ஆஸ்திரேலிய ஓபன்: ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி 

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் 6 முறை சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
ஆஸ்திரேலிய ஓபன்: ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி 

ஹியோன் சங்கிடம் வீழ்ந்தார்


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் 6 முறை சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
இந்த ஆட்டத்தின்போது காயத்தில் ஏற்பட்ட வலியுடன் போராடிய ஜோகோவிச், தென் கொரியாவின் ஹியோன் சங்கிடம் வீழ்ந்தார்.
மெல்போர்ன் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் உலகின் 14-ஆம் நிலை வீரரான ஜோகோவிச்சும், 58-ஆம் நிலை வீரரான ஹியோன் சங்கும் மோதினர். விறுவிறுப்பாக 3 மணி 21 நிமிடங்கள் நடைபெற்ற ஆட்டத்தில் ஹியோன், 7-6(7/4), 7-5, 7-6(7/3) என்ற செட்களில் வென்றார்.
முன்னதாக, ஆஸ்திரேலிய ஓபனில் காலிறுதிக்கு முந்தைய சுற்று வரை முன்னேறிய முதல் தென் கொரிய வீரர் என்ற பெருமையை பெற்றிருந்த ஹியோன் சங், தற்போது காலிறுதிக்கு முன்னேறிய பெருமையையும் அத்துடன் சேர்த்துக்கொண்டார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச் தனது தொடக்க சுற்றில் நேர் செட்களில் ஹியோன் சங்கை வெளியேற்றியிருந்தார். அதற்கு தற்போது பதிலடி கொடுத்துள்ளார் ஹியோன் சங். 
இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே தடுமாறி வந்தார் ஜோகோவிச். தனது இரு தொடக்க சர்வீஸ்களில் அவர் டபுள் ஃபால்ட் செய்தார். முதல் செட்டின் முடிவில் வலி பொறுக்க முடியாத ஜோகோவிச் பயிற்சியாளரை அழைத்து வலது முழங்கை வலிக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டார்.
2-ஆவது செட்டின் ஒரு கேமின்போது பந்தை அடிக்க முயன்றபோது வலியால் கத்தினார். வலியால் நீண்ட ரேலிக்களை ஜோகோவிச் தவிர்க்க, ஆட்டத்தை தனக்கு சாதகமாக்கிய ஹியோன் சங், இறுதியில் வெற்றி பெற்றார்.
ஹியோன் சங் தனது காலிறுதியில், அமெரிக்காவின் டென்னைஸ் சேன்ட்கிரெனை சந்திக்கிறார். முன்னதாக டென்னைஸ் தனது 4-ஆவது சுற்றில் போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருந்த ஆஸ்திரியாவின் டொமினிக் தீமை 6-2, 4-6, 7-6(7/4), 6-7(7/9), 6-3 என்ற செட்களில் வீழ்த்தினார்.
ஃபெடரர் வெற்றி: மற்றொரு ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனும், உலகின் 2-ஆம் நிலை வீரருமான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 6-4, 7-6(7/3), 6-2 என்ற செட்களில் ஹங்கேரியின் மார்டன் ஃபக்சோவிக்ஸை வீழ்த்தினார். காலிறுதியில் ஃபெடரர், செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்சை எதிர்கொள்கிறார்.
போட்டித் தரவரிசையில் 19-ஆவது இடத்தில் இருக்கும் பெர்டிச், முந்தைய சுற்றில் 6-1, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினியை வென்றார்.
காலிறுதியில் கெர்பர்-கீஸ் மோதல்
மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச்சுற்று ஒன்றில் போட்டித் தரவரிசையில் 
21-ஆவது இடத்தில் இருக்கும் ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர்-அமெரிக்காவின் மேடிசன் கீஸ் ஆகியோர் மோதுகின்றனர்.
முன்னதாக கெர்பர் 4-6, 7-5, 6-2 என்ற செட்களில் தைவானின் சியே சு வெய்யை வீழ்த்தினார். போட்டித் தரவரிசையில் 17-ஆவது இடத்தில் இருக்கும் கீஸ், 6-3, 6-2 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் கரோலின் கார்சியாவை வென்றார்.
இதனிடையே, உலகின் முதல் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப் 6-3, 6-2 என்ற செட்களில் ஜப்பானின் நவோமி ஒசாகாவை வீழ்த்தினார். காலிறுதியில் அவர் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை எதிர்கொள்கிறார். உலகின் 6-ஆம் நிலையில் இருக்கும் கரோலினா முந்தைய சுற்றில் சகநாட்டவரான பார்போரா ஸ்டிரைக்கோவாவை 6-7(5/7), 6-3, 6-2 என்ற செட்களில் வீழ்த்தினார்.
இறுதிக்கு வந்தது இந்தியாவின் ஆட்டம்
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்களின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-பிரான்ஸின் எட்வர்ட் ரோஜர் வாùஸலின் இணை 4-6, 7-6(7/5), 3-6 என்ற செட்களில் குரோஷியாவின் மேட் பாவிச்-ஆஸ்திரியாவின் ஆலிவர் மராச் ஜோடியிடம் வீழ்ந்தது.
இதேபோல், இந்தியாவின் திவிஜ் சரண்-அமெரிக்காவின் ராஜீவ் ராம் ஜோடி 6-3, 6-7(4/7), 4-6 என்ற செட்களில் பிரேசிலின் மார்செலோ மெலோ-போலாந்தின் லுகாஸ் குபோட் இணையிடம் வீழ்ந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com