இந்தியாவால் இயலும்...???

2017-இல் இந்திய அணி, தான் விளையாடிய 4 டெஸ்ட் தொடர்களிலுமே வெற்றி, அதேபோல் மொத்தம் ஆடிய 6 ஒருநாள் தொடர்களிலும் வெற்றி, 6 டி20 தொடர்களில் 4-இல் வெற்றி.
இந்தியாவால் இயலும்...???

2017-இல் இந்திய அணி, தான் விளையாடிய 4 டெஸ்ட் தொடர்களிலுமே வெற்றி, அதேபோல் மொத்தம் ஆடிய 6 ஒருநாள் தொடர்களிலும் வெற்றி, 6 டி20 தொடர்களில் 4-இல் வெற்றி.
அணி வீரர்களில், சர்வதேச கிரிக்கெட்டில் ஓராண்டில் கேப்டனாக 10 சதங்கள் விளாசி விராட் கோலி உலக சாதனை. டெஸ்ட் போட்டிகளில் அதிவேக 300 விக்கெட்டுகள் வீழ்த்தி அஸ்வின் உலக சாதனை. டி20 போட்டியில் அதிவேக சதத்தை அடித்து உலக சாதனையை சமன் செய்து ரோஹித் சர்மா சாதனை.
இப்படியாக பல சாதனைகளுடன் 2017-ஆம் ஆண்டை நிறைவு செய்துகொண்ட இந்திய அணி, தென் ஆப்பிரிக்க தொடருடன் 2018-இல் அடியெடுத்து வைக்கிறது. அடுத்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா தொடர்களுக்காக அந்நாடுகளுக்கு செல்கிறது.
இதில் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆரம்பமாகிறது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர். அதிலும் டெஸ்ட் தொடர் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. காரணம், கடந்த 1992 முதல் தென் ஆப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற போட்டிகளில், இந்திய அணி ஒரு டெஸ்ட் தொடரைக் கூட கைப்பற்றியதில்லை.
இதுவரை மொத்தம் 6 டெஸ்ட் தொடர்களில் தென் ஆப்பிரிக்காவுடன் அதன் மண்ணில் பலப்பரீட்சை நடத்தியது இந்தியா. அதில் 5 தொடர்களை தென் ஆப்பிரிக்கா ஆட்கொண்டுவிட்ட நிலையில், ஒற்றைத் தொடரை (2010-11) இந்தியாவால் சமன் செய்ய மட்டுமே முடிந்தது. இதையே ஆட்டங்களாக கணக்கிட்டால் 6 தொடர்களிலும் மொத்தமாக நடைபெற்ற 17 ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்கா 8 வெற்றிகளை பெற்ற நிலையில், இந்தியா 2 முறையே தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியுள்ளது. எஞ்சிய 7 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன.
ஆனால், தென் ஆப்பிரிக்காவோ டெஸ்ட் தொடரில் இந்தியாவில் தடம் பதித்துள்ளது. கடந்த 1996-97 முதல் இந்தியாவில் 5 டெஸ்ட் தொடர்களில் பங்கேற்றுள்ள அந்த அணி, ஒரு தொடரில் (1999-2000) இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளது. எஞ்சிய தொடர்களில் இந்தியா 2-ஐ கைப்பற்ற, 2 தொடர் டிரா ஆனது. ஆட்டங்களாக கணக்கிட்டால் 5 தொடர்களிலுமாக 12 ஆட்டங்களில், இந்தியாவுக்கு இணையாக தென் ஆப்பிரிக்காவும் 5 வெற்றிகளை பெற்றுள்ளது. 2 ஆட்டங்கள் மட்டுமே டிரா ஆகியுள்ளன.
இந்த வரலாற்றை மாற்றியெழுத, தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி ஒரு டெஸ்ட் தொடரையேனும் கைப்பற்ற வேண்டும் என்பது இந்திய அணியின் நீண்டகால கனவு. அந்த வேட்கையிலேயே இத்தொடரும் தொடங்குகிறது.
முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தத் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி மீது அபிரிமிதமான நம்பிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணமும் இருக்கிறது. கடந்த ஆண்டில் சொந்த மண்ணில் அசைக்க முடியாத அணியாக இருந்தது இந்தியா. அதிலும் ஒட்டுமொத்தமாக தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களைக் கைப்பற்றியது.
இவையெல்லாம் சரி, இந்த வெற்றிகள் நம்பிக்கையும், ஊக்கமும் அளிக்கும். ஆனால், களச் செயல்பாட்டுக்கு இந்தியா எவ்வாறு தயாராகியுள்ளது?
கடைசியாக 2013-14-இல் தென் ஆப்பிரிக்காவில் விளையாடிய இந்தியா, அதற்குப் பிறகான இடைப்பட்ட காலகட்டத்தில் பல்வேறு மாற்றங்களையும், ஏற்றங்களையும் சந்தித்துள்ளதை மறுப்பதற்கில்லை. சமீபகாலத்தில் ரவி சாஸ்திரியின் வழிகாட்டுதல், கோலியின் தலைமை ஆகியவற்றின் கீழ் இந்தியா முறையான, சரியான வளர்ச்சியை எட்டி வந்துள்ளது என்றே சொல்லலாம்.
அடுத்தபடியாக, இந்தத் தென் ஆப்பிரிக்க தொடர் உள்ளிட்ட முக்கியமான தொடர்களுக்கு இந்தியாவை தயார்படுத்தும் வகையில் கடந்த ஆண்டில் அணி நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகளை குறிப்பிட்டுக் கூறலாம். அதில் முக்கியமானது, சுழற்சி முறையில் வீரர்களை களம் இறக்கியது.
சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்குப் பிறகு இந்திய அணி தொடர்ந்து டிசம்பர் வரையில் பல்வேறு தொடர்களில் விளையாடியது. இதனால் வீரர்கள் சோர்வடையாமல் இருக்க பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் என அனைவருக்கும் மாற்று முறையில் ஓய்வும், வாய்ப்பும் அளிக்கப்பட்டு வந்தன.
இதனால் ஒருபுறம் மூத்த வீரர்களுக்கு உரிய ஓய்வு கிடைத்ததுடன், மறுபுறம் இளம் வீரர்களுக்கு முறையான வாய்ப்பும், அனுபவங்களும் கிடைத்தன. சமீபத்தில் இந்தியாவிடம் தொடர்களை இழந்த இலங்கை அணியின் அப்போதைய பயிற்சியாளர் நிக் போத்தாஸ், இந்த சுழற்சிமுறையை இந்திய அணிக்கான பலமாகக் குறிப்பிட்டார்.
தென் ஆப்பிரிக்க தொடரை பொருத்த வரையில் இந்திய அணியில் மிகச்சிறந்த பேட்டிங் மற்றும் பந்துவீச்சு வரிசை களம் இறக்கப்பட்டுள்ளது. வேகப்பந்துவீச்சுக்கும், பவுன்சருக்கும் சாதகமான அந்நாட்டு மைதானத்துக்கு உகந்த வகையில் புவனேஸ்வர் குமார், முகமது சமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா என 5 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களம் காண்பது இந்திய அணிக்கு பலம்.
அதேபோல், புஜாரா, முரளி விஜய், லோகேஷ் ராகுல், விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே, ஷிகர் தவன், ரோஹித் சர்மா என பேட்டிங்கிலும் மிகச் சரியான, அனுபவமிக்க வீரர்கள் வரிசை உள்ளது. இந்த வரிசையிலான அணியின் மூலமாக தென் ஆப்பிரிக்க தொடரை வெல்வதற்கான நம்பிக்கை இருப்பதாக கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கடந்த 2013-14-ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்க தொடரில் பங்கேற்ற அதே வீரர்கள் தற்போதைய தொடரிலும் பங்கேற்பது களம் சார்ந்த முன்னறிவில் அணிக்கு உதவியாக இருக்கும்.
பலவீனங்களாக குறிப்பிடுவதென்றால், இந்திய அணிக்கு பெரும் நம்பிக்கையை அளித்தது, சமீபத்தில் நிறைவடைந்த இலங்கைக்கு எதிரான தொடர்தான். அதில் அணியும், வீரர்களும் சாதனைகள் படைத்தனர். ஆனால், சமீப காலங்களில் இலங்கை சிறப்பாகச் செயல்படவில்லை என்பது உண்மை. தென் ஆப்பிரிக்கா போன்ற ஒரு பலமான அணிக்கு எதிரான தொடருக்காக, இந்தியா தன்னை தயார்படுத்திக் கொள்ளும் வகையில் இலங்கை தொடர் சவால் நிறைந்ததாக இல்லை என்பதே நிதர்சனம்.
இதுதவிர, எந்தவொரு பயிற்சி ஆட்டங்களும் இல்லாமல் நேரடியாக களத்தில் குதிக்கிறது இந்திய அணி. சம்பந்தப்பட்ட களம் சார்ந்த சமீபத்திய முன்னறிவு இல்லாத நிலையில் போட்டியில் பங்கேற்பதால், இந்திய அணி சற்று தடுமாற வாய்ப்புள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு இந்திய அணி களம் காணும் பட்சத்தில் வெற்றியை நோக்கி முன்னேறலாம்.
கேப்டன் கோலியுடனான கருத்து வேறுபாடு காரணமாக அணியின் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே விலகிய நிலையில், கோலிக்கு இணக்கமானவராக கூறப்படும் ரவி சாஸ்திரி பொறுப்பேற்றார். ரவி சாஸ்திரியின் பயிற்சியிலும், கோலியின் தலைமையிலுமான இந்திய அணிக்கு கடந்த ஆண்டில் தொட்டதெல்லாம் துலங்கியது.
கொடி நாட்டி வரும் ரவி சாஸ்திரி-கோலி கூட்டணிக்கு, தென் ஆப்பிரிக்க தொடரே உண்மையான போர்க்களம். இந்தத் தொடரின் மூலம் எதையும் யாருக்கும் நிரூபிக்க வேண்டியதில்லை என்று கோலி கூறியுள்ளார். ஆனால், சொந்த மண்ணில் சொக்கத் தங்கமாக ஜொலித்த இந்திய அணி, அந்நிய மண்ணிலும் சோடை போகாது என்பதை நிரூபிப்பதற்கான உரைகல்லாகவே இந்தத் தொடர் பார்க்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com