தென் கொரிய ஹாக்கி தொடர் இந்திய மகளிர் அணிக்கு 2-ஆவது வெற்றி

மகளிர் ஹாக்கியில் தென் கொரிய அணிக்கு எதிரான 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

மகளிர் ஹாக்கியில் தென் கொரிய அணிக்கு எதிரான 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.
தென் கொரியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்திய மகளிர் ஹாக்கி அணி விளையாடி வருகிறது. அந்நாட்டின் தலைநகர் சியோல் நகரில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் அந்த அணியை 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது. இந்நிலையில், 2-ஆவது ஆட்டம் இன்சியான் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணிக்கு 6-ஆவது நிமிடத்தில் கோல் வாய்ப்பு கிடைத்தது. முதல் கோலை பூனம் ராணி பதிவு செய்தார். எனினும், தென் கொரிய அணி அடுத்த நான்காவது நிமிடத்தில் (10-ஆவது நிமிடம்) இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதல் கோலை பதிவு செய்தது. அந்த கோலை யூரிம் லீ அடித்தார். பின்னர், விவேகத்தைக் காட்டிய இந்திய வீராங்கனைகள் சிறப்பாக விளையாட, இந்திய அணியின் கேப்டன் ராணி 27-ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலைப் பதிவு செய்தார். ஒரு கோல் முன்னிலையுடன் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியவுடன் 2-ஆவது கோலை தென் கொரியா பதிவு செய்த மறுநிமிடமே இந்தியாவின் குர்ஜித் கௌர் அணியின் 3-ஆவது கோலைப் பதிவு செய்தார்.
இதையடுத்து, ஆட்ட நேரம் முடியும் வரை தென் கெரிய அணியால் கோல் எதுவும் பதிவு செய்ய இயலவில்லை. இதையடுத்து, இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு எதிராக 3-ஆவது ஆட்டம் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
இதனிடையே, மலேசியாவின் இபோ நகரில் நடைபெற்றுவரும் சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி, குரூப் பிரிவில் தனது மூன்றாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 2-4 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது.
கட்டாயமாக வெல்ல வேண்டிய சூழலில் இருந்த இந்திய அணி, இந்தத் தோல்வியின் காரணமாக இறுதிச்சுற்றுக்கு செல்ல முடியாது. ஏற்கெனவே, ஆர்ஜென்டீனா அணி உடனான முதல் ஆட்டத்தில் 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்த இந்திய அணி, இந்தத் தொடரில் 2-ஆவது தோல்வியைத் தழுவியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது ஆட்டத்தில் இந்திய அணி டிரா செய்தது.
4-ஆவது ஆட்டத்தில் மலேசியா அணியை இந்தியா புதன்கிழமை எதிர்கொள்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com