ஆசிய ஜூனியர் பாட்மிண்டன்: பட்டம் வென்றார் லக்ஷயா சென்

இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சென் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஆசிய ஜூனியர் பாட்மிண்டன்: பட்டம் வென்றார் லக்ஷயா சென்

இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சென் சாம்பியன் பட்டம் வென்றார். இப்போட்டியில் தங்கம் வெல்லும் 3-ஆவது இந்தியர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 முன்னதாக, போட்டித் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருக்கும் லக்ஷயா சென், இறுதிச்சுற்றில் நடப்பு ஜூனியர் உலக சாம்பியனான தாய்லாந்தின் குன்லவுத் விடித்சார்னை 21-19, 21-18 என்ற செட்களில் வீழ்த்தினார். இந்த ஆட்டம் 46 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
 வெற்றிக்குப் பிறகு லக்ஷயா சென் கூறியதாவது:
 இப்போட்டியில் பெற்ற வெற்றி, எனது நம்பிக்கைக்கு மேலும் ஊக்கமளிக்கிறது. அணிகள், தனிநபர் என இரு பிரிவுகளிலும் கலந்துகொண்டதால், மிக நீண்ட போட்டியாக இருந்தது. அதனால், ஒவ்வொரு ஆட்டத்துக்குப் பிறகும் ஆற்றலை மீட்டெடுப்பது சவாலாக இருந்தது. எனினும், அவ்வாறு போட்டியிட்டு பட்டம் வென்றதில் மகிழ்ச்சி.
 தொடர் ஆட்டம் காரணமாக காலில் காயம் ஏற்பட்டு, மருந்துகள் எடுத்துக்கொண்டேன். எனது பயிற்சித் திட்டத்திலும் மாற்றம் கொண்டுவர வேண்டியிருந்தது என்று லக்ஷயா சென் கூறினார்.
 இப்போட்டியில் லக்ஷயா சென்னுக்கு முன்பாக, மறைந்த கெüதம் தக்கார் (1965), பி.வி.சிந்து (2012) ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றிருந்தனர். ஒற்றையர் பிரிவில் இது தவிர, 2011-இல் சிந்து வெண்கலம், சமீர் வர்மா 2011-இல் வெள்ளி, 2012-இல் வெண்கலம், லக்ஷயா சென் 2017-இல் வெண்கலம் வென்றிருந்தனர். இரட்டையர் பிரிவில் பிரணவ் ஜெர்ரி சோப்ரா/பிரஜக்தா சாவந்த் இணை 2009-இல் வெண்கலம் வென்றிருந்தது.
 ரூ.10 லட்சம் பரிசு
 ஆசிய ஜூனியர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ள லக்ஷயா சென்னுக்கு, இந்திய பாட்மிண்டன் சங்கம் ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அறிவித்துள்ளது.
 மேலும், லக்ஷயாவுக்கான வாழ்த்துச் செய்தியில் அச்சங்கத் தலைவர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறுகையில், "நாட்டை பெருமை அடையச் செய்துள்ளார் லக்ஷயா சென். நமது இளம் வீரர்களை மேம்படுத்த நாங்கள் உதவுகிறோம். அதற்கு இவ்வாறு பலன் கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com