2-ஆவது இன்னிங்ஸில் இந்தியா அபாரம்: தென் ஆப்பிரிக்காவுக்கு 241 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது 2-ஆவது இன்னிங்ஸில்...
2-ஆவது இன்னிங்ஸில் இந்தியா அபாரம்: தென் ஆப்பிரிக்காவுக்கு 241 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம்

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் புதன்கிழமை தொடங்கி நடைபெறுகிறது.

கேப் டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்திலும், செஞ்சுரியனில் நடைபெற்ற 2-ஆவது டெஸ்டில் 135 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

இந்நிலையில், 3-ஆவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 187 ரன்களுக்குச் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 54 ரன்களும், புஜாரா 50 ரன்களும், புவனேஸ்வர் குமார் 30 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

தென் ஆப்பிரிக்க அணியின் அற்புதமான வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இதர வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களுடன் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். அந்த அணி தரப்பில் ரபாடா 3 விக்கெட்டுகளும், மோர்கல், பிலாண்டர், பெலுக்வாயோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். நிகிடி 1 விக்கெட் எடுத்தார்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 194 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஆம்லா 61, பிலாண்டர் 35, நிகிடி 30 ரன்கள் எடுத்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 7 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்திய தரப்பில் அபாரமாக பந்துவீசிய பும்ரா 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

7 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்களின் கடுமையான சவாலுக்கு தக்க பதிலடி அளித்தது.

துவக்க வீரர் முரளி விஜய் 127 பந்துகளை சந்தித்து 1 பவுண்டரி மட்டும் அடித்து 25 ரன்கள் சேர்த்தார். கேப்டன் விராட் கோலி 6 பவுண்டரிகளின் உதவியுடன் 41 ரன்கள் எடுத்தார். அதிகபட்சமாக அஜிங்க்ய ரஹானே 6 பவுண்டரிகளின் உதவியுடன் 48 ரன்கள் விளாசினார்.

2-ஆவது இன்னிங்ஸிலும் நங்கூரமாய் நின்ற புவனேஸ்வர் குமார் 33 ரன்கள் சேர்த்தார். அதிரடியாக ஆடிய முகமது ஷமி 28 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 27 ரன்கள் விளாசினார். இதனால் இந்திய அணி 247 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

தென் ஆப்பிரிக்க தரப்பில் பிலாண்டர், மோர்கல், ரபாடா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். நிகிடி 1 விக்கெட் எடுத்தார். இதனால் இப்போட்டியில் வெற்றிபெற தென் ஆப்பிரிக்க அணிக்கு 241 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com