'அணி திரளுங்கள்'- கொல்கத்தா வீரர்களுக்கு கேப்டன் கார்த்திக் அழைப்பு 

ஒவ்வொரு வீரருக்கும் இடையிலான புரிதலை ஏற்படுத்துவதுதான் ஒரு அணிக்கான கட்டமைப்பின் முதல்படி. இந்த பயணம் 3 ஆண்டுகளுக்கு நீடிக்கக்கூடியது. இதில் அனைத்து விதமான சூழலிலும் அனைவரும் ஒன்றாக நின்று போராட.....
'அணி திரளுங்கள்'- கொல்கத்தா வீரர்களுக்கு கேப்டன் கார்த்திக் அழைப்பு 

ஐபிஎல்-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் துணை கேப்டனாக ராபின் உத்தப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் தினேஷ் கார்த்திக்கை 7.4 கோடிக்கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்தது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக வீரர் அஸ்வின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடும் சவால் அளிக்கும் விதமாக விளையாடியுள்ளது. குறிப்பாக கௌதம் கம்பீர்
தலைமையில் அந்த அணி 2 முறை சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், இம்முறை நடைபெற்ற ஏலத்தில் கொல்கத்தா அணி கம்பீரை தேர்வு செய்யவில்லை. இதனிடையே அந்த அணியால் ஏலம் எடுக்கப்பட்ட தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கேப்டனாக ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் ஏற்கனவே கேப்டனாக பணியாற்றிய அனுபவம் தினேஷ் கார்த்திக்கிடம் உள்ளது. அவர் இதுவரை கேப்டனாக செயல்பட்டுள்ள 18 போட்டிகளில் 13 வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளார். வெற்றி சராசரி 72.20 ஆகும்.

கொல்கத்தா அணி கேப்டனாக பதவியேற்றப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கேப்டன் தினேஷ் கார்த்திக் பேசியதாவது:

எனது முதல்கட்ட பணி கொல்கத்தா அணியை ஒன்று திரட்டுவதுதான். ஏனெனில் இது 50 நாட்கள் வரை ஒரு காலகட்டத்தில் நடைபெறும் தொடர். எனவே இதில் ஒரு அணியாக விளையாட வேண்டியது மிக அவசியம். அதிலும் குறிப்பாக ஒரு குடும்பமாக இருக்க வேண்டும். அப்போதுதான் ஒன்றாக நின்று போராட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அதனை சாதித்துக் காட்ட முடியும்.

ஒவ்வொரு வீரருக்கும் இடையிலான புரிதலை ஏற்படுத்துவதுதான் ஒரு அணிக்கான கட்டமைப்பின் முதல்படி. இந்த பயணம் 3 ஆண்டுகளுக்கு நீடிக்கக்கூடியது. இதில் அனைத்து விதமான சூழலிலும் அனைவரும் ஒன்றாக நின்று போராட வேண்டும். ஒவ்வொரு வீரரின் திறமையை வெளிப்படுத்த இது மிகவும் அவசியம். அடுத்து நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் களமிறங்கி எங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியதுதான் எங்கள் முதல் இலக்கு.  

ஏலத்தின் போது ஒரு அணியை மட்டுமே தேர்வு செய்தார்கள். கொல்கத்தாவுக்கு என ஒரு தனித்தன்மையும், பாரம்பரியமும் உள்ளது. இந்த அணியை வழிநடத்தக்கூடிய நிலையில் பலர் இருந்தாலும், அதை சரியாக வழிநடத்துபவரை தேர்வு செய்வதில் அவர்கள் கவனமாக இருந்தனர். அதற்கு நான் சரிபட்டு வருவேனா என்பதை ஆராய்ந்த பின்னரே இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வயதில் உள்ள அனுபவத்தைக் கொண்டு ஒரு வீரனாகவும், சிறந்த தலைவனாகவும் என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கையை அவர்கள் என்மீது வைத்துள்ளனர். அதனால் தான் என்னைத் தேர்வு செய்தனர்.

களத்தில் ஆக்ரோஷமாக செயல்படும் கேப்டனாக நான் இருக்க மாட்டேன். எனது இயல்பு வேறுமாதிரியானது. போட்டியின் போது எதிர் அணி வீரர்களுடன் பேசுவதை கூட விரும்பமாட்டேன். இக்கட்டான சூழலில் அளிக்கப்பட்ட சவாலை திறம்பட எதிர்கொள்ளவதில் எனது முழு கவனத்தையும் செலுத்துவேன். இதுதான் என்னுடைய கேப்டன்ஷிப் பாணி. அதற்காக எனது அணி வீரர்கள் களத்தில் ஆக்ரோஷமாக செயல்பட்டால் அதை நான் தடுக்க மாட்டேன். அதேசமயம் அதை பெரிதுபடுத்தவும் மாட்டேன். 

ஜாக்குவஸ் கலீஸ், ஹீத் ஸ்ட்ரீக் போன்ற ஜாம்பவான்கள் பயிற்சியாளர்களாக இருப்பதால் கமலேஷ் நாகர்கோட்டி, ஷிவம் மாவி போன்றவர்கள் நிறைய கற்றுக்கொள்ள முடியும். அவர்கள் இந்த வாய்ப்பை நிச்சயம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 

மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளர்கள் எந்தவொரு அணிக்கும் நிச்சயம் தேவை. அவர்களால் எளிதாக விக்கெட் வீழ்த்த முடியும். அவ்வகையில் சுனில் நரேன், பியூஷ் சாவ்லா, குல்தீப் யாதவ் போன்றோர் இடம்பிடித்துள்ளதில் எனக்கு மகிழ்ச்சி. அவர்களை எவ்வாறு பயன்படுத்தப்போகிறேன் என்பதை போட்டியின் போது தெரிந்துகொள்ளுங்கள். இவர்கள் எங்கள் அணியில் இருப்பது மற்ற அணிகளுக்கு சற்று பொறாமையாகக் கூட இருக்கலாம் என்று நகைச்சுவையுடன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com