டுனீசியாவை பந்தாடியது பெல்ஜியம்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் "ஜி' பிரிவு ஆட்டத்தில் பெல்ஜியம் 5-2 என்ற கோல் கணக்கில் டுனீசியாவை வெற்றி கண்டது.
டுனீசியாவை பந்தாடியது பெல்ஜியம்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் "ஜி' பிரிவு ஆட்டத்தில் பெல்ஜியம் 5-2 என்ற கோல் கணக்கில் டுனீசியாவை வெற்றி கண்டது. இந்த வெற்றியின் மூலமாக நாக் அவுட் சுற்றை ஏறத்தாழ நெருங்கி விட்டது பெல்ஜியம்.
பெல்ஜியத்தின் சார்பில் ஈடன் ஹஸார்டு, ரோமெலு லுகாகு ஆகியோர் தலா 2 கோல்களும், மிஷி பட்ஷுவாயி ஒரு கோலும் அடிக்க, டுனீசியாவின் தரப்பில் டைலன் பிரான், வாபி கஸ்ரி தலா ஒரு கோல் அடித்தனர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெல்ஜியம் அணி ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. ஆக்ரோஷ ஆட்டத்தின் பலனாக 6-ஆவது நிமிடத்தில் அந்த அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை அருமையாக கோலாக்கினார் ஈடன் ஹஸார்டு. ஆட்டத்தின் 16-ஆவது நிமிடத்தில் பெல்ஜிய வீரர் ரோமெலு லுகாகு, அணியின் சக வீரர்கள் உதவியோடு ஃபீல்டு கோல் ஒன்றை அடித்தார்.
இதனால் பெல்ஜியம் 2-0 என முன்னிலை பெற்றது. அதற்கு பதிலடியாக டுனீசியா 18-ஆவது நிமிடத்தில் தனது கோல் கணக்கை தொடங்கியது. அந்த அணிக்கு கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பை வாபி கஸ்ரி முன்னெடுக்க, அதை தலையால் முட்டி கோலாக மாற்றினார் டைலன் பிரான். இதையடுத்து இரு அணிகளுமே ஆக்ரோஷமாக ஆட, கூடுதல் நேரத்தில் பெல்ஜியத்தின் ரோமெலு லுகாகு மீண்டும் ஒரு கோலடித்தார்.
இதனால் முதல் பாதியின் முடிவில் பெல்ஜியம் 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. இந்த முதல் பாதியில் டுனீசிய வீரர்கள் இருவர் காயம் காரணமாக வெளியேற்றப்பட்டு, மாற்று வீரர்கள் களமிறக்கப்பட்டனர்.
2-ஆவது பாதியில் 51-ஆவது நிமிடத்தில் ஈடன் ஹஸார்டு ஒரு ஃபீல்டு கோல் அடிக்க, பெல்ஜியம் 4-1 என்ற நிலையில் முன்னேறியது. ஆட்டத்தின் 90-ஆவது நிமிடத்தில் அந்த அணியின் மிஷி பட்ஷுவாயி தனது அணியின் 5-ஆவது கோலை அடித்தார்.
கூடுதல் நேரத்தில் டுனீசியாவின் வாபி கஸ்ரி தனது அணிக்கான 2-ஆவது கோல் அடிக்க இறுதியில் பெல்ஜியம் 5-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

* உலகக் கோப்பை வரலாற்றில் ஓர் அணி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெறுவது இது 9-ஆவது முறையாகும். முதல் முறையாக 1934-ஆம் ஆண்டு ஜெர்மனி 5-2 என பெல்ஜியத்தை வீழ்த்தியிருந்த நிலையில், கடைசியாக 2014-ஆம் ஆண்டு பிரான்ஸ் 5-2 என ஸ்விட்சர்லாந்தை வென்றிருந்தது.
* இந்தத் தோல்வியோடு சேர்த்து, உலகக் கோப்பை போட்டிகளில் டுனீசியா 13 ஆட்டங்களில் தோற்றுள்ளது.
* உலகக் கோப்பை போட்டியின் குரூப் சுற்றுகளில், பெல்ஜியத்துக்கு இது 11-ஆவது வெற்றி.
* உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பெல்ஜியம் அணி 5 கோல்கள் அடித்து வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும்.

இங்கிலாந்து-பனாமா
"ஜி' பிரிவில் இங்கிலாந்து-பனாமா அணிகள் மோதும் ஆட்டம் நிஸ்னி நோவ்கோரோட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் இங்கிலாந்து தனது முதல் ஆட்டத்தில் டுனீசியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றுள்ளது. மாறாக பனாமா, தனது முதல் ஆட்டத்தில் பெல்ஜியத்திடம் 0-3 என்ற கணக்கில் வீழ்ந்துள்ளது.
இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வெல்லும் பட்சத்தில் நாக் அவுட் சுற்று வாய்ப்பை அந்த அணி உறுதி செய்யும். உலகக் கோப்பை போட்டியில் முதல் முறையாக பங்கேற்கும் பனாமாவை வீழ்த்துவது, இங்கிலாந்துக்கு கடினமாக இருக்காது எனத் தெரிகிறது.

ஜப்பான்-செனெகல்
"ஹெச்' பிரிவில் ஜப்பான்-செனெகல் இடையேயான ஆட்டம் எகாடெரின்பர்க் அரினாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த இரு அணிகளுமே தங்களது முதல் ஆட்டத்தில் வெற்றியை பதிவு செய்து பலம் வாய்ந்த அணிகளாக உள்ளன. 2-ஆவது வெற்றி நாக் அவுட் சுற்று வாய்ப்பை உறுதி செய்யும் என்பதால், இரு அணிகளிடமும் ஆக்ரோஷம் இருக்கும்.
ஜப்பான் தனது முதல் ஆட்டத்தில் கொலம்பியாவை 2-1 என்ற கோல் கணக்கிலும், செனெகல் தனது முதல் ஆட்டத்தில் போலாந்தை 2-1 என்ற கோல் கணக்கிலும் வென்றுள்ளன. 

போலந்து-கொலம்பியா
"ஹெச்' பிரிவின் மற்றொரு ஆட்டத்தில் போலந்து-கொலம்பியா அணிகள் கஸாம் அரினா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன. இந்த இரு அணிகளுமே தங்களது முதல் ஆட்டத்தில் தோல்வியைத் தழுவியுள்ளன. போலந்து 1-2 என செனெகலிடமும், கொலம்பியா 1-2 என ஜப்பானிடமும் வீழ்ந்துள்ளன.
எனவே, முதல் வெற்றியை பதிக்கும் முனைப்பில் இந்த இரு அணிகளுமே மோதும். கொலம்பிய அணியைப் பொருத்த வரையில் ரடாமெல் ஃபால்கோவ் முக்கிய முன்கள வீரர் ஆவார். 2014 உலகக் கோப்பையில் ஆடும் வாய்ப்பை இழந்த அவர், இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்துவார் என எதிர்பார்க்கலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com