தொடரும் ஆன்லைன் மிரட்டல்கள்: மம்தா பானர்ஜியின் ஆதரவைக் கோருகிறார் ஷமி மனைவி!

முதல்வரைச் சந்திக்க அனுமதி கிடைத்து, தன் குறைகளைச் சொல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால்...
தொடரும் ஆன்லைன் மிரட்டல்கள்: மம்தா பானர்ஜியின் ஆதரவைக் கோருகிறார் ஷமி மனைவி!

சமூகவலைத்தளங்கள் வழியாக ஏராளமான மிரட்டல்கள் வருவதால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வீரர் ஷமியின் மனைவி ஹாசின் ஜஹான் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரபல கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் மனைவி ஹாசின் ஜஹான் அளித்த புகாரின் பேரில், கொல்கத்தா காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. ஷமி மீது கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கொல்கத்தா நகர காவல் துறை இணை ஆணையர் பிரவீண் திரிபாதி வெள்ளிக்கிழமை கூறியதாவது: முகமது ஷமியின் மனைவி ஹாசின் ஜஹான் அளித்த புகாரின் பேரில், ஷமி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 4 பேர் மீது ஜாதவ்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 5 பேர் மீதும், கொலை முயற்சி, குடும்ப வன்முறை, வன்புணர்ச்சி ஆகிய பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, அந்த 5 பேர் மீதும் பிணையில் வெளிவர இயலும் இரண்டு பிரிவுகளின்படியும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார் அவர். எனினும், தம் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்று முகமது ஷமி தனது முகநூல் மற்றும் சுட்டுரைப் பக்கங்களில் மறுப்பு தெரிவித்து வருகிறார். தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் இதுபோன்ற சதித் திட்டம் தீட்டப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, முகமது ஷமிக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு உள்ளது என்று ஹாசின் ஜஹான் சில தினங்களுக்கு முன் குற்றம் சாட்டினார். அதைத் தொடர்ந்து, தன்னிடம் ஷமியின் அண்ணன் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டினார். ஷமி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக அடுக்கடுக்கான புகார்கள் குவிவதால், போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

ஹாசின் ஜஹான் ஒரு பேட்டியில் கூறியதாவது: பாகிஸ்தான் பெண்ணான அலிஸ்பா என்பவரிடமிருந்து துபாயில் பணம் பெற்றுக்கொண்டார். இங்கிலாந்தைச் சேர்ந்த முகமது பாய் என்பவர் சொன்னதன் பேரில் அந்தப் பணத்தை வாங்கினார். இதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. பிசிசிஐயிடமிருந்து சம்பளம் பெறும் ஷமி எதற்காக முகமது பாயிடமிருந்து பணம் பெறவேண்டும்? தென் ஆப்பிரிக்கத் தொடருக்குப் பிறகு என்னைக் கழற்றிவிடவேண்டும் என்று எண்ணினார். அதனால் சொத்து மற்றும் இதர ஆவணங்களை எடுத்துக்கொண்டு சென்றார். 

தென் ஆப்பிரிக்கச் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ஷமி பயணம் செய்த விவரங்கள் குறித்து பிசிசிஐயிடம் தகவல் கோரியுள்ளது கொல்கத்தா காவல்துறை. தென் ஆப்பிரிக்கச் சுற்றுப்பயணம் முடிந்தபிறகு ஷமி அணியுடன் பயணம் செய்தாரா என்கிற தகவலையும் அவர் பயணத் திட்டங்கள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஷமி மீது புகார் அளித்துள்ளதால் தனக்குச் சமூகவலைத்தளங்கள் வழியாக ஏராளமான மிரட்டல்கள் வருவதாகக் கூறியுள்ளார் ஹாசின். இதுதவிர, இந்த விஷயத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். இதுகுறித்து ஹாசினின் வழக்கறிஞர் ஜாகிர் ஹுசைன் கூறியதாவது:

ஹாசின் ஜஹான் வெளியே செல்லவே பயப்படுகிறார். ஏனெனில் அவருக்குச் சமூகவலைத்தளங்கள் வழியாக ஏராளமான மிரட்டல்கள் வருகின்றன. பலர் அவரை விமரிசனம் செய்து மோசமாகவும் எழுதுகிறார்கள். இதனால் செவ்வாய் அன்று கொல்கத்தா காவல்துறை தலைமை அலுவலகத்துக்குச் சென்று பாதுகாப்பு கோரியுள்ளார். வெளியே செல்ல அச்சமாக உள்ளதால் தனக்குத் தனிப்பட்டமுறையில் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று மனு கொடுத்துள்ளார். 

மேலும் மேற்கு வங்க முதல்வர் தனக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். வலிமை வாய்ந்த முதலமைச்சராக உள்ளதால் அவர் மீது ஹாசினுக்கு மிகுந்த மரியாதை உண்டு. முதல்வரைச் சந்திக்க அனுமதி கிடைத்து, தன் குறைகளைச் சொல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் தான் மிகவும் மகிழ்ச்சியடைவேன் என்றும் கூறியுள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளில் ஹாசின் திருப்தியாக உள்ளார் என ஜாகிர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com