481 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்த இங்கிலாந்து ஒருநாள் அணி! ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி!

ஒருநாள் கிரிக்கெட்டில் 450 ரன்களைக் கடந்த முதல் அணி என்கிற பெருமையை இங்கிலாந்து அணி பெற்றுள்ளது.
481 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்த இங்கிலாந்து ஒருநாள் அணி! ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி!

50 ஓவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் நாட்டிங்ஹாமில் செவ்வாய்க்கிழமை நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 50 ஓவர்களில் 481 ரன்களைக் குவித்து இங்கிலாந்து உலக சாதனை  படைத்தது. 

கடந்த 2016-ல் ஏற்கெனவே தான் படைத்திருந்த 444 ரன்கள் உலக சாதனையை இங்கிலாந்து அணியே மீண்டும் முறியடித்துள்ளது. அந்த அணி வீரர்கள் அலெக்ஸ் ஹேல்ஸ், ஜானி பேர்ஸ்டோவ் சிறப்பாக ஆடி சதமடித்தனர். தொடக்க வீரர்களான ராய் 61 பந்துகளில் 82 ரன்களும் பேர்ஸ்டோவ் 92 பந்துகளில் 139 ரன்களும் குவித்து மகத்தான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார்கள். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 19.3 ஓவர்களில் 159 ரன்கள் சேர்த்தார்கள். மூன்றாவதாகக் களமிறங்கிய ஹேல்ஸ், 92 பந்துகளில் 147 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணியின் ஸ்கோரை மேலும் உயர்த்தினார். ஆட்டத்தின் பின்பகுதியில் களமிறங்கிய மார்கன், 30 பந்துகளில் 6 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணி உலக சாதனை ஸ்கோரைக் குவிக்கப் பெரிதும் உதவினார். ஆஸ்திரேலிய அணியின் ஆண்ட்ரூ டை 9 ஓவர்களில் 100 ரன்கள் கொடுத்து அதிர்ச்சி ஏற்படுத்தினார். ரிச்சர்ட்சன் 92 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

ஒருநாள் கிரிக்கெட்டில் 450 ரன்களைக் கடந்த முதல் அணி என்கிற பெருமையை இங்கிலாந்து அணி பெற்றுள்ளது.

இதையடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 37 ஓவர்களில் 239 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இங்கிலாந்து அணி, 242 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. தொடக்க வீரர் ஹெட் மட்டும் அரை சதம் எடுத்தார். இங்கிலாந்தின் ரஷித் 4 விக்கெட்டுகளும் மொயீன் அலி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினார்கள். ஆட்ட நாயகன் விருது அலெக்ஸ் ஹேல்ஸுக்கு வழங்கப்பட்டது. ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய பெரிய வெற்றியை இங்கிலாந்தும் மிக மோசமான தோல்வியை ஆஸ்திரேலியாவும் அடைந்துள்ளன.

இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி வென்றுள்ளது. தற்போது அந்த அணி 3-0 என முன்னிலை பெற்றுள்ளது. ஒருநாள் தொடரில் தோற்றது மட்டுமல்லாமல் மிக மோசமாகப் பந்துவீசியதும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களை மிகவும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் தரம் குறித்த கேள்விகளும் தற்போது எழுந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com