டென்மார்க்-ஆஸ்திரேலியா (1-1) டிரா

ஆஸ்திரேலியா-டென்மார்க் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.
கோலடித்த மகிழ்ச்சியில் ஆஸி. கேப்டன் ஜெடிநாக்.
கோலடித்த மகிழ்ச்சியில் ஆஸி. கேப்டன் ஜெடிநாக்.

ஆஸ்திரேலியா-டென்மார்க் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.
குரூப் சி பிரிவில் இடம் பெற்றுள்ள டென்மார்க்-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் வியாழக்கிழமை மாலை சமாராவில் நடைபெற்றது.
உலகக் கோப்பையில் இரு அணிகளும் மோதும் முதலாவது ஆட்டம் இதுவாகும். மொத்தம் மோதிய 4 ஆட்டங்களில் டென்மார்க் இரண்டிலும், ஆஸி. ஒன்றிலும் வென்றன. டென்மார்க் ஏற்கெனவே பெரு அணியை வென்ற உற்சாகத்தில் உள்ளது. அதே நேரத்தில் பிரான்ஸுடன் விடியோ உதவி நடுவர் முறையால் அதிர்ச்சித் தோல்வியடைந்தது ஆஸ்திரேலியா.
இந்த ஆட்டத்தில் வென்றால் தான் போட்டியில் நீடிக்க முடியும் என்பதால் தொடக்கம் முதலே ஆஸி வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் 7-வது நிமிடத்தில் டென்மார்க் அணியின் ஜோர்கென்சன் கடத்தி தந்த பந்தை நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் அற்புதமாக கோலடித்தார். இதனால் டென்மார்க் 1-0 என முன்னிலை பெற்றது. இது எரிக்சன் தனது அணிக்காக அடிக்கும் 15-வது கோலாகும்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆஸி அணி கேப்டனும், நட்சத்திர வீரருமான மைல் ஜெடிநாக் தலைமையில் தனது தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தியது. இதன் ஒரு பகுதியாக டென்மார்க் கோல்பகுதியில் ஜெடிநாக் பந்தை கடத்திச் சென்ற போது, சிமைச்சல் அவரை தடுக்க முயன்று பவுலானார்.
இதையடுத்து ஆஸி. அணிக்கு நடுவர் பெனால்டி கிக் வாய்ப்பை வழங்கினார். 38-வது நிமிடத்தில் அதை சரியாக பயன்படுத்தி ஜெடிநாக் கோலடித்தார். இதனால் முதல் பாதி ஆட்ட நிறைவில் 1-1 என சமநிலையில் இருந்தது.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்கலும் கோலடிக்க தீவிரமாக முயன்றும் முடியவில்லை. இரு அணிகளின் தடுப்பாட்டக்காரர்கள் சிறப்பாக ஆடி முன்கள வீரர்களின் முயற்சிகளை முறியடித்தனர். இறுதியில் 1-1 என ஆட்டம் டிராவில் முடிந்தது.
இதன் மூலம் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி கிடைத்தது. குரூப் சி பிரிவில் டென்மார்க் 4 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றது.
ஆஸி. அணி ஏறக்குறையை போட்டியை விட்டு வெளியேறும் நிலையில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com