பிரேஸில் முதல் வெற்றி: கோஸ்டா ரிகாவை வெளியேற்றியது பிரேஸில்

கோஸ்டா ரிகா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பிரேஸில் நாக் அவுட் சுற்று வாய்ப்பை உறுதி செய்தது.
வெற்றி கோலை அடிக்கும் நெய்மர்.
வெற்றி கோலை அடிக்கும் நெய்மர்.

கோஸ்டா ரிகா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பிரேஸில் நாக் அவுட் சுற்று வாய்ப்பை உறுதி செய்தது. இரு தோல்விகளை கண்ட கோஸ்டா ரிகா போட்டியில் இருந்து வெளியேறியது.
குரூப் ஈ பிரிவைச் சேர்ந்த பிரேஸில்-கோஸ்டா ரிகா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
இரு அணிகளும் ஏற்கெனவே 10 முறை மோதியுள்ளன. இதில் பிரேசில் 9 முறை வென்றது. கோஸ்டா ரிகா ஓரே ஒரு முறை மட்டுமே வென்றுள்ளது. பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றான பிரேஸில் தனது முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்துடன் டிரா செய்தது. காயத்தால் அவதிப்பட்ட அதன் நட்சத்திர வீரர் நெய்மர் அந்த ஆட்டத்தில் சரிவர விளையாடவில்லை. இதற்கிடையே கோஸ்டா ரிகா அணி தனது முதல் ஆட்டத்தில் செர்பியாவிடம் தோல்வியடைந்தது.
நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற இந்த ஆட்டத்தில் வென்றே தீர வேண்டும் என்ற நிலையில் பிரேஸில் களமிறங்கியது. ஆட்டத்தின் தொடக்க் முதலே அதன் வீரர்கள் நெய்மர், குட்டின்ஹோ, கப்ரியேல் ஜீஸஸ் ஆகியோர் தாக்குதல் ஆட்டத்தை கடைபிடித்தனர். 26-வது நிமிடத்தில் ஜீஸஸ் அடித்த பந்து கோஸ்டா ரிகா கோல்பகுதியில் புகுந்தும், அது ஆஃப் சைட் என அறிவிக்கப்பட்டது. நெய்மரும் இந்த ஆட்டத்தில் கோலடிக்க தீவிரமாக முயற்சி மேற்கொண்டார். எனினும் அவரது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் முதல் பாதி ஆட்ட நிறைவில் இரு அணிகளும் கோலடிக்கவில்லை.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் பிரேஸில் கட்டுப்பாட்டிலேயே பந்து இருந்து கோலடிக்க முடியவில்லை. கூடுதலாக 6 நிமிடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் கப்ரியேல் ஜீஸஸ் அனுப்பிய பந்தை பிலிப் குட்டின்ஹோ அற்புதமாக கோலடித்தார். அடுத்த சிறிது நேரத்திலேயே டக்ளஸ் கோஸ்டா கடத்தி தந்த பந்தை நட்சத்திர வீரர் நெய்மர் கோலாக்கினார். 
அணி வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் பிரேஸில் தலைமை பயிற்சியாளர் டைட் மைதானத்தின் உள்ளே ஓடிச் சென்ற போது கீழே விழுந்த நிலையிலும் வெற்றியைக் கொண்டாடினார்.
இந்த வெற்றி மூலம் குரூப் ஈ பிரிவில் 4 புள்ளிகளுடன் பிரேஸில் முதலிடத்திலும், 3 புள்ளிகளுடன் செர்பியா இரண்டாம் இடத்திலும் உள்ளன.
நெய்மர் ஆனந்தக் கண்ணீர்
கோஸ்டா ரிகாவுக்கு எதிரான ஆட்டத்தில் பிரேஸில் 2-0 என வெற்றி பெற்றதால், அதன் நட்சத்திர வீரர் நெய்மருக்கு ஆனந்த கண்ணீர் ஏற்பட்டது.
சுவிட்சர்லாந்து அணியுடன் முதல் ஆட்டத்தில் நெய்மர் ஆட்டம் சோபிக்கவில்லை. இதனால் பல்வேறு தரப்பில் விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் கோஸ்டா ரிகாவுடன் நடந்த ஆட்டத்தில் நெய்மர் சிறப்பாக விளையாடி முதல் கோலை அடித்தார். இதில் வெற்றி பெற்றதை அடுத்து பிரேஸில் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு உள்ளது. 
நெய்மர் ஆனந்தக் கண்ணீர் விட்டு இதை எதிரொலித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com