பரபரப்பான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி!

பரபரப்பான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி!

அபார பந்துவீச்சினால் இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி அளித்த கம்மின்ஸ் ஆட்ட நாயகனாகத் தேர்வானார்... 

இதை யார் எதிர்பார்த்திருக்கமுடியும்? ஆஸ்திரேலியா கூட எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா இங்கிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது. வானிலையும் ஆடுகளமும் பந்துவீச்சுக்குச் சாதகமாக இருந்தாலும் இங்கிலாந்து அணியினரால் இந்தச் சூழலைச் சமாளிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 8 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து. இதை நம்பமுடியாத நிலையில் இருந்தார்கள் இங்கிலாந்து ரசிகர்கள். பிறகு, 120 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளையும் இழந்து பரிதாப நிலையில் தவித்தது. முதல் ஆறு பேட்ஸ்மேன்களில் நான்கு பேர் டக் அவுட் ஆகி வெளியேறி அதிர்ச்சியளித்தார்கள். 

ஆனால், எந்தவொரு நிலைமையிலும் மீண்டெழுவதற்கான திறனை கொண்ட இங்கிலாந்து அணிக்கு இன்று உதவியவர் கிறிஸ் வோக்ஸ். மறுபக்கம் விக்கெட்டுகள் தொடர்ந்து விழுந்தபோதும் அவரை மட்டும் ஆஸ்திரேலியாவால் அசைத்துப்பார்க்க முடியவில்லை. நம்பமுடியாத பேட்டிங் என்பார்களே, அதுதான் இது. 82 பந்துகளில் 5 சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடித்து 78 ரன்கள் குவித்தார் வோக்ஸ்.  மார்கன் 33 ரன்களும் மொயீன் அலி 33 ரன்களும் கர்ரேன் 35 ரன்களும் எடுத்து தங்கள் பங்குக்கு அணிக்கு உதவினார்கள். ஏற்கெனவே மூன்று ஒருநாள் போட்டிகளிலும் தொடரை வென்றுள்ள இங்கிலாந்து, அடிலெய்டில் நடக்கும் இந்த 4-வது ஒருநாள் போட்டியில் 44.5 ஓவர்களில் 196 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்வரிசை வீரர்களின் பொறுப்பான பேட்டிங்கால் கெளரவமான ஸ்கோரை அடைந்தது இங்கிலாந்து. ஆஸ்திரேலிய அணித் தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளும் டை, ஹேஸில்வுட் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.

இதன்பிறகு எளிதான இந்த இலக்கை 37 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. 136 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்ததால் ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியது. எனினும் தொடக்க வீரராகக் களமிறங்கிய டிராவிஸ் ஹெட், 107 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 96 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார். மிட்செல் மார்ஷ் 32 ரன்களும் பெயின் 25 ரன்களும் எடுத்தார்கள்.

அபார பந்துவீச்சினால் இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி அளித்த கம்மின்ஸ் ஆட்ட நாயகனாகத் தேர்வானார். 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 3-1 என முன்னிலை வகிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com