ஜெர்மனி கால்பந்து அணிக்காக இனி விளையாட மாட்டேன்: பிரபல வீரர் சர்ச்சைக்குரிய அறிவிப்பு

ஜெர்மனி அணி சீருடையை மிகவும் பெருமையுடன் அணிந்துகொள்வேன். ஆனால் தற்போது அவ்வாறு உணரவில்லை...
ஜெர்மனி கால்பந்து அணிக்காக இனி விளையாட மாட்டேன்: பிரபல வீரர் சர்ச்சைக்குரிய அறிவிப்பு

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாகக் கருதப்பட்ட நடப்பு சாம்பியனான ஜெர்மனி முதல் சுற்றோடு வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. உலகக் கோப்பை வரலாற்றில் கடந்த 80 ஆண்டுகளில் ஜெர்மனி முதல் சுற்றோடு வெளியேறுவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்னர் 1938-ல் முதல் சுற்றோடு வெளியேறிய ஜெர்மனி, அதன்பிறகு இப்போதுதான் முதல் சுற்றைத் தாண்ட முடியாத சோகத்தோடு நாடு திரும்பியுள்ளது. 

இந்நிலையில் ஜெர்மனி கால்பந்து அணியின் பிரபல வீரர் மெசூத் ஒஸில், இனிமேல் தான் ஜெர்மனி அணிக்காக விளையாடப் போவதில்லை என அறிவித்துள்ளார். கடந்த மே மாதம் லண்டனில் துருக்கிய அதிபர் ரெசெப் தயிப் எர்டோகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் இதற்கு ஒரு முக்கியக் காரணமாக அமைந்துவிட்டது. மெசூத் ஜெர்மனியில் பிறந்தாலும் அவருடைய குடும்பத்தினர் துருக்கியிலிருந்து ஜெர்மனியில் குடிபுகுந்தவர்கள். 

ஜெர்மனி அணி 2014-ல் உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கியக் காரணமாக இருந்தார் மெசூத். 92 ஆட்டங்களில் விளையாடியுள்ள மெசூத், 2011 முதல் ரசிகர்களால் சிறந்த வீரராக ஐந்துமுறை தேர்வு செய்யப்பட்டார். 

ஆனால் சமீபகாலமாக ஊடகங்களாலும் ஜெர்மனி கால்பந்து சங்கத்தாலும் தான் நடத்தப்பட்டவிதத்தால் இனி ஜெர்மனி அணிக்கு விளையாடப்போவதில்லை என மெசூத் அறிவித்துள்ளார். உலகக் கோப்பை வெற்றியாளராக இருந்தாலும் நல்ல காரியங்களுக்காக நிதி உதவி செய்திருந்தாலும் வருமான வரி கட்டினாலும் ஜெர்மனி மக்களால் தான் ஏற்கப்பட்டதாக நினைக்கவில்லை. சமீபத்திய நிகழ்வுகளால் இனப்பாகுபாடு, அவமரியாதை போன்றவற்றை உணர்கிறேன் என அவர் கூறியுள்ளார். துருக்கி அதிபருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டதற்கு மெசூத் ஜெர்மனி கால்பந்து சங்கத்தால் விமரிசனம் செய்யப்பட்டார். அரசியல்வாதிகளும் மெசூத்துக்குக் கண்டனம் தெரிவித்தார்கள். இந்நிலையில் தன்னுடைய முடிவு குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளதாவது:

ஜெர்மனி அணி சீருடையை மிகவும் பெருமையுடன் அணிந்துகொள்வேன். ஆனால் தற்போது அவ்வாறு உணரவில்லை. 2009-லிருந்து சர்வதேசப் போட்டிகளில் நான் சாதித்தவை எல்லாம் மறக்கடிக்கப்பட்டுள்ளன. நான் இங்குத் தேவையற்றவனாக மாறிவிட்டதாக உணர்கிறேன். 

துருக்கிய அதிபருடன் நான் புகைப்படம் எடுத்துக்கொண்டது அரசியலுக்காகவோ தேர்தல் விவகாரங்களுக்காகவோ அல்ல. என் கடமை, கால்பந்து விளையாடுவதுதான். அரசியல் செய்வது அல்ல. நான் அரசியல்வாதி அல்லன்.  நானும் அதிபரும் கால்பந்து குறித்துதான் பேசினோம். என் குடும்பத்தினரின் தேசத்தின் உயர்ந்த தலைவருக்கு மதிப்பளிக்கவே அவ்வாறு செய்தேன். 

எனக்கு இரு இதயங்கள். ஒன்று ஜெர்மனிக்காகவும் மற்றொன்று துருக்கிக்காகவும் துடிக்கிறது. ஆனால் ஜெர்மனி ஊடகங்கள் என் இரு நாட்டு பாரம்பரியத்தைக் குற்றம் சொல்வதையும் அதை உலகக் கோப்பைத் தோல்வியுடன் இணைப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் கால்பந்து உலகக் கோப்பையில்  நான் வெளிப்படுத்திய பங்களிப்பைக் குறை சொல்லவில்லை. என் துருக்கிய மரபைக் குறை சொல்கிறார்கள். ஜெர்மனி தேசத்தை எனக்கு எதிராகத் திருப்புகிறார்கள். 

ஜெர்மனி கேப்டன் இன்னொரு உலகத் தலைவரைச் சந்தித்தார். ஆனால் அது, ஊடக விமரிசனத்தைப் பெறவில்லை. என் துருக்கிப் பின்புலம் மட்டும் தாக்குதலுக்கு ஆளாவது ஏன்? 

ஜெர்மனி அணி வெற்றி பெறுகிறபோது நான் ஜெர்மனி வீரனாகவும் தோற்றால் வந்தேறியாகவும் பார்க்கப்படுகிறேன். ஜெர்மனியைச் சேர்ந்த குடிமகனாக இருப்பதற்கு எனக்குத் தகுதி எதுவும் இல்லையா? இதர நாடுகளின் பின்னணி கொண்டவர்கள் இதுபோல குற்றச்சாட்டை எதிர்கொள்வதில்லை. நான் துருக்கியைச் சேர்ந்தவனாக, முஸ்லிமாக உள்ளதால் என்மீது விமரிசனம் வைக்கப்படுகிறதா? நான் ஜெர்மனியில் பிறந்து இங்குக் கல்வி பயின்றவன். என்னை ஏன் ஜெர்மனி குடிமகனாக எண்ணுவதில்லை. இனப்பாகுபாடு ஒருபோதும் இருக்கக்கூடாது என்று விளக்கம் அளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com