வியக்க வைக்கும் விராட் கோலி!

'கேப்டன் கூல்' என்றழைக்கப்பட்ட எம்.எஸ்.தோனிக்கு நேர் எதிரானவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி.
வியக்க வைக்கும் விராட் கோலி!

'கேப்டன் கூல்' என்றழைக்கப்பட்ட எம்.எஸ்.தோனிக்கு நேர் எதிரானவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. ஆட்டத்தின்போது பரபரப்பான நிமிடங்களில் பதற்றமான உணர்ச்சியை இவர் வெளிப்படுத்துவார். சில சமயங்களில் கோபமும் கொள்வார். இதனால், ரசிகர்களில் சிலருக்கு இவர் மீது வருத்தம் உண்டு.
ஆனாலும், தனது அபார ஆட்டத் திறனால் அணியின் ஸ்கோரை சரசரவென இவர் உயர்த்திவிடுவதாலும், வெற்றிக்காக கடும் உழைப்பை செலுத்தி வருவதாலும் கோலி மீது வருத்தம் கொள்ளும் ரசிகர்களும் அவரைப் பாராட்டி பின்தொடர்ந்து வருபவர்களாக மாறிவிடுகின்றனர்.
அப்படி, கடந்த சில ஆண்டுகளாக கிரிக்கெட்டில் தனிப்பட்ட முறையிலும், அணிக்காகவும் பல சாதனைகளைப் புரிந்து வருகிறார் கோலி.
இவர் பெறாத உயரிய விருதுகளே இல்லை என்று கூறிவிடலாம். அந்த வகையில் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் அர்ஜுனா விருதுக்காக கடந்த 2013-ஆம் ஆண்டில் கோலி தேர்வு செய்யப்பட்டார்.
அத்துடன், நாட்டின் குடிமகன்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான 'பத்மஸ்ரீ' விருதை இவருக்கு கடந்த ஆண்டு (2017) வழங்கி மத்திய அரசு கௌரவித்தது.
இருப்பினும், கிரிக்கெட்டில் சர்வதேச அளவில் சிறந்த வீரர் என்ற விருதைப் பெற வேண்டும் என்பது ஒவ்வொரு வீரரின் உயர்ந்த லட்சியங்களில் ஒன்றாக இருக்கும்.
அந்த லட்சியத்தையும் எட்டி விட்டார் விராட் கோலி.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அமைப்பால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவரும் மதிப்புமிக்க விருதான சர் கார்ஃபீல்டு சோபர்ஸ் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி முதல் முறையாக வென்றிருக்கிறார்.
2017-ஆம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற விருதுடன், சிறந்த ஒரு நாள் ஆட்டக்காரர் என்ற விருதுக்கும் ஐசிசி அமைப்பு அவரைத் தேர்வு செய்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், ஐசிசியின் 2017-ஆம் ஆண்டுக்கான கௌரவ டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டனாகவும் இவர் தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் கடந்த ஆண்டு (2017) டிசம்பர் வரை சர்வதேச அளவில் கிரிக்கெட் வீரர்களின் செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
இந்தக் காலகட்டத்தில் தாம் பங்கேற்ற 18 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 8 சதங்கள், 3 அரை சதங்களுடன் சேர்த்து 2,203 ரன்களைக் குவித்திருக்கிறார் கோலி. அத்துடன், 31 ஒரு நாள் போட்டிகளில் 7 சதங்கள், 9 அரை சதங்களுடன் சேர்த்து 1,818 ரன்களையும், 10 டி-20 போட்டிகளில் 152.55 ஸ்டிரைக் ரேட்டுடன் 299 ரன்களும் அவர் பதிவு செய்திருக்கிறார்.
6 இரட்டைச் சதம்
கடந்த 2 ஆண்டுகளில் மொத்தம் 6 இரட்டைச் சதங்களைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளார் கோலி. கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 211 ரன்களையும், அதே ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 235 ரன்களையும் அவர் பதிவு செய்திருந்தார்.
முன்னதாக, அதே ஆண்டில் ஜூலை மாதம் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 283 பந்துகளில் தனது முதல் இரட்டைச் சதத்தைப் பதிவு செய்திருந்தார் கோலி.
அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டில் பிப்ரவரி, நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் முறையே வங்கதேசம், இலங்கை அணிகளுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் மேலும் 3 இரட்டை சதங்களைப் பதிவு செய்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 இரட்டைச் சதங்களைப் பதிவு செய்திருந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை கோலி சமன் செய்தார்.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக அதிகபட்ச ரன்களை (243) பதிவு செய்த ஒரே வீரர் என்ற சாதனையையும் கோலி படைத்துள்ளார். அத்துடன், கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 9 டெஸ்ட் தொடர்களை வென்று, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையையும் அவர் சமன் செய்தார்.

சர் கார்ஃபீல்டு சோபர்ஸ் கோப்பை
ஐசிசி அமைப்பு கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சிறந்த வீரரைத் தேர்வு செய்து சர் கார்ஃபீல்டு சோபர்ஸ் கோப்பையை வழங்கி கௌரவித்து வருகிறது.
இந்தக் கோப்பை, 4,200-க்கும் அதிகமான சிறுசிறு கிறிஸ்டல் கற்கள் பதிக்கப்பட்ட பந்துடன் காட்சி அளிக்கும். தங்கத்தால் ஆன அடிப் பகுதியுடன் இணைக்கப்பட்ட பித்தளை கைப்பிடியில் இந்தப் பந்து வைக்கப்பட்டிருக்கும். 
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கேப்டனும், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக மதிக்கப்படுபவருமான கார்ஃபீல்டு சோபர்ஸின் பெயரில் இந்த விருது வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த 2011-ஆம் ஆண்டு முதல், எல்ஜி ஐசிசி விருதுகள் என்றும் இவ்விருது அழைக்கப்படுகிறது.

இதுவரை வென்ற வீரர்கள் 


கார்ஃபீல்டு சோபர்ஸ் கோப்பையை முதன்முதலில் வென்ற வீரர் என்ற பெருமை இந்திய வீரரையே சேரும். இவ்விருதை வென்ற முதல் இந்தியர், முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட்.
அதைத் தொடர்ந்து, 2005-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் ஜாக் காலிஸ், இங்கிலாந்தின் ஆண்ட்ரூ ஃபிளிண்டாஃப் ஆகியோருக்கு இவ்விருது பகிர்ந்தளிக்கப்பட்டது. மே.இ.தீவுகள் அணியின் சிவநாராயண் சந்திரபால் (2008), ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஜான்சன் (2009, 2014), கிரிக்கெட் உலகின் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரரான சச்சின் டெண்டுல்கர் (2010), இங்கிலாந்தின் ஜொனாதன் டிராட் (2011), இலங்கை வீரர் குமார் சங்ககாரா (2012), ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் (2013), மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான ஸ்டீவ் ஸ்மித் (2015) ஆகியோர் இந்த விருதுகளை இதுவரை வென்றுள்ளனர்.

2 முறை வென்ற வீரர் ..! 
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், தொடர்ச்சியாக கார்ஃபீல்டு சோபர்ஸ் கோப்பையை 2 முறை (2006, 2007) கைப்பற்றினார். 

தேர்வு செய்வது எப்படி?
இந்த விருதுக்கான வீரரை 56 தனிநபர்கள் கொண்ட “'அகாதெமி'”குழு தேர்வு செய்யும். அந்தக் குழுவில், ஐசிசி நடுவர்கள், முன்னாள் வீரர்கள் உள்ளிட்டோர் அங்கம் வகிப்பர். 
வாக்கு எண்ணிக்கையில் சமநிலை ஏற்படும் பட்சத்தில் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு விருது பகிர்ந்தளிக்கப்படும்.

அஸ்வினைத் தொடர்ந்து... 
கடந்த ஆண்டு (2016) இந்த விருதை வென்ற மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். தற்போது இந்த விருதை மீண்டும் ஒரு இந்திய வீரர் வென்றுள்ளார்.
கிரிக்கெட் உலகில் இந்த விருதை வென்றுள்ள ஜாம்பவான்களின் வரிசையில் கோலியும் இடம்பிடித்துள்ளார். 'ஐசிசியின் சிறந்த ஒரு நாள் வீரர் விருதை கடந்த 2012-ஆம் ஆண்டு வென்றிருக்கிறேன். இந்த முறை அந்த விருதுடன் சர் கார்ஃபீல்டு சோபர்ஸ் கோப்பையையும் வெல்வது எனக்கான மிகப் பெரிய கௌரவம்' என்று விராட் கோலி பெருமிதம் கொண்டார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியை சர்வதேசத் தரவரிசையில் முதல் இடத்துக்குக் கொண்டு சென்ற கோலி, டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 900 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கருக்கு அடுத்தபடியாக இந்தச் சாதனையை எட்டிய இரண்டாவது இந்திய வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளை எட்டி முத்திரை பதிப்பதுடன் தாய்நாட்டுக்கும் விராட் கோலி மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துவோம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com