ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற்ற டேபிள் டென்னிஸ் வீரர் மீது பாலியல் வழக்கு!

ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற்ற டேபிள் டென்னிஸ் வீரர் மீது பாலியல் வழக்கு!

கடந்த மூன்று வருடத்தில் பலமுறை என்னைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்று கூறியுள்ளார்... 

இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் செளம்யஜித் கோஸ் மீது பாலியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள பராசத் பெண்கள் காவல்நிலையத்தில் 18 வயது பெண், செளம்யஜித்துக்கு எதிராகப் பாலியல் புகார் அளித்துள்ளார். இதையடுத்து செளம்யஜித் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து அந்தப் பெண் அளித்த பேட்டியில் கூறியதாவது: 2014-ல் சமூகவலைத்தளம் வழியாக எனக்கு அவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது எனக்கு 15 வயது. கடந்த மூன்று வருடங்களாக இருவரும் காதலித்து வருகிறோம். அவர் என்னைத் திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் பிறகு திருமணம் செய்ய மறுத்துவிட்டார். கடந்த மூன்று வருடத்தில் பலமுறை என்னைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்று கூறியுள்ளார். காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில், அந்தப் பெண் செளம்யஜித்தால் கர்ப்பமாகி, பிறகு அதைக் கலைத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

2012 மற்றும் 2016 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ளார் 24 வயது செளம்யஜித். 19 வயதில் தேசிய சாம்பியனாகி பிறகு அர்ஜூனா விருது பெற்றார். உலகளவிலான தரவரிசையில் 58-ம் இடத்தில் உள்ளார். காமன்வெல்த் போட்டியில் பங்குபெறவுள்ள இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார் செளம்யஜித். இந்தப் புகாரையடுத்து அவரை அணியிலிருந்து நீக்கக்கூடும் எனத் தெரிகிறது. இதுகுறித்து ஞாயிறு அன்று கூட்டம் நடத்தி முடிவெடுக்கவுள்ளது இந்திய டேபிள் டென்னிஸ் சங்கம். மார்ச் 28 அன்று இந்திய அணி கிளாஸ்கோ செல்லவுள்ளது. 

இந்தக் குற்றச்சாட்டுகளை செளம்யஜித் மறுத்துள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: கடந்த ஒருவருடமாக அந்தப் பெண் என்னிடத்தில் பணம் பெற்று வருகிறார். அவருக்கு அளித்த 1 லட்சம் ரூபாய்க்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அவருடைய உறவினர் ஒருவரின் மருத்துவச் செலவுகளுக்கும் நான் பணம் கொடுத்துள்ளேன். 2016-ல் அர்ஜூனா விருது பெற்றபிறகு அவரை நான் திருமணம் செய்துகொள்ளப் போகிற பெண்ணாகவே அனைவரிடமும் நான் அறிமுகம் செய்துள்ளேன். ஆனால் அவர் என்னைப் பணத்துக்காக மிரட்டுவதால் தற்போது மனம் மாறிவிட்டேன்.

நான் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்யவில்லை. என் டேபிஸ் டென்னிஸ் வாழ்க்கை குறித்து கேள்வி எழுப்பினார். மனரீதியாக என்னைக் கொடுமைக்கு ஆளாக்கினார். இது தொடர்ந்ததால் அவரைப் பிரிந்துவிட்டேன். அவருடன் இருந்தால் என்னால் விளையாட்டில் கவனம் செலுத்த முடியவில்லை. இந்த முடிவை என் குடும்பத்தினரிடம் தெரிவித்துவிட்டேன். என் முடிவுக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்தார்கள் என்று கூறியுள்ளார். இந்த வழக்கைச் சட்டரீதியாக எதிர்கொள்ளவிருப்பதாகவும் செளம்யஜித் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com