ஆதில் ரஷித் சுழலில் 256 ரன்களுக்கு கட்டுப்பட்ட இந்தியா

ஆதில் ரஷித் சுழலில் 256 ரன்களுக்கு கட்டுப்பட்ட இந்தியா

3-ஆவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 256 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்துவீசிய ஆதில் ரஷித் 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

3-ஆவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 256 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்துவீசிய ஆதில் ரஷித் 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-ஆவது ஒருநாள் போட்டி ஹெட்டிங்லீயில் அமைந்துள்ள லீட்ஸ் மைதானத்தில் செவ்வாய்கிழமை பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர் ரோஹித் ஷர்மா 2 ரன்களுடன் வெளியேறினார். பின்னர் ஷிகர் தவனுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலி, நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தார். 44 ரன்கள் சேர்த்த நிலையில், ஷிகர் தவன் ரன்-அவுட்டானார். 

அரைசதம் கடந்த கேப்டன் விராட் கோலி 72 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் 21, சுரேஷ் ரெய்னா 1 ரன்களுக்கு வெளியேற, இந்திய அணி 158 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

பின்னர் மகேந்திர சிங் தோனியுடன், ஹார்த்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். இருப்பினும் இதுவும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. பாண்டியா 21 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். இதனால் இந்திய அணி 194 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. இதனிடையே தடுப்பாட்டம் ஆடி வந்த தோனி 66 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 42 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மைதானத்தில் இருந்து ரசிகர்கள் அவருக்கு எதிராக குரல் எழுப்பினர்.

கடைசியாக புவனேஸ்வர் குமார் 21, ஷர்துல் தாக்கூர் 22* ரன்கள் சேர்க்க, இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஆதில் ரஷித் 10 ஓவர்களில் 49 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். டேவிட் வில்லி 3 விக்கெட்டுகளும், மார்க் உட் 1 விக்கெட் எடுத்தனர்.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் வெற்றிபெறும் அணி ஒருநாள் தொடரை வெல்லும். ஏற்கனவே நடைபெற்ற டி20 தொடரை 2-1 என இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com