ஆஸி.யை ஆக்கிரமித்தது இங்கிலாந்து

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இங்கிலாந்து 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸி.யை ஆக்கிரமித்தது இங்கிலாந்து

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இங்கிலாந்து 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதல் 3 ஆட்டங்களிலும் வென்று தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து.
சிட்னி நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 286 ரன்களுக்கு வீழ்ந்தது.
முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஃபீல்டிங் செய்தது. பேட் செய்த இங்கிலாந்தில் தொடக்க வீரர் ஜேசன் ராய் 19 ரன்களில் வெளியேற, உடன் வந்த ஜானி பேர்ஸ்டோவ் 39 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த அலெக்ஸ் ஹேல்ஸ் ஒரு ரன்னில் நடையைக் கட்டினார். ஜோ ரூட் 27, கேப்டன் இயான் மோர்கன் 41 ரன்கள் எட்டினர். கடைசி விக்கெட்டாக மொயீன் அலி 6 ரன்களுக்கு வீழ்ந்தார்.
அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட 100, கிறிஸ் வோக்ஸ் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் ஹேஸில்வுட் 2, பேட்ரிக் கம்மின்ஸ், ஸ்டாய்னிஸ், ஆடம் ஸம்பா, மிட்செல் மார்ஷ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய ஆஸ்திரேலியாவில் தொடக்க வீரர் ஆரோன் ஃபிஞ்ச் அரைசதம் கடந்து 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 62 ரன்கள் எடுக்க, உடன் வந்த டேவிட் வார்னர் 8 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து ஆடிய கேமரூன் ஒயிட் 17 ரன்களில் வீழ்ந்தார். பின்னர் வந்தவர்களில் கேப்டன் ஸ்மித் 45, மிட்செல் மார்ஷ் 55, ஸ்டாய்னிஸ் 56 ரன்கள் சேர்த்தனர்.
50 ஓவர்முடிவில் விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் 31, பேட்ரிக் கம்மின்ஸ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ், ஆதில் ரஷீத் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.
துளிகள்...
1 சொந்த மண்ணில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் 3 ஆட்டங்களில் ஆஸ்திரேலியா தோல்வியைத் தழுவியது இது முதல் முறையாகும். அந்நிய மண்ணிலுமாகச் சேர்த்து இது 6-ஆவது முறை.

38 கடந்த 2013 முதலாக ஒருநாள் போட்டிகளின் கடைசி 5 ஓவர்களில் மொத்தமாக 38 சிக்ஸர்கள் விளாசிய ஒரே வீரர் என்ற பெருமையை ஜோஸ் பட்லர் பெற்றுள்ளார். முன்னதாக, டி வில்லியர்ஸ் 37 சிக்ஸர்கள் விளாசியதே அதிகபட்சமாக இருந்தது.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com