்குப் பதிலாக கெதர் ஜாதவைத் தேர்வு செய்யவும் வாய்ப்புள்ளது. 

ராஜஸ்தான் ராயல்ஸ்

ரஹானே, ஸ்மித்

இந்த இருவரையும் ரைட் டூ மேட்ச் கார்டு வழியாகத் தேர்வு செய்ய ராஜஸ்தான் நிர்வாகம் முடிவெடுத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. 2015-ல் ராஜஸ்தான் அணியில் விளையாடிய ஷேன் வாட்சன், கிறிஸ் மாரிஸ், சஞ்சு சாம்சன், டிம் செளதி, கருண் நாயர், பென் கட்டிங் ஆகியோர் வேறு அணிகளுக்குச் சென்றுள்ளதால் அவர்களை மீண்டும் தேர்வு செய்யமுடியாமல் தவிக்கிறது ராஜஸ்தான். இதனால் இந்த வருடம் ஒரு புதிய ராஜஸ்தான் அணியை எதிர்பார்க்கலாம்.   

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

டேவிட் வார்னர், புவனேஸ்வர் குமார், ரஷித் கான், ஷிகர் தவன், விஜய் சங்கர்.

முதல் மூன்று பேரைத் தக்கவைத்துக்கொண்டு இதர இருவரை ஏலத்தில் ரைட் டூ மேட்ச் கார்டு மூலமாகத் தேர்வு செய்யலாம். ஷிகர் தவன், விஜய் சங்கர் தவிர கேன் வில்லியம்சனை ஏலத்தில் தேர்வு செய்யவும் சன்ரைசர்ஸ் ஆர்வமாக இருக்கும். எந்த ஐந்து பேரைத் தேர்வு செய்யவேண்டும் என்கிற குழப்பம் இல்லாத அணிகளில் இதுவும் ஒன்று. 

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

டேவிட் மில்லர், மேக்ஸ்வெல், அக்‌ஷர் படேல். 

கடந்த 10 ஐபிஎல் போட்டிகளில் இருமுறை மட்டுமே பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற்றுள்ளது பஞ்சாப் அணி. எனவே யாரையும் தக்கவைத்துக்கொள்ளாமல் இந்த மூவரையும் ஆர்டிஎம் முறையில் தேர்வு
செய்ய இருப்பதாகவும் தெரிகிறது. 

தில்லி டேர்டெவில்ஸ்

கிறிஸ் மாரிஸ், ரிஷப் பந்த், குயிண்டன் டி காக், ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன்.

டி20-யில் அசத்தக்கூடிய கிறிஸ் மாரிஸ், ரிஷப் பந்த் ஆகியோரைத் தக்கவைத்துக்கொள்ள வாய்ப்புண்டு. 3 இளம் வீரர்களான டி காக், ஐயர், சஞ்சு சாம்சன் ஆகியோரை ஆர்டிஎம் முறையில் தேர்வு செய்யலாம். நட்சத்திர வீரர்கள் யாரும் இல்லை என்பதால் ஸ்டோக்ஸைப் பெரிய விலைக்கு ஏலத்தில் தேர்வு செய்யும் என நம்பப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com