யு 19 உலகக் கோப்பை போட்டியில் சர்ச்சை: பந்தைக் கையில் எடுத்த பேட்ஸ்மேன் ஆட்டமிழந்தார்! (விடியோ)

உருண்டோடி ஸ்டம்பைத் தாண்டி நின்றது. இதனால் பதற்றமான ஜிவேஷன், உடனே பந்தை...
யு 19 உலகக் கோப்பை போட்டியில் சர்ச்சை: பந்தைக் கையில் எடுத்த பேட்ஸ்மேன் ஆட்டமிழந்தார்! (விடியோ)

19 வயதுக்குள்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது.

தென் ஆப்பிரிக்கா - மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான போட்டி இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மே.இ. அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் குவித்தது. தொடக்க வீரராகக் களமிறங்கிய ஜிவேஷன் பிள்ளே 47 ரன்கள் எடுத்த நிலையில் ஃபீல்டிங்கைத் தடுத்ததாக நடுவரால் அறிவிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

அவர் அப்படி என்ன செய்தார்?

பந்தை அடிக்க முயலும்போது அது ஸ்டம்புக்கு அருகே விழுந்தது. உருண்டோடி ஸ்டம்பைத் தாண்டி நின்றது. இதனால் பதற்றமான ஜிவேஷன், உடனே பந்தைக் கையால் எடுத்து விக்கெட் கீப்பரிடம் வீசினார். விதிமுறைகளின்படி எதிரணியின் அனுமதியின்றி பந்தை பேட்ஸ்மேன் தொடக்கூடாது. இதனால் உடனே மே.இ. அணியின் கேப்டனும் விக்கெட் கீப்பரும் நடுவரிடம் அவுட்டுக்கு
முறையிட்டார்கள். இதனால் இந்த விவகாரம் மூன்றாவது நடுவரிடம் சென்றது. இதையடுத்து பலமுறை விடியோ காட்சிகளைப் பார்த்தபிறகு ஜிவேஷன் ஆட்டமிழந்ததாக மூன்றாவது நடுவர் அறிவித்தார். 

இச்சம்பவம் 17-வது ஓவரின்போது நடைபெற்றது. அப்போது ஸ்கோர் 77/2.

மேற்கிந்தியத் தீவுகள் அணி தங்கள் முறையீட்டில் உறுதியாக இருந்ததால் பேட்ஸ்மேன் அவுட் ஆக நேர்ந்தது. இதையடுத்து மே.இ. அணியின் முடிவை கிரிக்கெட் நிபுணர்களும் ரசிகர்களும் கடுமையாக விமரிசனம் செய்துள்ளார்கள்.

பந்து ஸ்டம்பில் படாததால் அவருடைய செயலைத் தவறெனச் சொல்லமுடியாது. அத்தருணத்தில் அவருக்கு பந்தை எடுத்து எதிரணிக்குத் தரவேண்டும் என்றுதான் தோன்றியிருக்கிறது. இதை எதிர்த்து
நடுவரிடம் முறையிடுள்ளது தவறானது என்கிற கருத்தைப் பலரும் தெரிவித்துள்ளார்கள். முன்னாள் வீரரும் நிபுணருமான பிஷப் கூறியதாவது: பேட்ஸ்மேன் ஆதாயம் தேட முயலவில்லை. அநியாயமாகவும் நடந்துகொள்ளவில்லை. நடுவர்களால் என்ன செய்யமுடியுமோ அதைச் செய்துள்ளார்கள். பேட்ஸ்மேனை அவுட் செய்த அந்த விதிமுறையை மீண்டும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com