சிஎஸ்கே அணிக்காக விளையாட வேண்டும் என்பது என் கனவு: தினேஷ் கார்த்திக்

உள்ளூர் போட்டிகளில் தமிழக அணிக்குத் தவிர வேறு எந்த அணிக்காகவும் விளையாடியதில்லை. ஆனால் ஏலத்தில்...
சிஎஸ்கே அணிக்காக விளையாட வேண்டும் என்பது என் கனவு: தினேஷ் கார்த்திக்

நிடாஹஸ் கோப்பை முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா வங்கதேசத்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் ஆனது.

இந்தியா, இலங்கை, வங்கதேச அணிகள் பங்கேற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்றது. இத்தொடரின் இறுதி ஆட்டத்துக்கு இந்தியா-வங்கதேசம் அணிகள் முன்னேறின. கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து வென்றது.

ரோஹித் சர்மா ரன்கள் குவித்தும் தோல்வியை தழுவும் நிலைக்கு சென்றது இந்திய அணி. எனினும், அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி அணியை "த்ரில்' வெற்றி பெறச்
செய்தார்.

சென்னை வந்த தினேஷ் கார்த்திக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வங்கதேசத்துக்கு எதிரான போட்டி தனிப்பட்ட முறையில் எனது மிகச்சிறந்த இன்னிங்ஸ். கடைசிப் பந்தில் சிக்சர் அடிக்க முடியும் என நம்பினேன். இந்தப் போட்டியில் தோற்றிருந்தால் கஷ்டமாக இருந்திருக்கும். ஏனெனில் லீக் போட்டிகளில் இந்திய அணி மிகச்சிறப்பாக விளையாடியது. 

6-வதாகக் களமிறங்காததில் வருத்தமாகவே இருந்தேன். ஆனால் ரோஹித் சர்மா அதற்கு விளக்கம் அளித்தார். முஸ்டாஃபிஸுர் கடைசியில் பந்துவீசுவார். விஜய் சங்கர் புதியவர் என்பதால் எதிர்கொள்வது சிரமமாக இருக்கும். எனவே அவர் பந்தை எதிர்கொள்ள உங்களால் முடியும் என்றார். அந்த விளக்கம் எனக்கும் ஏற்புடையதாக இருந்தது. 

நான், வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர், அஸ்வின், முரளி விஜய், முகுந்த் என ஆறு பேர் இந்திய அணிக்குத் தேர்வாகியிருக்கிறோம். கடந்த வருடம் தமிழக அணி சிறப்பாக விளையாடியதால் தற்போது நாங்கள் மூன்று பேரும் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளோம். இந்திய அணியில் இடம் பிடிக்க கடுமையான போட்டி இருக்கும்போது வாய்ப்புகளைப் பயன்படுத்துவது அவசியம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட வேண்டும் என்பது எனது கனவு. உள்ளூர் போட்டிகளில் தமிழக அணிக்குத் தவிர வேறு எந்த அணிக்காகவும் விளையாடியதில்லை. ஆனால் ஏலத்தில் எந்த அணியினர் நம்மைத் தேர்வு செய்வார்கள் என்பது நம் கையில் இல்லை. ஐபிஎல்-லின் அழகே ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர் இன்னொரு அணிக்கு விளையாடுவதுதான். 

முத்தரப்பு டி20 போட்டியில் வாஷிங்டன் சுந்தர் மிகச்சிறப்பாகப் பந்துவீசினார். பவர்பிளேயில் மூன்று ஓவர்கள் வீசுவது எளிதல்ல. தொடர் நாயகன் விருதுக்கு மிகவும் பொருத்தமானவர். 

வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர் ஆகிய இருவரிடமும் நான் எப்போதும் தமிழில்தான் பேசுவேன். எனவே மைதானத்திலும் அதேபோல தமிழில் பேசினேன். திடீரென அங்கு மட்டும் என்னால் அவர்களிடம் ஆங்கிலத்தில் பேசமுடியாது. மற்றபடி பேட்ஸ்மேன்களுக்கு நான் பேசுவது புரியக்கூடாது என்றெல்லாம் நினைத்துத் தமிழில் பேசவில்லை என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com