இந்திய அணியில் விளையாட யோ யோ தேர்வு கட்டாயம்: ரவி சாஸ்திரி உறுதி!

தேர்ச்சியடைய முடியவில்லையென்றால் நடையைக் கட்டலாம்... 
இந்திய அணியில் விளையாட யோ யோ தேர்வு கட்டாயம்: ரவி சாஸ்திரி உறுதி!

யோ யோ தேர்வு இந்திய கிரிக்கெட்டில் பெரிய விவாதமாக மாறியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு, அம்பட்டி ராயுடுவைத் தேர்வு செய்தது பிசிசிஐ தேர்வுக்குழு. சென்னை ஐபிஎல் அணியில் சிறப்பாக விளையாடிய அம்பட்டி ராயுடு 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்றார். இந்நிலையில் இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய அணியினருக்கான உடற்தகுதித் தேர்வு பெங்களூரில் நடைபெற்றது. இதில், எதிர்பாராதவிதமாக ராயுடு தோல்வியடைந்தார். யோ யோ தேர்வில் 16.1 புள்ளிகளை எட்டவேண்டும். ஆனால் 32 வயது ராயுடு 14 புள்ளிகளை மட்டுமே எட்டியதால் இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தில் இடம்பெறவில்லை. அவரை அணியிலிருந்து நீக்கி, சுரேஷ் ரெய்னாவைத் தேர்வு செய்தது தேர்வுக்குழு. 

சமீபத்தில் முகமது ஷமி யோ யோ தேர்வில் தோல்வியடைந்ததால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக நவ்தீப் சைனி அணியில் இடம்பிடித்தார். அதேபோல இந்திய ஏ அணியிலிருந்து இதே காரணத்துக்காக சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டார். அடுத்ததாக ராயுடு. யோ யோ தேர்வினால் சமீபகாலமாக மூன்று வீரர்கள் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். இதனால் முன்னாள் வீரர்கள் பலரும் யோ யோ தேர்வுக்கு எதிராகக் கருத்து தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் அயர்லாந்து-இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி சார்பாக கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள். அப்போது, யோ யோ தேர்வு சர்ச்சை குறித்து ரவி சாஸ்திரி கூறியதாவது:

இந்திய அணியில் விளையாட வேண்டும் என்றால் யோ யோ தேர்வை அனைத்து வீரர்களும் எதிர்கொள்ள வேண்டும். ஒவ்வொரு தொடருக்கும் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் உங்களால் தேர்ச்சியடைய முடியும் என்றால் நல்லது. தேர்ச்சியடைய முடியவில்லையென்றால் நடையைக் கட்டலாம். இங்கு தவறுகளுக்கு இடமே இல்லை. அணியின் கேப்டன் வழிநடத்திச் செல்கிறார். தேர்வுக்குழுவினரும் பிசிசிஐ நிர்வாகமும் இதில் உறுதியாக உள்ளார்கள். யோ யோ தேர்வில் தேர்ச்சி அடைந்தால் அணிக்காக விளையாடலாம். இல்லாவிட்டால், வெளியே அமரவைக்கப்படுவீர்கள். இந்தத் தேர்வுக்கு வீரர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

இந்தத் தொடரில் இந்திய அணி உடனடியாக டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. ஒரு மாதம் கழித்த பிறகே டெஸ்ட் தொடர் ஆரம்பமாகிறது. இதனால் இங்கிலாந்தின் சூழல் வீரர்களுக்குக் கடினமாக இருக்காது என்று ரவி சாஸ்திரி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com