தென்கொரியாவை வீழ்த்தியது ஸ்வீடன்

தென்கொரிய அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்வீடன் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
வெற்றி கோலை அடித்த ஆன்டிரியஸ் கின்கிவிஸ்ட் 
வெற்றி கோலை அடித்த ஆன்டிரியஸ் கின்கிவிஸ்ட் 

தென்கொரிய அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்வீடன் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
குரூப் எஃப் பிரிவில் இடம் பெற்றுள்ள இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. ஆட்டம் தொடங்கியது முதலே தென்கொரிய வீரர்கள் ஹவாங் ஹீ சான், சன் ஹியுங் மின் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டாலும், முதல் பாதியை நிதானமாக ஆடி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது ஸ்வீடன். கொரியாவின் தற்காப்பு அரணை பலமுறை ஸ்வீடன் வீரர்கள் ஊடுருவி கோலடிக்க முயன்றனர். முதல் பாதி ஆட்டம் முடியும் நேரத்தில் அந்த அணி வீரர் விக்டர் கௌசன் அடித்த கார்னர் கிக் பந்து கோல்கம்பத்துக்கு மேலே சென்று விட்டது. முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது.
இரண்டாம் பாதியில் இரு அணிகளுக்கு சில வாய்ப்புகள் கிடைத்தும் கோலடிக்க முடியவில்லை. 65-வது நிமிடத்தின் போது கொரிய வீரர் கிம் மின் ஊ பவுல் செய்தார். ஆனால் நடுவர் ஸ்வீடனுக்கு பெனால்டி வாய்ப்பு தரவில்லை. இதையடுத்து விடியோ உதவி நடுவர் முறை வார் மூலம் பதிவு பார்க்கப்பட்டு பெனால்டி கிக் வாய்ப்பு தரப்பட்டது. ஸ்வீடன் வீரர் ஆன்டிரியஸ் கின்கிவிஸ்ட் அற்புதமாக கோலடித்தார். இதனால் 1-0 என முன்னிலை பெற்றது.
இதன் தொடர்ச்சியாக இரு அணிகளும் தொடர்ந்து கோலடிக்க மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை. இறுதியில் ஸ்வீடன் 1-0 என கொரியாவை வென்றது.
இதே பிரிவில் ஏற்கெனவே மெக்ஸிகோ அணி நடப்புச் சாம்பியன் ஜெர்மனியை வென்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
குரூப் எஃப் பிரிவில் மெக்ஸிகோ, ஸ்வீடன் தலா 3 புள்ளிகள் பெற்றுள்ளன.

பீர் உற்பத்தி நிறுவன விருது பெற எகிப்து கோல்கீப்பர் மறுப்பு
பீர் உற்பத்தி செய்யும் நிறுவ னமான பட்வெய்ஸர் சிறந்த வீரருக்கான விருதை ஸ்பான்சர் செய்துள்ளது. உருகுவேக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 என எகிப்து வென்றது. அந்த ஆட்டத்தில் எதிரணி கோலடிக்கும் வாய்ப்புகளை சிறப்பாக தடுத்ததால் சிறந்த வீரர் விருது கோல்கீப்பர் எல்ஷனாவிக்கு வழங்கப்பட்டது.
ஆனால் இஸ்லாமிய கோட்பாடுகளின்படி மது அருந்தக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளதால், பட்வெய்ஸர் நிறுவனம் வழங்கிய விருதை ஏற்க எல்ஷனாவி மறுத்து விட்டார். விருதை பெற அவர் மறுக்கும் படம் சமூகவலை தளங்களில் வேகமாக பரவியுள்ளது.

ஜப்பானுக்கு தோல்வி: கிளி கணிப்பு
ஜப்பான்-கொலம்பியா அணிகள் இடையிலான ஆட்டத்தில் ஜப்பானுக்குதோல்வியே கிடைக்கும் என ஓலிவியா கிளி கணித்துள்ளது.
இந்நிலையில் ஜப்பானில் வடக்கு டோக்கியோ டோசிகி பகுதியில் விலங்குகள் வாழ்விடத்தில் உள்ள ஓலிவியா என்ற கிளிக்கு கணிப்புத் திறன் உள்ளதாக கூறப்படுகிறது.
சாம்பல் நிறம் கொண்ட அந்த கிளியிடம் கொலம்பிய-ஜப்பான் அணி முடிவு குறித்து கணிக்கும்படி கூறப்பட்டது. இரு நாட்டுக் கொடிகள் வைக்கப்பட்ட இடத்துக்கு சென்ற ஓலிவியா கொலம்பிய நாட்டு கொடியை தனது அலகால் எடுத்து தேர்வு செய்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com