நியூஸிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா

நியூஸிலாந்துக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி ஹாக்கி டெஸ்ட் போட்டியில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் வென்றது
நியூஸிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா

நியூஸிலாந்துக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி ஹாக்கி டெஸ்ட் போட்டியில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இதையடுத்து, 3 ஆட்டங்களைக் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது இந்தியா.
 கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் இந் தியாவின் சார்பில் ரூபிந்தர் பால் சிங், சுரேந்தர் குமார், மன்தீப் சிங், ஆகாஷ்தீப் சிங் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
 விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியது இந்தியா, முதல் கால்மணி நேரத்துக்குள்ளாகவே 2 கோல்களை எட்டியது. 8-ஆவது நிமிடத்தில் இந்தியாவுக்கு 2-ஆவதாக கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பைக் கொண்டு கோல் கணக்கை தொடங்கினார் ரூபிந்தர் பால் சிங். இது, இந்தத் தொடரில் அவரது 4-ஆவது கோலாகும்.
 இதனால் ஊக்கம் பெற்ற இந்திய அணியினர் துடிப்போடு ஆட, 15-ஆவது நிமிடத்திலேயே இந்தியாவின் கோல் எண்ணிக்கை இரண்டானது. இந்த முறை, ரூபிந்தர் பாஸ் செய்து கொடுத்த பந்தை திறமையாகக் கையாண்ட சுரேந்தர் குமார், அதை தவறாமல் ஃபீல்டு கோலாக்கினார்.
 இவ்வாறாக முதல் பாதி நிறைவடைய, அதில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. பின்னர் தொடங்கிய 2-ஆவது பாதியில் நியூஸிலாந்து தனது முதல் கோலுக்காக போராடி வந்த நிலையில், இந்தியா தனது 3-ஆவது கோலை எட்டியது.
 ஆட்டத்தின் 44-ஆவது நிமிடத்தில் மூத்த வீரர் சர்தார் சிங், சிம்ரன்ஜித் சிங் ஆகியோர் உதவியுடன், நியூஸிலாந்து கோல்கீப்பர் ஜார்ஜ் எனர்சனை கடந்து அருமையான கோலடித்தார் மன்தீப் சிங். இறுதியாக, ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் (60-ஆவது நிமிடம்) இந்திய வீரர் ஆகாஷ்தீப் அடித்த கோலால் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
 இந்தியாவின் வெற்றி குறித்து பயிற்சியாளர் ஹரேந்திர சிங் கூறுகையில், "ஆசிய விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் நிலையில், இந்திய அணியின் இந்தத் தொடர் வெற்றி திருப்தி அளிப்பதாக உள்ளது. இத்தொடரின்போது, சோதனை முறையில் அணியில் பல்வேறு மாற்றங்கள் கையாளப்பட்டன' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com