ஹாக்கி: ஜப்பானை பந்தாடிய இந்தியா

நியூஸிலாந்தில் நடைபெறும் 4 நாடுகள் பங்கேற்றுள்ள ஹாக்கி போட்டியில் ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 6-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

நியூஸிலாந்தில் நடைபெறும் 4 நாடுகள் பங்கேற்றுள்ள ஹாக்கி போட்டியில் ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 6-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
இந்த ஆட்டத்தில் இந்தியாவின் சார்பில் தில்பிரீத் சிங், விவேக் சாகர் பிரசாத் தலா 2 கோல்களும், ரூபிந்தர் மற்றும் ஹர்மன்பிரீத் சிங் தலா ஒரு கோலும் அடித்தனர்.
ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியாவுக்கு, 7-ஆவது நிமிடத்திலேயே பெனால்டி வாய்ப்பு கிடைக்க அதை அற்புதமாக கோலாக்கினார் ரூபிந்தர். அடுத்து, ஆட்டத்தின் 12-ஆவது நிமிடத்தில் விவேக் சாகர் பந்தை அருமையாக கடத்திச் சென்று தனது முதல் கோலை பதிவு செய்தார்.
தொடர்ந்து 28-ஆவது நிமிடத்திலும் ஜப்பானின் தடுப்பாட்டத்தை தகர்த்து அவர் 2-ஆவது கோல் அடிக்க, முதல் பாதி முடிவில் 3-0 என முன்னிலை பெற்றது இந்தியா. தடுமாற்றத்துடன் ஆடி வந்த ஜப்பான், பிற்பாதியிலும் இந்தியாவை எதிர்கொள்ள இயலாமல் திணறியது.
35-ஆவது நிமிடத்தில் மன்பிரீத் சிங் உதவியுடன் இந்தியாவுக்கான 4-ஆவது கோலை பதிவு செய்தார் தில்பிரீத் சிங். அதேபோல், 41-ஆவது நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த 2-ஆவது பெனால்டி கார்னர் வாய்ப்பின் மூலமாக இந்தியாவை 5-0 என முன்னிலைப்படுத்தினார் ஹர்மன்பிரீத் சிங். கடைசியாக தில்பிரீத் சிங் 45-ஆவது நிமிடத்தில் தனது 2-ஆவது கோல் பதிவு செய்ய, இறுதியில் இந்தியா 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா வியாழக்கிழமை நடைபெறவுள்ள தனது 2-ஆவது ஆட்டத்தில் பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com