யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட்: விக்கெட் இழப்பின்றி இந்தியா வெற்றி

பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 20-ஆவது ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வென்றது.
யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட்: விக்கெட் இழப்பின்றி இந்தியா வெற்றி

பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 20-ஆவது ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வென்றது. இதன்மூலம் லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காமல் 'பி' பிரிவில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது இந்தியா.
இரு அணிகள் இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 48.1 ஓவர்களில் 154 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து ஆடிய இந்தியா விக்கெட் இழப்பின்றி 21.4 ஓவர்களில் 155 ரன்களுடன் வாகை சூடியது.
முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணியில் மில்டன் ஷும்பா மட்டும் அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார். கேப்டன் லியாம் ரோச் 31, வெஸ்லி மதெவர் 30 ரன்கள் அடிக்க, எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய தரப்பில் அனுகுல் ராய் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அர்ஷ்தீப் சிங், அபிஷேக் சர்மா தலா 2, ஷிவம் மாவி, ரியான் பராக் தலா ஒரு விக்கெட் சாய்த்தனர்.
பின்னர் களமாடிய இந்திய அணியில் தொடக்க வீரர்களான ஹர்விக் தேசாய்-சுபம் கில் ஜோடி ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தியது. 21.4 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்து வென்றது இந்தியா. தேசாய் 73 பந்துகளில் 8 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 56 ரன்களும், சுபம் கில் 59 பந்துகளில் 14 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 90 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். சுபம் கில் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
வெற்றிக்குப் பிறகு இந்திய கேப்டன் பிருத்வி ஷா கூறுகையில், 'காலிறுதி ஆட்டத்தை ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருக்கிறோம். 6 நாள்கள் இடைவெளி இருப்பதால் தகுந்த முறையில் பயிற்சி செய்து சிறப்பாகச் முன்னேறுவோம்' என்றார்.
காலிறுதியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான்: இதனிடையே, வெள்ளிக்கிழமை நடைபெற்ற இதர ஆட்டங்களில் வென்று ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் காலிறுதி வாய்ப்பை உறுதி செய்தன. இதில் ஆஸ்திரேலியா 311 ரன்கள் வித்தியாசத்தில் பப்புவா நியு கீனியாவை வென்றது. பாகிஸ்தான் 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com