விராட் கோலி, அனுஷ்கா சர்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய மும்பை நபர்!

இச்சம்பவத்தை முன்வைத்துத் தன்னைச் சமூகவலைத்தளங்களில் அவமானப்படுத்தியதற்காக கோலிக்கும் அனுஷ்கா சர்மாவுக்கு நோட்டீஸ்..
விராட் கோலி, அனுஷ்கா சர்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய மும்பை நபர்!

சாலைகளில் குப்பை வீசுபவர்களை அனைவரும் கண்டிக்க வேண்டும் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்து அப்படிக் குப்பை போட்டவரை அவருடைய மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா கண்டிக்கும் சம்பவத்தை விடியோ எடுத்து தன்னுடைய சமூகவலைத்தளங்களில் சில நாள்களுக்கு முன்பு வெளியிட்டார். அப்போது கோலி கூறியதாவது:

சாலையில் மக்கள் குப்பை வீசுவதைக் கண்டேன். அவர்களை நன்குக் கண்டித்தேன். விலை உயர்ந்த காரில் சென்றாலும் மூளை வேலை செய்வதில்லை. இவர்கள் நம் நாட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்வார்களா? இதுபோல நடப்பதைக் கண்டால் நீங்களும் அவர்களைக் கண்டியுங்கள். இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என்றார். 

விராட் கோலியின் இந்த ட்வீட்டைக் கிண்டலடித்தும் விமரிசனம் செய்தும் சிலர் ட்வீட் செய்தார்கள். சம்பந்தப்பட்ட நபர்களின் முகத்தை மறைத்திருக்க வேண்டும், சரியான ஆதாரங்களுடன் விடியோ வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்றெல்லாம் கோலியின் ட்வீட்களுக்கு விமரிசனங்கள் எழுந்தன. 

உடனடியாக அடுத்த ட்வீட்டில் தன் கவலையைப் பகிர்ந்துகொண்டார் கோலி. அதில் அவர் கூறியதாவது:

தைரியமாக இதுபோல செய்யத் துணிவு இல்லாதவர்கள், கிண்டலாகப் பார்க்கிறார்கள். இன்றைக்கு எல்லாமே மீம் ஆக மாற்றப்படுகிறது. அவமானம் என்றார். 

விடியோவில் அனுஷ்கா சர்மா கண்டித்த நபர், மும்பையைச் சேர்ந்த அர்ஹான் சிங் என்பது பிறகு தெரியவந்தது. இதையடுத்து அர்ஹான் சிங் சமூகவலைத்தளத்தில் தெரிவித்ததாவது: கார் ஓட்டும்போது, சிறிய அளவிலான குப்பையை வீசியதற்கு வருந்துகிறேன். ஆனால் இச்செயலை அனுஷ்கா சர்மா மரியாதையுடன் தெரிவித்திருக்க வேண்டும். அவருடைய வாயிலிருந்து வந்த குப்பையை விடவும் நான் குறைந்த அளவிலான குப்பையையே வீசினேன். அதை விடியோ எடுத்து சமூகவலைத்தளத்தில் ஏதோ ஒருவிதமான லாபத்துக்கு கோலி வெளியிட்டது இன்னும் கேவலம். இது கேவலமான குப்பை என்று எழுதியிருந்தார். 

இந்நிலையில் இச்சம்பவத்தை முன்வைத்துத் தன்னைச் சமூகவலைத்தளங்களில் அவமானப்படுத்தியதற்காக கோலிக்கும் அனுஷ்கா சர்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் அர்ஹான் சிங். இதுகுறித்து கருத்து கருத்து தெரிவித்த அனுஷ்கா சர்மாவின் செய்தித் தொடர்பாளர், எங்கள் சட்ட நிபுணர் குழு இதை ஆராய்ந்து வருவதாகக் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com