செர்பியாவை வென்றது ஸ்விட்சர்லாந்து

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் "இ' பிரிவு ஆட்டம் ஒன்றில் ஸ்விட்சர்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தியது.
செர்பியாவை வென்றது ஸ்விட்சர்லாந்து

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் "இ' பிரிவு ஆட்டம் ஒன்றில் ஸ்விட்சர்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தியது.
 இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்து சார்பில் கிரானிட் ஜகா, ஜெர்டான் ஷாகிரி தலா ஒரு கோல் அடிக்க, செர்பிய தரப்பில் அலெக்ஸாண்டர் மிட்ரோவிச் கோல் அடித்தார்.
 விறுவிறுப்பாகத் தொடங்கிய ஆட்டத்தில் 5-ஆம் நிமிடமே அதிரடியாக கோலடித்தது செர்பியா. அந்த அணியின் டுசான் டேடிச் கார்னரில் இருந்து பந்தை அடிக்க, அதை மிகத் துல்லியமாக தலையால் முட்டி கோலாக்கினார் அலெக்ஸாண்டர் மிட்ரோவிச்.
 தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்தின் கோல் முயற்சிகள் தடுக்கப்பட்டதால், முதல் பாதி நிறைவில் செர்பியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. பின்னர் தொடங்கிய ஆட்டத்தில் இரு அணிகளின் கைகளும் ஓங்கியே இருந்ததால் எந்த அணிக்கும் கோல் வாய்ப்பு கிடைக்கவில்லை.
 நெருக்கடியுடன் ஆடிவந்த ஸ்விட்சர்லாந்துக்கு 52-ஆவது நிமிடத்தில் கோல் வாய்ப்பு கிடைத்தது. அந்த அணியின் ஜெர்டான் ஷாகிரி கோல் போஸ்ட்டை நோக்கி அடித்த பந்து எதிரணி வீரரின் மீது பட்டுத் திரும்பியது. தூரத்திலிருந்து ஓடிவந்த சக வீரர் கிரானிட் ஜகா, சரியான இடைவெளி பார்த்து நேராக பந்தை கோல் போஸ்ட்டுக்குள் அனுப்பினார். இதனால், ஆட்டம் சமன் ஆனது.
 இவ்வாறாக தொடர்ந்த ஆட்டம் டிரா ஆகுமோ என்று எதிர்பார்த்த நேரத்தில் ஸ்விட்சர்லாந்துக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தினார் ஜெர்டான் ஷாகிரி. ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் மைதானத்தின் நடுப் பகுதியில் சக வீரர் பாஸ் செய்த பந்தை தனியொரு நபராக கடத்திச் சென்று அவர் திறம்பட கோலடித்தார். இறுதியில் ஸ்விட்சர்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
 இந்த வெற்றியின் மூலமாக "இ' பிரிவில் பிரேஸிலுக்கு அடுத்தபடியாக ஸ்விட்சர்லாந்து 2-ஆவது இடத்துக்கு வந்துள்ளது.
 ஜகா, ஜெர்டானின் பதிலடி
 ஸ்விட்சர்லாந்து வீரர்களான கிரானிட் ஜகா, ஜெர்டான் ஷாகிரி ஆகிய இருவரின் குடும்பமும் கொசாவாவைச் சேர்ந்த அல்பேனியாவை பூர்வீகமாகக் கொண்டதாகும். கொசாவா முன்பு செர்பிய மாகாணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
 இதன் காரணமாக இந்த ஆட்டத்தில் ஜகா, ஜெர்டானுக்கு எதிராக செர்பிய ரசிகர்கள் தொடக்கம் முதலே கோஷமிட்டு வந்தனர். அதற்கு அவர்கள் இருவரும் தங்களது கோலால் பதிலடி கொடுத்தனர். கோலடித்த பிறகு இருவருமே, அல்பேனிய தேசியக் கொடியிலிருக்கும் இரட்டைக் கழுகு சின்னத்தை குறிப்பிடும் வகையில் ரசிகர்களை நோக்கி கைகளை வைத்துக் கொண்டாடினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com