ஹாக்கி: பெல்ஜியத்திடம் வீழ்ந்தது இந்தியா

நியூஸிலாந்தில் 4 நாடுகள் பங்கேற்றுள்ள ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் பெல்ஜியத்திடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.
பெல்ஜியத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர்கள்.
பெல்ஜியத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர்கள்.

நியூஸிலாந்தில் 4 நாடுகள் பங்கேற்றுள்ள ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் பெல்ஜியத்திடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.
இதில் பெல்ஜியம் அணி முதல் மற்றும் 2-ஆவது பாதியில் தலா ஒரு கோல் அடிக்க, இந்தியாவுக்கு கிடைத்த 4 பெனால்டி கார்னர் வாய்ப்புகளுமே பொய்த்தது.
ஆட்டத்தின் 4-ஆவது நிமிடத்தில் பெல்ஜியத்தின் கோல் முயற்சியை திறமையாகக் கையாண்டு தடுத்தார் இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ். 
எனினும், 8-ஆவது நிமிடத்தில் பெல்ஜிய வீரர் செபாஸ்டியன் டாக்கீர், ரிவர்ஸ் ஷாட் முறையில் அடித்த பந்தை ஸ்ரீஜேஷ் தவறவிட, பெல்ஜியம் முன்னிலை பெற்றது.
12-ஆவது நிமிடத்தில் இந்தியாவுக்கு ரமன்தீப் சிங் மூலமாக கிடைத்த முதல் பெனால்டி கார்னர் வாய்ப்பு கோலடிக்க இயலாமல் வீணானது. 
தொடர்ந்து 22-ஆவது நிமிடத்தில் அர்மான், விவேக், மன்தீப் முயற்சியில் 2-ஆவது பெனால்டி கார்னர் வாய்ப்பை பெற்றது இந்தியா. ஹர்மன்பிரீத் சிங் டிராக்ஃப்ளிக் செய்த பந்தை, பெல்ஜிய வீரர் மிகச் சரியாகத் தடுக்க, அந்த வாய்ப்பும் பறிபோனது.
அடுத்த சில நிமிடங்களில் கோல் போஸ்ட்டை நோக்கி ரமன்தீப் சிங் அடித்த பந்து, சிறிய இடைவெளியில் வெளியே சென்று ஏமாற்றமளித்தது. இவ்வாறாக முதல் பாதியில் பெல்ஜியம் 1-0 என முன்னிலையில் இருந்தது. 2-ஆவது பாதியில் 34-ஆவது நிமிடத்தில் இந்திய தடுப்பாட்டத்தை தகர்த்த பெல்ஜிய வீரர் விக்டன் வெக்னஸ், அணியின் கோல் கணக்கை 2-ஆக உயர்த்தினார்.
தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் விவேக் சாகர் பிரசாத், ரமன்தீப் சிங் ஆகியோரின் பெனால்டி கார்னர் முயற்சிகலும் வீணாக, இறுதியில் பெல்ஜியம் வென்றது. இந்தியா வரும் சனிக்கிழமை தனது 3-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com