ஐஎஸ்எல்: கொல்கத்தா-எப்சி கோவா இன்று மோதல்

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில், அட்லெடிகோ டி கொல்கத்தா-எப்சி கோவா அணிகள் இடையே புதன்கிழமை நடைபெறவுள்ள 37-ஆவது லீக் ஆட்டத்தில் மோதுகின்றன.

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில், அட்லெடிகோ டி கொல்கத்தா-எப்சி கோவா அணிகள் இடையே புதன்கிழமை நடைபெறவுள்ள 37-ஆவது லீக் ஆட்டத்தில் மோதுகின்றன.
இந்த ஆட்டம் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
நடப்பு சாம்யினான கொல்கத்தா, இதுவரை 6 லீக் ஆட்டங்களில் விளையாடி அதில் 2 வெற்றி, 2 டிரா, 2 தோல்வியைப் பதிவு செய்து, 8 புள்ளிகளுடன் பட்டியலில் 7-ஆவது இடத்தில் உள்ளது.
கோவா அணி 6 ஆட்டங்களில் விளையாடி, அதில் 4 வெற்றி, 2 தோல்விகளைப் பதிவு செய்து, 12 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்தில் உள்ளது.
கொல்கத்தா அணி, சொந்த மண்ணில் மும்பை சிட்டி, தில்லி டைனமோஸ் ஆகிய அணிகளை வீழ்த்தி 2 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. இரு அணிகளுக்கு எதிரான ஆட்டங்களிலும் 1-0 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா வெற்றி பெற்றது.
சொந்த மண்ணில் புதன்கிழமை நடைபெறும் ஆட்டத்திலும் கொல்கத்தா வெற்றியைப் பதிவு செய்யும் என்று உள்ளூர் ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
எஃப்சி கோவா அணி, கடந்த நவம்பர் மாதம் 19-ஆம் தேதி நடைபெற்ற தனது முதல் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
அதைத் தொடர்ந்து மும்பை சிட்டி எஃப்சி அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவிய கோவா, சொந்த மண்ணில் நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4-3 என்ற கோல் கணக்கில் 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்தது.
அதையடுத்து, கடந்த மாதம் நடைபெற்ற கேரள பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிக்கு எதிரான ஆட்டத்திலும், தில்லி டைனமோஸ் எஃப்சி அணிக்கு எதிரான ஆட்டத்திலும் கோவா வெற்றி பெற்றது.
டிசம்பர் 23-ஆம் தேதி சொந்த மண்ணில் நடைபெற்ற 31-ஆவது லீக் ஆட்டத்தில் புணே சிட்டி எஃப்சி அணியிடம் கோல் எதுவும் பதிவு செய்யாமல் தோல்வியைச் சந்தித்து கோவா. இந்நிலையில், கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் செய்த தவறுகளை இனி செய்யாமல் பார்த்துக் கொள்வோம். ஆட்டங்களில் வெற்றியும், தோல்வியும் சகஜம். ஆனால், ஆட்டத்தில் வாய்ப்பு கிடைக்கும்போது நிச்சயம் வித்தியாசமான ஆட்டத்தை கோவா வீரர்கள் வெளிப்படுத்துவார்கள்.
-கோவா தலைமைப் பயிற்சியாளர் செர்ஜியோ லோபெரா.

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து கால்பந்து வீரர் ரியான் டெய்லர், அறிமுகமாகி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோல் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு. கோவா அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வீரர்கள் வெளிப்படுத்துவார்கள்.
- கொல்கத்தா தலைமைப் பயிற்சியாளர் 
டெட்டி  ஷெரிங்கம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com