உலகக் கோப்பை ஆட்டங்களின் முடிவுகளை நிர்ணயிக்கும் விடியோ உதவி நடுவர் முறை

உலகக் கோப்பை கால்பந்து 2018-இல் பல்வேறு ஆட்டங்களின் முடிவுகளை விடியோ உதவி நடுவர் முறை எனப்படும் (வார்) தொழில்நுட்பம் நிர்ணயித்து வருகிறது.
உலகக் கோப்பை ஆட்டங்களின் முடிவுகளை நிர்ணயிக்கும் விடியோ உதவி நடுவர் முறை

உலகக் கோப்பை கால்பந்து 2018-இல் பல்வேறு ஆட்டங்களின் முடிவுகளை விடியோ உதவி நடுவர் முறை எனப்படும் (வார்) தொழில்நுட்பம் நிர்ணயித்து வருகிறது.
 தகவல் தொழில்நுட்பத்தின் பலன்கள் பல்வேறு துறைகளை சென்றடைந்துள்ளன. அதே நேரத்தில் விளையாட்டுத் துறையிலும் தொழில்நுட்ப வளர்ச்சி பெரும் மாறுதலை உருவாக்கி உள்ளது.
 கால்பந்திலும் நவீன தொழில்நுட்பம்: இதற்கிடையே உலகக் கோப்பை கால்பந்து போன்ற பெரிய போட்டிகளில் நடுவர்களின் முடிவுகள் சில நேரங்களில் பெரிய சர்ச்சைகளுக்கு வழிவகுத்து விடுகின்றன. மேலும் முடிவுகளும் துல்லியமாக கணிக்க முடியாத நிலை உருவாகி உள்ளது.
 எடுத்துக்காட்டாக கடந்த 1986-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து-ஆர்ஜென்டீனா இடையே நடந்த காலிறுதி ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்றிருந்தது. அப்போது ஆர்ஜென்டீனா கேப்டன் மாரடோனா இங்கிலாந்து வீரர்களை மீறிச் சென்று கோலடிக்கும் முயற்சியில் கையால் பந்தை தள்ளி விட்டார்.
 அப்போது அதை நடுவர் சரிவர கவனிக்கவில்லை. பின்னர் மேலும் ஒரு கோலடித்து ஆர்ஜென்டீனா வென்று இறுதியில் சாம்பியன் பட்டம் வென்றது.
 இந்த சர்ச்சையான கோல் குறித்து பின்னர் தான் தெரியவந்தது. அப்போது மாரடோனா அதை கடவுளின் கை (ஹேண்ட் ஆஃப் காட்) என வர்ணித்தார். இந்த சம்பவம் கறைபடிந்த சம்பவமாக கருதப்பட்டது. அதே போல் பல்வேறு ஆட்டங்களில் துல்லியமான முடிவுகள் அறிவிக்கப்படாத நிலை ஏற்பட்டது.
 வார் தொழில்நுட்பம்: இதற்கிடையே இங்கிலாந்து பிரீமியர் லீக், ஜெர்மனி, இத்தாலி லீக் போட்டிகளில் வார் எனப்படும் விடியோ உதவி நடுவர் தொழில்நுட்பம் பின்பற்றப்படுகிறது. ஆடுகளத்தில் இருக்கும் நடுவருக்கு உதவியாக மைதானத்தின் வேறு ஒரு பகுதியில் விடியோ மூலம் போட்டி காட்சிகளை பார்த்து முடிவுகளை எடுக்க பிரதான நடுவருக்கு உதவுவதே விடியோ உதவி நடுவர் முறையாகும். கடந்த மார்ச் மாதம் ஜூரிச்சில் நடந்த பிஃபா கூட்டத்திலும் வார் தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஒப்புதல் தரப்பட்டது.
 கோல்கள், பெனால்டி கிக் வாய்ப்புகள், வன்முறை மற்றும் மிகவும் மோசமான வகையில் எதிரணி வீரர்களை கையாளும் வீரருக்கு நேரடி சிவப்பு அட்டை வழங்குவதல், தவறாக வீரரை அனுப்புதல் போன்றவை குறித்து வார் மூலம் முடிவெடுக்கப்படுகிறது. வார் உதவியுடன் நடுவர் எடுக்கும் முடிவே இறுதியானதாகும்.
 விடியோ நடுவர்கள் மைதானத்தில் எங்கோ ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு பல்வேறு கேமராக்கள் மூலம் பெறப்படும் காட்சிகளை கண்டு வயர்லஸ் மைக் மூலம் நடுவருக்கு தகவல் தெரிவித்து தவறு நேரிடாமல் தடுப்பர். நடுவருக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், மைதானத்தின் பக்தத்தில் இருக்கும் திரையில் காட்சியையும் பார்த்து தெளிவு பெறலாம். வார் முறையில் எடுக்கப்படும் முடிவுகள் சரியானவையாக இருப்பதால் இந்த உலகக்கோப்பையிலும் பயன்படுத்தப்பட்டன.
 குறிப்பாக போர்ச்சுகல் ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் டீகோ கோஸ்டாவின் முதல் கோல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பிரான்ஸýக்கு வழங்கப்பட்ட பெனால்டி, தென்கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்வீடனுக்கு வழங்கப்பட்ட பெனால்டி கிக் வாய்ப்புகள் போன்றவை வார் தொழில்நுட்ப அடிப்படையில் எடுக்கப்பட்டது. இதனால் ஆட்டத்தின் போக்கும் மாறியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 -பா.சுஜித்குமார்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com