ஆஸ்திரேலிய ஓபன்: காலிறுதியில் நடால்-சிலிச் மோதல்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் ஸ்பெயினின் ரஃபேல் நடால்-குரோஷியாவின் மரின் சிலிச் ஆகியோர் மோதவுள்ளனர்.
ஆஸ்திரேலிய ஓபன்: காலிறுதியில் நடால்-சிலிச் மோதல்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் ஸ்பெயினின் ரஃபேல் நடால்-குரோஷியாவின் மரின் சிலிச் ஆகியோர் மோதவுள்ளனர்.
 மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 4-ஆவது சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான நடால், போட்டித் தரவரிசையில் 24-ஆவது இடத்தில் இருந்த ஆர்ஜென்டீனாவின் டியேகோ ஷ்வார்ட்ஸ்மேனை எதிர்கொண்டார். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-3, 6-7(4/7), 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்றார் நடால்.
 வெற்றி குறித்து பேசிய நடால், "இந்த ஆட்டம் சிறந்த ஒன்றாக இருந்தது. டியேகோவின் விடாப்பிடியான ஆட்டத்தால் சற்று களைப்படைந்த போதிலும், இறுதிவரை போராடி வெற்றி பெற்றேன்' என்றார்.
 100-ஆவது வெற்றி: மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகின் 6-ஆம் நிலை வீரரான மரின் சிலிச், போட்டித் தரவரிசையில் 10-ஆவது இடத்தில் இருந்த ஸ்பெயினின் பாப்லோ கரீனோ பஸ்டாவை 6-7(2/7), 6-3, 7-6(7/0), 7-6(7/3) என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இது, கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மரின் சிலிச்சின் 100-ஆவது வெற்றியாகும்.
 நடாலுடனான காலிறுதி மோதல் குறித்து பேசிய சிலிச், "முதல் சுற்றிலிருந்தே கடினமான போட்டியாளர்களுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறேன். நடாலுக்கு எதிரான காலிறுதிச் சுற்று மிகவும் சவாலானதாக இருக்கும் என்பதால், அதை ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருக்கிறேன்' என்றார்.
 இதேபோல், உலகின் 3-ஆம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் 7-6(7/3), 7-6(7/4), 4-6, 7-6(7/4) என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 17-ஆவது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோûஸ வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் பிரிட்டனின் கைல் எட்மன்ட் 6-7(4/7), 7-5, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் இத்தாலியின் ஆன்ட்ரியாஸ் செபியை தோற்கடித்தார்.
 பயஸ்-பூரவ் ஜோடி தோல்வி
 ஆடவர் இரட்டையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-பூரவ் ராஜா ஜோடி தோல்வி கண்டது. போட்டித் தரவரிசையில் 11-ஆவது இடத்தில் இருந்த கொலம்பியாவின் ஜுவான் செபாஸ்டியன் காபல்-ராபர்ட் ஃப்ரா இணை 6-1, 6-2 என்ற செட் கணக்கில் பயஸ்-பூரவ் ஜோடியை வீழ்த்தியது.
வோஸ்னியாக்கி வெற்றி
 மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 6-3, 6-0 என்ற செட் கணக்கில் ஸ்லோவேகியாவின் மெக்தலினா ரைபரிகோவாவை வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
 அதில் அவர் ஸ்பெயினின் கார்லா சுவாரெஸ் நவாரோவை எதிர்கொள்கிறார். முன்னதாக நவாரோ தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போட்டித் தரவரிசையில் 32-ஆவது இடத்தில் இருந்த எஸ்டோனியாவின் ஆனெட் கோன்டாவிட்டை 4-6, 6-4, 8-6 என்ற செட் கணக்கில் வென்றார்.
 உலகின் 4-ஆம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 6-3, 6-0 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் டெனிசா அலர்டோவாவையும், பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டன்ஸ் 7-6(7/5), 7-5 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் பெட்ரா மார்டிச்சையும் வீழ்த்தினர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com