எதன் அடிப்படையில் ஏ+ ஊதிய ஒப்பந்ததில் தோனி தேர்வாகவில்லை?

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்த முறையில் புதிதாக 'ஏ+' என்ற பிரிவு உருவாக்கப்பட்டு, அதில் கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட 5 வீரர்கள்...
எதன் அடிப்படையில் ஏ+ ஊதிய ஒப்பந்ததில் தோனி தேர்வாகவில்லை?

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்த முறையில் புதிதாக 'ஏ+' என்ற பிரிவு உருவாக்கப்பட்டு, அதில் கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட 5 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். எனினும், எம்.எஸ்.தோனி, ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட வீரர்கள் முன்பு இருந்த 'ஏ' பிரிவிலேயே தொடருகின்றனர். இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, புதிதாக அறிமுகம்
செய்யப்பட்டுள்ள 'ஏ+' ஊதிய ஒப்பந்த பிரிவில் கேப்டன் விராட் கோலி , புவனேஷ்வர் குமார், ரோஹித் சர்மா, ஜஸ்பிரீத் பும்ரா, ஷிகர் தவன் ஆகிய 5 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூ.7 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக 'ஏ' பிரிவு ஊதிய ஒப்பந்தத்தில் தேர்வாகியுள்ள தோனி உள்ளிட்ட 7 பேருக்கு, ஆண்டு ஊதியமாக ரூ.5 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 'பி' பிரிவு ஒப்பந்தத்தில் லோகேஷ் ராகுல், யுவேந்திர சாஹல் உள்ளிட்ட 7 பேரும், 'சி' பிரிவு ஊதியத்தில் சுரேஷ் ரெய்னா, கருண் நாயர் உள்ளிட்ட 7 பேரும் இணைந்துள்ளனர். இதில் 'பி' பிரிவு வீரர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூ.3 கோடியும், 'சி' பிரிவு வீரர்களுக்கு ஊதியமாக ரூ.1 கோடியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்த ஒப்பந்தமானது 2017 அக்டோபர் முதல் 2018 செப்டம்பர் வரையிலான காலகட்டத்துக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே, மூத்த வீரர் யுவராஜ் சிங், குடும்ப வன்முறை புகாரில் சிக்கியுள்ள முகமது ஷமி, இளம் வீரர் ரிஷப் பந்த் ஆகியோர் ஊதிய ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை.

பிசிசிஐ நிர்வாகக் குழுத் தலைவர் வினோத் ராய் இதுகுறித்து கூறியதாவது: ஏ+ பிரிவு தொடர்பான யோசனையை கோலியும் தோனியும் வழங்கினார்கள். மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடும் வீரர்கள், தரவரிசையில் டாப் 10-ல் இருக்கும் வீரர்கள் ஆகியோர் மட்டுமே ஏ+ பிரிவில் இடம்பெற வேண்டும் என்பது யோசனையாக வழங்கப்பட்டது. திறமையைச் சிறப்பாக வெளிப்படுத்தும் வீரர்கள் அதற்குரிய பலனை அடைவார்கள். இது நிரந்தரமல்ல. நீங்கள் சரியாக விளையாடாவிட்டால் கீழே இறக்கப்படுவீர்கள். நிர்வாக கமிட்டியோ பிசிசிஐ நிர்வாகமோ இதுகுறித்த முடிவை எடுக்கவில்லை. எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு இந்த முடிவை எடுத்தார்கள். டெஸ்ட் வீரர்களும் தரவரிசையில் டாப் 15-ல் இடம்பெற்றுள்ள வீரர்களும் கிரேட் ஏ-வில் இடம்பெறவேண்டும் என்றார்கள். 

பி.,சி பிரிவுகளில் உள்ள வீரர்கள் ஒருநாள் போட்டிகளில் விளையாடியதைக் கொண்டு தேர்வு செய்யப்பட்டார்கள். நடு நிலைமையில் உள்ள வீரர்கள், குறிப்பாக டெஸ்ட் வீரர்களுக்கு நல்ல சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று மூத்த வீரர்களும் ரவி சாஸ்திரியும் யோசனை வழங்கினார்கள். பெரிய நிறுவனங்களில் தலைமைச் செயல் அதிகாரி தனக்கு அடுத்த நிலையில் உள்ளவரை விடவும் 5 மடங்கு அதிகமாகச் சம்பளம் வாங்குவார். அதுபோல இந்த ஒப்பந்தத்தில் மேலே உள்ள வீரர்களுக்கு ரூ. 7 கோடி சம்பளம் கிடைக்கிறது. அடுத்த வரிசைகளில் ரூ. 5 கோடி, ரூ. 3 கோடி, ரூ. 1 கோடி என
உள்ளது என்று பேட்டியளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com