ஜோஹன்னஸ்பர்க் டெஸ்ட் தொடரும்: ஐசிசி தகவல்!

ஜோஹன்னஸ்பர்க் ஆடுகளம் தொடர்பான சர்ச்சையால் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி...
ஜோஹன்னஸ்பர்க் டெஸ்ட் தொடரும்: ஐசிசி தகவல்!

ஜோஹன்னஸ்பர்க் ஆடுகளம் தொடர்பான சர்ச்சையால் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடர்ந்து நடைபெறுவது குறித்த சந்தேகம் ஏற்பட்டது. எனினும் இன்றைய 4-ம் நாள் ஆட்டம் தொடரும் என ஐசிசி அறிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 2-ஆவது இன்னிங்ஸில் 80.1 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்தது. பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமான ஆடுகளமாக இருந்ததால் இந்திய வீரர்கள் ரன் எடுக்க மிகவும் சிரமப்பட்டார்கள். ஆடுகளம் பந்துவீச்சுக்கு மிகவும் சாதகமாக இருப்பதோடு அதிலுள்ள விரிசல்களால் பேட்டிங் செய்வது ஆபத்தானதாகவும் இருந்தது. பலமுறை பேட்ஸ்மேன்களின் கைகளைப் பந்து பதம் பார்த்தது. இதனால் ஆடுகளத்தின் தன்மை குறித்து நடுவர்கள் மிகவும் தீவிரமாகவும் விவாதித்தார்கள். 

இதையடுத்து 241 ரன்களை இலக்காகக் கொண்ட தென் ஆப்பிரிக்கா, 3-ஆம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி வெற்றி பெற இன்னும் 224 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ளன. அதனை சாய்க்கும் பட்சத்தில் இந்தியா முதல் வெற்றியை ருசிக்கும்.

241 ரன்களை இலக்காகக் கொண்ட தென் ஆப்பிரிக்கா 2-ஆவது இன்னிங்ஸை ஆடி வந்தபோது டின் எல்கர் காயம் காரணமாக ஆட்டம் முன்னதாக முடித்துக்கொள்ளப்பட்டது. டீன் எல்கர் 11, ஹசிம் ஆம்லா 2 ரன்களுடன் களத்தில் உள்ளனர். மார்க்ரம் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பவுன்சர் பந்து எல்கரின் ஹெல்மெட்டைத் தாக்கியதால் அவர் நிலைகுலைந்தார். இதனால் ஆடுகளத்தின் தன்மையில் சந்தேகம் கொண்ட நடுவர்கள் ஆட்டத்தை நிறுத்தினார். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து இரு அணிகளின் கேப்டன்களுடன் நடுவர்கள் கலந்தாலோசித்தார்கள். இதையடுத்து இன்றைய ஆட்டம் தொடரும், ஆடுகளத்தின் தன்மையை நடுவர்கள் அவ்வப்போது பரிசோதிப்பார்கள் என்று ஐசிசி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளிடையேயான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோஹன்னஸ்பர்க்கில் புதன்கிழமை தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா முதல் நாள் முடியும் முன்பாகவே 77 ஓவர்களில் 187 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அணியில் அதிகபட்சமாக கோலி 54, புஜாரா 50 ரன்கள் எடுத்தனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் ரபாடா 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 65.5 ஓவர்களில் 194 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய பந்துவீச்சாளர் பும்ராவின் வேகத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால், முதல் இன்னிங்ஸில் இந்தியாவை விட 7 ரன்களே முன்னிலை பெற்றது அந்த அணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com