இந்திய அணியில் வீரத் தமிழ்மகன்கள்!

தமிழகத்தில் இருந்து இந்திய கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுவது
இந்திய அணியில் வீரத் தமிழ்மகன்கள்!

தமிழகத்தில் இருந்து இந்திய கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுவது அரிதிலும் அரிதான நிகழ்வுகளில் ஒன்றாக இருந்து வந்தது. தமிழக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டாலும் அணியில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பதும் சந்தேகமே.

ஒரு காலத்தில், ஸ்ரீகாந்த், வெங்கடராகவன், ராபின் சிங், சிவராமகிருஷ்ணன், பத்ரிநாத், முரளி கார்த்திக், ஹேமங் பதானி, எல்.பாலாஜி உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த சில குறிப்பிட்ட வீரர்கள் மட்டுமே இந்திய அணியில் சற்று சுடர்விட்டு பிரகாசித்தனர்.
திறமையான சில வீரர்கள் இருந்தும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமலும், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சோபிக்கத் தவறியவர்களும் உண்டு என்று கூறினால் மிகையல்ல.
காலங்களும், காட்சிகளும் மாறும் என்பது எந்தத் துறைக்கும் பொருந்தும். அதற்கு ஏற்ப இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் தற்போது காணப்படுகின்றன. இப்போதெல்லாம் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெறுவது சாதாரண காரியமல்ல. 'யோ-யோ' என்றழைக்கப்படும் கடினமான உடல்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் வீரர்களுக்கு மட்டுமே அணியில் வாய்ப்பளிக்கப்படும் என்பது நிதர்சனம்.
இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடிவரும் இந்திய அணியில், மூன்று இளம் தமிழர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. எம்.எஸ்.தோனி, விராட் கோலி ஆகிய மூத்த வீரர்களுக்கு தாற்காலிகமாக ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், ரோஹித் சர்மா தலைமையிலான இளம்படையினர் எதிரணிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
விக்கெட் கீப்பிங்கில் தோனியின் இடத்தை தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் நிரப்பியுள்ளார். முன்னணி வீரர்களில் ஒருவரான அவருடன், தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 2 இளம் வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் தமிழகத்தைச் சேர்ந்த அந்த இரண்டு வீரர்கள் ஆவர்.
முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்திய அணியில் மூன்று தமிழர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதுடன் அவர்கள் களத்திலும் இறங்கி விளையாடி வருகின்றனர்.
இந்திய அணியில் இடம்பிடித்து தமிழகத்துக்கும், தாய்நாட்டுக்கும் பெருமை சேர்த்துவரும் அந்த வீரர்களின் சிறிய அறிமுகத்தை பார்ப்போம்.

விஜய் சங்கர்
திருநெல்வேலியில் 1991-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி பிறந்தவர் விஜய் சங்கர். ஆல்-ரவுண்டரான இவருக்கு தற்போதைய முத்தரப்பு தொடர்தான் முதல் சர்வதேச டி20 தொடர். ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2014-ஆம் ஆண்டு இடம்பிடித்த இவர், கடந்த ஆண்டு ஹைதராபாத் அணிக்காக விளையாடினார்.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக கடந்த ஆண்டு நவம்பரில் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டார் விஜய் சங்கர். அணியில் இடம்பெற்றாலும் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. முதல் டி20 ஆட்டத்தில் 2 ஓவர்கள் வீச இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. எனினும், விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் விஜய். இவர் வீழ்த்திய முதல் விக்கெட் அந்நாட்டு அணியின் விக்கெட் கீப்பர் முஷ்ஃபிகர் ரஹீம். இரண்டாவதாக அந்த அணியின் கேப்டன் மஹ்முதுல்லாவை பெவிலியன் அனுப்பினார்.
இவர் கூடிய விரைவில் ஒரு நாள் கிரிக்கெட் அணியிலும் இடம்பிடித்து பல சாதனைகளை புரிவார் என்று நம்பலாம்.

வாஷிங்டன் சுந்தர்
18 வயதில் இந்திய அணியில் இடம்பிடித்து சாதனை படைத்த இளம் சிங்கம் சென்னையைப் பூர்விகமாகக் கொண்ட வாஷிங்டன் சுந்தர். கடந்த 1999-ஆம் ஆண்டு அக்டோபர் 5-ஆம் தேதி பிறந்த இவர், இந்திய அணிக்கு கிடைத்த சிறந்த ஆல்-ரவுண்டர்.
6.1 அடி உயரம் கொண்ட வாஷிங்டன் இடது கையில் பேட்டிங்கும், வலகு கையில் சுழல் பந்தும் வீசக் கூடிய திறன் கொண்டவர். 2016-ஆம் ஆண்டு தமிழக அணியில் இடம்பிடித்த இவர், கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ரைஸிங் புணே சூப்பர்ஜெயண்ட் அணியில் இடம்பிடித்தார்.
சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு உடல்நலம் சரியில்லாமல் போக அவரது இடத்துக்கு வாஷிங்டன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் 16 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை தனது சுழலில் சாய்த்து ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார் வாஷிங்டன். அந்த கணம் முதல் இந்த திறமையான இளைஞர் தேர்வுக்குழுவின் கவனத்தை ஈர்த்தார்.
கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக அடியெடுத்து வைத்தார் வாஷிங்டன். மிக இளம் வயதில் இந்திய அணியில் இடம்பிடித்த வீரர்களின் பட்டியலிலும் இவர் சேர்ந்தார்.
19 வயதுக்கு உள்பட்டோருக்கான இந்திய அணியில் பயிற்சியாளர் ராகுல் திராவிட்டிடம் பட்டைத் தீட்டப்பட்டவரான வாஷிங்டன், டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தடம் பதித்து கிரிக்கெட்டில் அரிய பல சாதனைகளைப் படைக்க வேண்டும்.

தினேஷ் கார்த்திக்
முன்னணி வீரர்களில் ஒருவர். இவர் குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் அறிந்திருக்க வாய்ப்புகள் உண்டு. 
சென்னையில் 1985-ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி பிறந்தார். நண்பர்களால் 'டிகே' (தினேஷ் கார்த்திக் என்பதன் சுருக்கம்) என்று அழைக்கப்பட்டு வருபவர். இந்திய அணியில் விக்கெட் கீப்பராக பல சாதனைகளைப் படைத்துவரும் தோனி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவதாக அறிவித்ததை அடுத்து, அவரது இடத்தை அவ்வப்போது அலங்கரித்து வருபவர் தினேஷ் கார்த்திக். அத்துடன், மிகச் சிறந்த பேட்ஸ்மேனும் ஆவார். 
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இவர் இடம்பெறவில்லை என்றாலும் சென்னை இளைஞரான இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இங்கு உள்ளது. (ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது).
தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் நடைபெற்ற அந்நாட்டு அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் ஆட்டத்தில் அவர் இந்திய அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
தற்போதைய தொடரில் விக்கெட் கீப்பர் பணியை இவர் சிறப்பாக செய்து வருகிறார். இந்தத் தொடரில் முதல் ஆட்டத்தில் இலங்கை அணியின் ரன் மிஷினாக மாறி 37 பந்துகளில் 66 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த குசல் பெரேராவை ஸ்டம்பிங் செய்து ஆட்டமிழக்கச் செய்தவர் தினேஷ் கார்த்திக். வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்திலும் 2 கேட்ச்களை பிடித்து தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2004-ஆம் ஆண்டு நவம்பர் 3-ஆம் தேதி நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த தினேஷ் கார்த்திக், அதே ஆண்டு செப்டம்பரில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் முதல் முறையாக இந்திய அணியில் இடம்பிடித்தார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2006-இல் டி20 அணியிலும் இடம்பிடித்த தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் பல சாதனைகளை தொடர்ந்து படைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com