தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா வீரர்கள் இடையே ஓய்வு அறையில் லடாய்

முதல் டெஸ்ட் போட்டியின் 4-ஆம் நாள் தேநீர் இடைவேளையில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், வீரர்கள் ஓய்வு அறையில்...
தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா வீரர்கள் இடையே ஓய்வு அறையில் லடாய்

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. மிட்செல் ஸ்டார்க் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

பரபரப்புக்கு பஞ்சமில்லாத இப்போட்டியில் இரு அணி வீரர்களும் முட்டிக்கொண்டனர். குறிப்பாக ஆஸ்திரேலிய துவக்க வீரர் டேவிட் வார்னர் மற்றும் சுழற்பந்துவீச்சாளர் லயன் நடந்துகொண்டது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

களத்தில் தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸை ரன்-அவுட் செய்த பின்னர் ஆஸி. வீரர் லயன் அந்தப் பந்தை அவர் மீது படும்படி வீசிச் சென்று சக வீரர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது வார்னர், லயன் ஆகியரது பேச்சு அங்கிருந்த ஸ்டம்ப் மைக்கில் சரியாகப் பதிவாகவில்லை.

இந்நிலையில், 4-ஆம் நாள் தேநீர் இடைவேளையின் போது வீரர்களின் ஓய்வு அறையில் ஆஸி. வீரர் டேவிட் வார்னர், தென் ஆப்பிரிக்க கீப்பர் டி காக் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது குறுக்கிட்ட சக ஆஸி. வீரர்கள் ஸ்மித், கவாஜா ஆகியோர் வார்னரை சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர். இக்காட்சி அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இவ்விகாரம் முழுவதும் தற்போது சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ஐசிசி) கவனத்துக்குச் சென்றுள்ளது. இதில் வார்னர் மற்றும் லயன் ஆகியோர் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியது, எதிரணி வீரர்களை கோபப்படுத்தும் விதமான செயல்களில் ஈடுபட்டது போன்றவை நிரூபிக்கப்பட்டால் 2.1.7 விதிகளின் அடிப்படையில் கடுமையான தண்டனை வழங்கும் நிலை ஏற்படும்.

இதுபோன்று எதிரணி வீரர்களுடன் தேவையற்ற சர்ச்சைகளில் ஈடுபடுவது டேவிட் வார்னருக்கு ஒன்றும் புதிதல்ல. முன்னதாக, 2014-ல் இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற தொடரின் போது வானொலி பேட்டி ஒன்றில் அப்போதைய தென் ஆப்பிரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ், பந்தினை சேதப்படுத்தியதாகக் கூறி பொய்யான குற்றச்சாட்டை தெரிவித்ததால் டேவிட் வார்னருக்கு ஐசிசி அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com