இந்தியா - தெ.ஆ. டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது: சாதனை செய்யுமா கோலி படை?

இந்தியா, கடந்த 25 ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்காவில் ஒரு டெஸ்ட் தொடரைக் கூட வென்றதில்லை... 
இந்தியா - தெ.ஆ. டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது: சாதனை செய்யுமா கோலி படை?

இந்தியா, கடந்த 25 ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்காவில் ஒரு டெஸ்ட் தொடரைக் கூட வென்றதில்லை. அதிகபட்சமாக, 2010-11 காலகட்டத்தில் 2 போட்டிகளைக் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்துள்ளது இந்தியா. இந்நிலையில், தென் ஆப்பிரிக்க அணியுடன் 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களைக் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது இந்திய அணி. டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. என்ன நடக்கப்போகிறது என்று இந்திய ரசிகர்கள் தொடரின் முடிவுக்கு மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. தொடர்நாயகன் விருதை இந்திய கேப்டன் விராட் கோலி தட்டிச் சென்றார். ஆனால், கோலி தனக்கான உண்மையான சவாலை தென் ஆப்பிரிக்க தொடரில் எதிர்கொள்வார் என்று இந்திய முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் பிஷன் சிங் பேடி கூறியுள்ளார். ஆம். கடந்த ஒன்றரை வருடமாக உள்ளூரில் நடைபெற்ற டெஸ்ட் சீசனில் ஏராளமான வெற்றிகளைப் பெற்ற இந்திய அணிக்கு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் கடும் சவாலை அளிக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கமுடியாது.  

இந்திய அணிக்கு 7 பேட்ஸ்மேன்கள், 7 பந்துவீச்சாளர்கள், ஒரு ஆல்ரவுண்டர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொடரைக் கைப்பற்ற வேண்டும் என்று இந்திய வீரர்கள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம், தென் ஆப்பிரிக்க அணியும் டெஸ்ட் தொடரை வென்று தன் பலத்தை நிரூபிக்க ஆவலாக உள்ளது. 

கணுக்காலில் காயம் கண்டிருந்த இந்திய வீரர் ஷிகர் தவன், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்குத் தற்போது தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள பிசிசிஐ, ஜடேஜா வைரஸ் காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளது. இதனால் முதல் டெஸ்டில் முரளி விஜய்யும் ஷகர் தவனும் தொடக்கவீரர்களாகக் களமிறங்கவுள்ளார்.

'தென் ஆப்பிரிக்கா ஆடுகளங்களில் பந்து நன்கு பவுன்ஸ் ஆகும். அதை எதிர்கொள்வது நமது பேட்ஸ்மேன்களுக்கு சவாலானதாக இருக்கும். இந்த முறை எந்தவிதமான பந்துவீச்சையும் எதிர்கொள்ள தயாராகி வருகிறோம்' என்று இந்திய வீரர் புஜாரா தெரிவித்துள்ளார். மூன்றாவது நிலையில் களமிறங்கும் புஜாரா சிறப்பாக ஆடுகிற பட்சத்தில் அது இந்திய அணிக்குப் பெரும் பலத்தை அளிக்கும். இலங்கைக்கு எதிரான தொடரில் 3 டெஸ்டுகளில் 610 ரன்கள் குவித்து அசத்தினார் இந்திய கேப்டன் விராட் கோலி. இதையடுத்து கோலியின் விக்கெட்டுகளை வீழ்த்த தெ.ஆ. அணியினர் மிகுந்த ஆவலுடன் இருப்பார்கள். கிட்டத்தட்ட வேரைச் சாய்ப்பதற்குச் சமம். 

சரியான ஃபார்மில் இல்லாதபோதும் ரஹானே நிச்சயம் இந்திய அணியில் இடம்பிடிப்பார். ஆனால் ரோஹித் சர்மா, பாண்டியா ஆகிய இருவரில் யார் அணியில் இடம்பிடிப்பார் என்கிற புதிர் இன்னும் விலகவில்லை. கூடுதல் பளுவால் இன்னொரு வேகப்பந்துவீச்சாளர் விளையாடுவது மற்ற பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதனால் பாண்டியா இடம்பிடிக்க வாய்ப்புண்டு.

இஷாந்த், உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், முகமது ஷமி உள்ளிட்ட பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்த டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக ஜஸ்பிரீத் பூம்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிகப்பு நிற குக்குபுரா பந்தைக் கொண்டு பந்துவீசுவது சவாலான ஒன்று என இந்திய வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் கூறியுள்ளார். எனவே வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசி இந்திய அணிக்கு வெற்றி தேடித்தருவார்களா என்கிற ஆர்வம் எழுந்துள்ளது. 

இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராகத் தனது திறமையை உணர்ந்து பந்துவீச வேண்டும் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார். தனது திறமையை உணர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா பந்துவீச வேண்டும். இஷாந்த், அவரிடம் உள்ள திறமையை இன்னும் உணர்ந்துகொள்ளவில்லை என எண்ணத் தோன்றுகிறது. அவர் நல்ல உயரமாக இருக்கிறார். சிறப்பாக வேகப்பந்தை வீசுகிறார். இருப்பினும், என்ன பிரச்னை என்று புரியவில்லை. இந்திய அணியில் இடம்பெற்று 10 ஆண்டுகளை கடந்துவிட்டார் இஷாந்த். ஆனால், அணியில் இன்னமும் தனக்கான இடத்தை அவர் ஏற்படுத்திக் கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது. தன்னிடம் உள்ள திறமையை அவர் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். முன்னாள் வீரர்கள் ஜாகீர் கான், கபில்தேவ் உள்ளிட்டோரின் இடத்தை அவர் பூர்த்தி செய்ய வேண்டும் என்று பிரசாத் கூறியுள்ளது சரியான ஆலோசனையாக உள்ளது. இஷாந்த் சர்மா அணிக்குத் தலைமை தாங்கும் அளவுக்கு நிறைய விக்கெட்டுகள் எடுத்தால் அது நிச்சயம் தென் ஆப்பிரிக்க அணிக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும்.

நாளைய டெஸ்டில் அஸ்வின் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் இந்தமுறை தன்னை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளார் அஸ்வின்.

அஸ்வின் மற்றும் ஜடேஜா, தங்களது பந்துவீச்சு முறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று இந்திய அணியின் துணை கேப்டன் அஜிங்க்ய ரஹானே ஆலோசனை கூறியுள்ளார். அஸ்வின் மற்றும் ஜடேஜா இந்தியாவில் பந்துவீசுவதைப் போல, அந்நிய மண்ணிலும் சிறப்பாக பந்துவீச இயலும். மொயீன் அலி, நாதன் லயன் ஆகியோர் இங்கிலாந்தில் ஒரு முறையிலும், ஆஸ்திரேலியாவில் வேறு முறையிலும் பந்துவீசுவதைப் பார்க்க முடியும். அதேபோல், அஸ்வின் மற்றும் ஜடேஜா தென் ஆப்பிரிக்காவில் தங்களது பந்துவீச்சு முறையை மாற்றும் பட்சத்தில் அங்குச் சிறப்பாக செயல்பட இயலும். அதற்கு அவர்கள் தங்களின் பந்துவீச்சு திறன், பந்துவீச்சு முறை, அதன் வேகம் ஆகியவற்றில் சிறிதளவு மாற்றம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினாலே அது அணிக்கு மிகவும் சாதகமாக அமையும். 

தென் ஆப்பிரிக்க அணி சிறப்பான பேட்டிங் மற்றும் பந்துவீச்சு வரிசையைக் களமிறக்கும் முனைப்பில் உள்ளது. 2016 ஜனவரிக்குப் பிறகு டிவில்லியர்ஸ் எந்த டெஸ்டும் விளையாடவில்லை. கடந்த வருட நவம்பருக்குப் பிறகு டேல் ஸ்டெய்னும் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை. ஆனால் இருவரும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் என்றவுடன் உடனடியாகத் தயாராகிவிட்டார்கள்.

உடல் நலக் குறைவால் ஜிம்பாப்வேக்கு எதிரான 4 நாள் டெஸ்டில் பங்கேற்காத டூ பிளெஸ்ஸிஸ், இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் கேப்டனாக களம் காண்கிறார். 

15 பேர் கொண்ட இந்த அணியில் கிறிஸ் மோரிஸ், மோர்னே மோர்கெல், ககிசோ ரபாடா, வெர்னான் பிலாண்டர், அன்டிலே பெலுக்வாயோ என பந்துவீச்சுக்கான முழு படையும் களம் காண்கிறது. இதில் கிறிஸ் மோரிஸ், ஜூலையில் காயம் கண்டு ஓய்வில் இருந்த நிலையில் தற்போது களம் காண்பது குறிப்பிடத்தக்கது. அணிக்கான ஒரே விக்கெட் கீப்பராக குவிண்டன் டி காக் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரே டெஸ்டில் காயம் கண்டு விலகியிருந்த அவர், இந்தியாவுக்கு எதிரான போட்டியின் மூலம் அணிக்கு திரும்பியுள்ளார்.

இது சவாலான தொடர்தான். இந்திய அணி தோற்கவும் வாய்ப்புண்டு. ஆனால் இந்திய அணி மீது மிகுந்த நம்பிக்கை வைத்துப் பேசுகிறார் ராகுல் டிராவிட். 

தென் ஆப்பிரிக்க தொடரில் பங்கேற்க இருக்கும் பேட்ஸ்மேன்கள் சுமார் 40 முதல் 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் உடையவர்கள். சிறப்பாகச் செயல்படக் கூடிய ஆல்ரவுண்டர்களும் (ஹார்திக் பாண்டியா) அணியில் உள்ளனர். திறமிக்க சுழற்பந்துவீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா ஆகியோரும் இருக்கின்றனர். எனவே, தென் ஆப்பிரிக்காவில் சற்று அதிர்ஷ்டமும், சரியான ஆடுகளமும் அமையும் பட்சத்தில் தொடரை இந்தியா கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதென நம்புகிறேன் என்கிறார். டிராவிட் சொன்னது பலிக்குமா?

இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்ய ரஹானே (துணை கேப்டன்), லோகேஷ் ராகுல், ஷிகர் தவன், முரளி விஜய், சேதேஷ்வர் புஜாரா, ரோஹித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ரித்திமான் சாஹா, பார்திவ் படேல், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஹார்திக் பாண்டியா.

தென் ஆப்பிரிக்க அணி: ஃபா டூ பிளெஸ்ஸிஸ் (கேப்டன்), ஹசீம் ஆம்லா, டெம்பா பவுமா, குவிண்டன் டி காக், தியுனிஸ் டி பிரைன், டி வில்லியர்ஸ், டீன் எல்கர், கேசவ் மஹராஜ், எய்டன் மார்க்ரம், மோர்னே மோர்கெல், கிறிஸ் மோரிஸ், அன்டிலே பெலுக்வாயோ, வெர்னான் பிலாண்டர், ககிசோ ரபாடா, டேல் ஸ்டெயின்.

டெஸ்ட் தொடங்கும் நேரம்: இந்திய நேரம் மதியம் 2 மணி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com